தேசிய விருது பெற்ற இந்தித் திரைப்படம் ‘இராடா’ பேசும் அந்த முக்கியமான விஷயம்..! | best Environment film of 2017 hits truth of Punjab's Chemical contamination ground water

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (22/04/2018)

கடைசி தொடர்பு:14:49 (22/04/2018)

தேசிய விருது பெற்ற இந்தித் திரைப்படம் ‘இராடா’ பேசும் அந்த முக்கியமான விஷயம்..!

தொடர்ந்து அதிகமான இரசாயன கழிவுகள் நிலத்தில் கலப்பதால் பஞ்சாபின் நீர் நிலைகளும் நிலத்தடி நீரும் முற்றிலுமாக நச்சாக மாறியுள்ளது. இது இன்று நேற்று நிகழ்ந்த மாற்றமில்லை. பல ஆண்டுகளாக இது நிகழ்ந்துள்ளன என்பதையும் இராடா திரைப்படத்தின் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சனையை இராடா திரைப்படம் மூலம் பல்வேறு மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார் இயக்குநர். இந்தப் பிரச்சனையின் வீரியம் எந்தளவிற்கு இருக்கிறது என்றால் ஒரு ரயிலையே புற்றுநோய் ரயில் என்று அழைக்குமளவுக்கு அந்தப்பகுதியில் புற்றுநோய் சாதாரணமாகியிருக்கிறது. 

தேசிய விருது பெற்ற இந்தித் திரைப்படம் ‘இராடா’ பேசும் அந்த முக்கியமான விஷயம்..!

கடந்த வாரம் திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவு சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம். இப்படி ஒரு பிரிவு இருப்பது பல பேருக்குத் தெரியாமல்கூட இருக்கலாம். அதிகம் கவனிக்கப்படாத இந்த விருதினைப் பெறும் திரைப்படம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புஉணர்வையோ அல்லது அது குறித்த உரையாடலையோ ஏற்படுத்தும் கதைக்களத்தினைக் கொண்டிருக்கும். 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுச்சூழல் திரைப்பட விருதினை இராடா( Irada)எனும் இந்தித் திரைப்படம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் அபர்னா சிங் இயக்கத்தில் நஸ்ருதீன் ஷா, திவ்யா தத்தா எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். பஞ்சாபில் ஏறக்குறைய விஷமாக மாறியிருக்கும் நிலத்தடி நீர் பிரச்சனையைக் கதைக்களமாக்கியுள்ளார் இயக்குநர் அபர்னா சிங். 

இந்தியாவின் கோதுமைக் கின்னம் என்றும் செழிப்பான விவசாயப் பகுதி என்றும் மட்டுமே அறியப்படும் பஞ்சாபின் மற்றொரு முகத்தை நமக்குக் காட்டுகிறது இராடா. தொடர்ந்து அதிகமான இரசாயன கழிவுகள் நிலத்தில் கலப்பதால் பஞ்சாபின் நீர் நிலைகளும் நிலத்தடி நீரும் முற்றிலுமாக நச்சாக மாறியுள்ளது. இது இன்று நேற்று நிகழ்ந்த மாற்றமில்லை. பல ஆண்டுகளாக இது நிகழ்ந்துள்ளன என்பதையும் இராடா திரைப்படத்தின் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சனையை இராடா திரைப்படம் மூலம் பல்வேறு மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார் இயக்குநர். இந்தப் பிரச்சனையின் வீரியம் எந்தளவிற்கு இருக்கிறது என்றால் ஒரு ரயிலையே புற்றுநோய் ரயில் என்று அழைக்குமளவுக்கு அந்தப்பகுதியில் புற்றுநோய் சாதாரணமாகியிருக்கிறது. 

