நிஜத்தில் ஒரு ஜுராசிக் பார்க் முயற்சி... மீண்டும் உயிர்த்தெழுமா மாமூத்? #Mammoth | scientists try to recreate Woolly mammoths by cloning

வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (24/04/2018)

கடைசி தொடர்பு:10:57 (24/04/2018)

நிஜத்தில் ஒரு ஜுராசிக் பார்க் முயற்சி... மீண்டும் உயிர்த்தெழுமா மாமூத்? #Mammoth

அழிந்து போன உயிரினமான மாமூத்களை குளோனிங் மூலமாக மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். முயற்சி வெற்றி பெற்றால் நாம் மீண்டும் அவற்றை பார்க்க முடியும்

நிஜத்தில் ஒரு ஜுராசிக் பார்க் முயற்சி... மீண்டும் உயிர்த்தெழுமா மாமூத்? #Mammoth

மாமூத் என்ற பெயரை பலர் கேள்விப்பட்டிக்கலாம். சிலருக்கு அதன் விவரங்கள் தெரிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இந்த மாமூத்கள் பல திரைப்படங்களில் கதாபாத்திரமாக இடம் பெற்றிருக்கின்றன என்பதால் புகைப்படத்தைப் பார்த்தால் பலருக்கும் அதை அடையாளம் தெரிந்துவிடும். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருந்த உயிரினங்கள் அவை. அதன் பின், 4500 வருடங்களுக்கு முன்னால் மாமூத்களின் இனம் முழுவதுமாகவே அழிந்துபோனது.

மாமூத்

மாமூத்களுக்கும் தற்பொழுது நாம் பார்க்கும் யானைகளுக்கும் பல்வேறு விதங்களில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே, அவற்றை யானையின் மூதாதையர் என்றும் குறிப்பிடுகிறார்கள். யானையைவிட உருவத்தில் பல மடங்கு பெரியதாகவும் மிகப்பெரிய தந்தங்களையும் உடல் முழுவதும் அடர்த்தியான ரோமங்களையும் அவை கொண்டிருந்தன. பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இவை அதிக அளவில் வாழ்ந்து வந்தன. பனி யுகத்துக்குப் பிறகு மாறிய காலநிலை மாற்றம் இவற்றின் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டிருந்தாலும்  வேட்டை, இயற்கைச் சூழல், உணவுப் பற்றாக்குறை போன்ற பிற காரணங்களும் கூறப்படுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இவை வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. குகைகளில் காணப்படும் பழங்கால ஓவியங்கள் பலவற்றில் மாமூத்கள் உருவங்கள் வரையப்பட்டிக்கின்றன. பல இடங்களில் அதன் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

சிதைவடையாமல் கிடைத்த மாமூத் புதைபடிமங்கள்

புதைபடிமங்கள்

மாமூத் புதைபடிமங்கள் ரஷ்யாவில், குறிப்பாக சைபீரிய பகுதிகளில்தான் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவைப் பொறுத்தவரையில் மாமூத் புதைபடிமங்கள் என்பது சர்வசாதாரணமாக காணப்படக்கூடிய ஒன்றாக இருக்கின்றன. மாமூத்கள் உயிரோடு வாழ்ந்த காலகட்டத்தில் அங்கு அவை வாழ்வதற்கான சூழ்நிலை நிலவியது. எனவே, அங்கிருக்கும் பகுதிகளில் இன்னும் பல நூறு மாமூத்கள் புதைந்து கிடக்கலாம். பெரும்பாலும் புதைபடிமங்கள் என்றாலே உயிரினங்களின் சிறிய பாகங்கள், எலும்புகள், தலைப்பகுதி என தனித்தனியாகவே கிடைக்கும். ஆனால் மாமூத்களை பொறுத்தவரை, பல இடங்களில் முழு உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 1999-ம் ஆண்டு ஒரு மாமூத் பனிக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மிகப்பெரிய தந்தத்துடன் முழு உடலமைப்புடன்  சிதைவடையாமல் இருந்தது. அதை அப்படியே மண்ணோடு சேர்த்து தோண்டி எடுத்தார்கள் 23 டன் எடையுடன் மண்ணில் புதைந்திருந்த அதை அப்படியே எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினார்கள்.