இராடா திரைப்படம்

பஞ்சாபின் தெற்குப்பகுதியாக அறியப்படும் மால்வாவில் உள்ள பல்வேறு இரசாயனத் தொழிற்சாலைகளின் இரசாயனக் கழிவுகள் அப்படியே நிலத்திற்குள் செலுத்தப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் ஆர்செனிக், யுரேனியம், க்ரோமிக் எனப் பல கனிமங்கள் இருக்கின்றன. கழிவுகளை நிலத்தின் மேற்பரப்பில் வெளியேற்றுவதற்கும் நிலத்திற்குள்ளே செலுத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ரிவர்ஸ் போரிங் (Reverse boring) எனச் சொல்லப்படும் நிலத்திற்குள் செலுத்தப்படும் இந்த முறையால் நீர் நிலைகள், நிலத்தடி நீர், அனைத்தும் நச்சாகின்றன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அந்தப் பகுதியின் நச்சான நீரைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விளைவு புற்றுநோய். மால்வா பகுதியில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு புற்றுநோய் இருக்கிறது. பஞ்சாபிலிருந்து பலரும் சிகிச்சைக்காக ராஜஸ்தானின் பிகானீருக்குச் செல்கின்றனர். பஞ்சாபின் பதிந்தாவிலிருந்து(Bathinda) பிகானீருக்குச் (Bikaner) செல்லும் பதிந்தா-லால்கர் பயணிகள் ரயிலானது ( Bathinda - Lalgarh Passenger) முன்பே கூறியதுபோல புற்றுநோய் ரயில் என்றே அழைக்கப்படுகிறது. முன்பதிவற்ற பெட்டிகளை உடைய இந்த ரயிலில் 70% மேற்பட்டோர் புற்றுநோயாளிகளே பயணிக்கின்றனர். அவர்களுக்கு இந்த இரயிலில் கட்டணம் இல்லை. 

1960களில் பசுமைப் புரட்சியால் தன்னிறைவுப் பெற்ற விவசாய மாநிலமாகத் திகழ்ந்த பஞ்சாப் தங்கள் நிலங்களில் அதிகமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதும் புற்றுநோய்க்கான காரணமாக சொல்லப்படுகிறது. நான்கு முறை தெளிக்க வேண்டிய பூச்சிக்கொல்லியை பல மடங்கு அதிகமாகத் தெளிப்பதும் நிலத்தடி நீரை நச்சாக்குகிறது. விளையும் உணவுப்பொருட்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பஞ்சாபில் ஒவ்வோர் ஆண்டும் கணிசமான பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் மட்டும் 1332 வகையான நச்சுப்பொருட்கள் மக்களைப் பாதிக்கின்றன எனவும் சொல்லப்படுகிறது. கோதுமைக்கின்னம் எனச் சொல்லப்பட்ட பஞ்சாப் புற்றுநோய்ப் பகுதி எனச் சொல்லுமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் அழுத்தம் குறையாமல் இராடாவில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். படத்தின் பெரும்பாலான காட்சிகளின் பின்புறத்தில் அனல்மின் நிலையம் இருக்கிறது. மேற்குறிப்பிட்ட உண்மை சம்பவங்கள், இடங்கள் எனப் பலவற்றின் பெயரைக்கூட மாற்றாமல் அப்படியே திரைப்படத்தில் பதிவு செய்துள்ளனர். 

நிலத்தடி நீர்

இரசாயனக் கழிவுகளின் ரிவர்ஸ் போரிங், அரசு அதிகாரம் முதலாளிகளுக்குச் சாதகமாக இருப்பது, அந்த கேன்சர் ரயிலில் இன்சுரன்ஸ் ஏஜன்ட்களும் ஹாஸ்பிட்டல் ஏஜன்ட்டுகளுமாய் நிறைந்திருப்பது எனப் பல இடங்களில் இந்தப் பாதிப்பின் வீரியத்தை நமக்குள்ளும் கடத்துகிறார் இயக்குநர். தொழிற்சாலைக் கழிவுகளை குறித்த விழிப்புஉணர்வையும் உரையாடலையும் இராடா கண்டிப்பாகத் தரும். ஆனால் திரைப்படத்தில் இதற்கான தீர்வாக எதையும் முன் வைக்காதது சிறிய வருத்தம்தான். இராடாவை பார்க்கும்போது தமிழ் நிலத்தின் பிரச்சனைகளான ஸ்டெர்லைட்டும், நெடுவாசலும் மீத்தேனும் கண்முன் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள்தாம் நம் வருங்கால வாழ்க்கைக்கான அடித்தளம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close