மாமூத் குட்டி

2007-ம் ஆண்டில் சைபீரியாவின் யாமல் தீபகற்பப் பகுதியில் ஒரு மாமூத் கண்டுபிடிக்கப்பட்டது. உறைந்த பனிப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அது ஒரு பெண் மாமூத் குட்டி எனவும் பிறந்து 35 நாள்களே ஆனபோது இறந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். 40,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கலாம் எனக்  கருதப்படும் அதன் தோல் மற்றும் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு 2009-ம் ஆண்டில் 10,000-ம் ஆண்டுகள் பழைமையான மற்றொரு மாமூத் குட்டி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் உறைந்த பனிப் பகுதியில் இருந்துதான் கண்டெடுக்கப்பட்டதுதான். அதுவும் அளவில் சிறியதாகவே இருந்தாலும் ஆச்சர்யப்படும் வகையில் அதன் உடலில் இருந்த ரத்தம்கூட குளிரின் காரணமாக பாதிப்படையாமல் இருந்தது.

புதைபடிமங்கள்

Photo Credit-Semyon Grigoriev | North-Eastern Federal University in Yakutsk

 மீண்டும் மாமூத்களை உருவாக்க முயற்சி செய்யும் விஞ்ஞானிகள்

ஜுராசிக்பார்க்

ஜுராசிக்பார்க் திரைப்படத்தில் அழிந்துபோன டைனோசர்களை அதன் டி.என்.ஏ மூலமாக மீண்டும் உருவாக்குவதாகக்  கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். உண்மையில் திரைப்படத்தில் மட்டுமின்றி நிஜத்திலும்கூட அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அழிந்துபோன உயிரினங்கள் புதைபடிமங்களாக கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட அதிலிருந்து டி.என்.ஏ-க்களை பிரித்து எடுக்க முடியும். மாமூத் புதைபடிமங்கள் அதிகளவில் கிடைத்து வந்ததால் அதிலிருந்து மரபணுக்களைப்  பிரித்தெடுத்து அதன் மூலமாக அதை மீட்டுருவாக்கம் செய்ய முடியுமா என்று விஞ்ஞானிகள் முயற்சி செய்து வந்தார்கள். ஆனால், இதற்கு முன்னர் இருந்த தொழில்நுட்பங்களால் அது சாத்தியப்படாமல் இருந்து வந்தது. தற்பொழுது மேம்பட்ட குளோனிங் முறையில்  அதற்கான வாய்ப்பு கைகூடி வந்திருக்கிறது.

ஜார்ஜ் சர்ச்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த விஞ்ஞானி ஜார்ஜ் சர்ச் (George Church) குளோனிங் முறையில் கம்பளி யானை எனப்படும் மாமூத்களின் ஒரு வகையை மீண்டும் உருவாக்குவதற்கான ஆய்வைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஜார்ஜ் சர்ச்ஜும் அவரது குழுவினரும் ஆரம்பித்துவிட்டார்கள். ஜார்ஜ் சர்ச் மரபணுக்கள் சார்ந்தத் துறையில் முன்னோடி விஞ்ஞானி என்பதால் இந்த ஆய்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . திட்டத்தின்படி தற்போழுது உறைந்துபோய் கிடைத்திருக்கக்கூடிய புதைபடிம உடல்களில் இருந்து கம்பளி மாமூத்களின் மரபணுக்கள் தனியாக பிரித்தெடுக்கப்படும். அதன் பின்னர் தற்பொழுதைய ஆசிய யானைகளின் தோலில் இருந்து டி.என்.ஏ.வும் பெண் யானையில் இருந்து கருமுட்டையும் பெறப்படும். தற்பொழுது வாழும் உயிரினங்களில் ஆசிய யானைகளே மாமூத்களுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. ஆசிய யானைகளின் டி.என்.ஏ வில் கம்பளி மாமூத்களின் மரபணுவில் இருக்கும் குணாதிசயங்களை சேர்ப்பதற்கான மாற்றங்கள் செய்யப்படும். அதன் பின்னர் அது ஆசிய யானைகளின் உட்கருவோடு இணைக்கப்படும். அதன் பின்னர் உட்கரு மின்தூண்டலின் உதவியால் கருவாக மாற்றப்படும். சைபீரியாவில் இருந்து எடுக்கப்பட்ட புதைபடிமங்களில் இருந்து மரபணுக்களைப் பெற்று அவற்றை யானையின் கருமுட்டையோடு இணைக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம் எனக்  தெரிவித்திருக்கிறார் ஜார்ஜ் சர்ச். 

உதவப்போகும் செயற்கை கருப்பை

மாமூத்தை உருவாக்குவதற்கான கருவாக மாற்றப்பட்டாலும் அதை எந்த உயிரினத்தின் கருப்பையில் வைப்பது என்ற சந்தேகம் விஞ்ஞானிகளிடையே இருந்து வந்தது. ஏனென்றால் குளோனிங் மூலமாக ஓர் உயிரினத்தை உருவாக்குவதற்குக்  கருவைத் தயார் செய்த பின்னர் அந்த உயிரினத்தின் கருப்பையில் வைத்துவிடுவார்கள். எடுத்துக்காட்டாக ஒரு ஆட்டைகுளோனிங் செய்ய வேண்டும் என்றால் அதற்கென தயார் செய்யப்பட்ட கரு மற்றொரு பெண் ஆட்டின் கருப்பையில் வைக்கப்படும் அதன் பின்னர் வழக்கம்போல கரு வளர்ச்சியடைந்து விடும். ஆனால், மாமூத்தின் கருவை வைப்பதற்கு இங்கே வேறு பெண் மாமூத்கள் கிடையாது என்பதால் இதுவரை அழிந்துபோன உயிரினத்தை குளோனிங் செய்வது சாத்தியமில்லாமல் இருந்தது. அப்படி மாற்றியமைக்கப்பட்ட கருவை ஒரு யானையின் கருப்பையில் வைத்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது தெரியாத காரணத்தால் விஞ்ஞானிகள் தயக்கம் காட்டி வந்தனர். இந்தக்  குழப்பத்திற்கு  கடந்த வருடம் ஒரு தீர்வு கிடைத்தது.

செயற்கை கருப்பை

பிலடெல்பியாவைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவமனை செயற்கை கருப்பை ஒன்றைக்  கடந்த வருடம் உருவாக்கியிருந்து. குறைப்பிரசவத்தில் பிறந்த எட்டு ஆட்டுக்குட்டிகள் இந்தக் செயற்கை கருப்பையில் வைத்துப் பரிசோதிக்கப்பட்டன. ஒரு மாத காலத்திலேயே இயற்கையான கருப்பையில் இருப்பதைப்போல ஆட்டுக்குட்டியின் நுரையீரலும், மூளையும் செயல்படத் தொடங்கியது. இயற்கையான கருப்பையைப் போலவே இயங்கியதால் இது வெற்றிகரமாகச்  செயல்படும் என்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாமூத்தை உருவாக்கும் திட்டத்திலும் இதைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கருவை மொத்தம் 22 மாதங்கள் செயற்கை கருப்பையில் வைக்க வேண்டியிருக்கலாம் எனக் கணித்திருக்கிறார்கள். இந்த ஆய்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றால் மாமூத்கள் கிடைக்காமல் போகலாம். அதற்காக நாங்கள் கவலைப்படப் போவதில்லை. ஆனால், அதற்குப் பதிலாக ஆசிய யானை மற்றும் ஒரு கம்பளி மாமூத்தின் கலப்பினத்தை நம்மால் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்திருக்கிறார்கள்.

மாமூத்

ஒரு வேளை மாமூத்கள் மீண்டும் உருவாக்கப்பட்டாலும் அவை வாழ்வதற்கான சூழ்நிலை தற்போழுது காணப்படவில்லை எனப்  பல வருடங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். அது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையும்கூட. அழிந்து போன உயிரினங்கள் திரும்ப வந்தாலும் அவை இன்றைக்குப் பூமி இருக்கும் சூழலில் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், இதுபோன்ற முயற்சிகள் வெற்றிபெற்றுவிட்டால் அந்த உயிரினத்தை வளர்ப்பதற்காக ரஷ்யாவின் விஞ்ஞானிகள் ஒரு இடத்தைத்  தயார் செய்து வைத்திருக்கிறார்கள். சைபீரியாவுக்கு சற்று தொலைவில் சுமார் இருபதாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பிளஸ்டோசென் என்ற பூங்கா (Pleistocene Park) என்ற இடத்தைப்  பல விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் பூங்காவில் பனியுகம் நடைபெற்றபோது இருந்த சுற்றுச்சூழலை மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டிக்கிறார்கள். ஒருவேளை மாமூத் இன்னும் இரண்டு வருடங்களில் திரும்பி வந்துவிட்டால் அவற்றுக்கு ஜுராசிக் பார்க் ஒன்று ஏற்கெனவே தயாராக இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு நாமும் தயாராக இருப்போம்.


டிரெண்டிங் @ விகடன்