வெளியிடப்பட்ட நேரம்: 07:38 (25/04/2018)

கடைசி தொடர்பு:10:23 (25/04/2018)

சக மனிதனை நேசிக்க வேண்டும்... ஏன்? நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

சக மனிதர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் ஏன் ?

சக மனிதனை நேசிக்க வேண்டும்... ஏன்? நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

கதை

றியாமையிலிருந்து உருவாவதுதான் இனவெறி’ - இத்தாலியைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் மரியோ பேலோடெல்லி (Mario Balotelli) தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து உணர்ந்து சொன்ன வாசகம் இது. இனவெறிக்கு எந்தத் துறையும் விதிவிலக்கல்ல. விளையாட்டு, கல்வி, இலக்கியம், பொருளாதாரம்... என அத்தனைத் துறைகளிலும் மூக்கை நுழைத்துவிடக்கூடிய விஷ ஜந்து அது. ஒரு மனிதன் பிறந்த குலத்தைவைத்து அவனை அடையாளப்படுத்துவதையும், பேதம் பாராட்டுவதையும்விட மோசமான செயல் வேறொன்று இருக்க முடியாது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் நாம், நம்மைப்போல் ஒருவரை, சக மனிதரை இனப் பாகுபாடு காட்டி ஒதுக்கிவைப்பதும், அதிகபட்ச இனவெறியில் உடல்ரீதியாகத் துன்புறுத்துவதும் இன்றைக்கும் உலகம் முழுக்கப் பல இடங்களில் நடக்கிற கொடுமை. இனவெறியால் பாதிக்கப்பட்டவரின் வலியை வெறும் வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அதன் உச்சபட்சமான வேதனையை விவரிக்கும் கதை இது.

`சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கல்லவே...’ - அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் வள்ளலார். `சாதிகள், மதங்கள், சமயநெறிகள், சாத்திரங்கள், பிறந்த குலம்... இப்படிப் பல பிரிவினைகளை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழிவது அழகல்ல...’ என்பது இதன் பொருள். ஆனால், எத்தனை மகான்களும் ஞானிகளும் வலியுறுத்தினாலும் இந்த இனவெறியை மட்டும் மனிதர்களிடமிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம். இனவெறியின் உச்சகட்ட பேரழிவுகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது `இனப்படுகொலை’ (The Holocaust) என வர்ணிக்கப்படும், இரண்டாம் உலகப்போரின்போது நாஜி வதை முகாம்களில் நடந்த படுகொலைகள். இந்த இனப்படுகொலையைப் பற்றி மறைந்த கியூபாவின் முன்னாள் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இப்படி வர்ணித்தார்... `இந்த இனப்படுகொலையோடு வேறு எதையுமே ஒப்பிட முடியாது.’

சர்ச்

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள்... என்று பாரபட்சம் பார்க்காமல் யூத இன மக்களைக் கொன்று குவித்த படுகொலை அது. ஹிட்லரின் நாஜிப்படைகளால் ஐரோப்பாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரம் அது. அந்த வதை முகாம்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கொடுமைகளை அரங்கேற்றியவை. ஐரோப்பாவிலிருந்த வதை முகாம்களில் கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். `1941- 1945-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் இருந்த யூத இன மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்த இனப்படுகொலையில் அழிந்து போனார்கள்’ என்கிறது வரலாறு. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த கொடிய சிறைகளிலிருந்து தப்பித்தவர்கள் வெகு சொற்பம். அவர்களில் பலர் உற்றார், உறவினர், உடைமைகளை இழந்தவர்கள்; மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்; வாழ்க்கையையே பறிகொடுத்தவர்கள். அப்படி ஒரு முகாமிலிருந்து மீண்டு வந்த பெண்ணின் கதை ஒன்று...

***

மன்ஹாட்டன் (Manhattan) அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருக்கும் ஒரு பகுதி. அங்கே ஒரு சர்ச் இருந்தது. அதன் பாதிரியாராக கில்மர் மையர்ஸ் (Kilmer Myers) என்பவர் இருந்தார். அமைதியான பகுதி; அன்பான மனிதர்கள்; ஞாயிறுதோறும் தேவாலயத்தில் கூடிவிடும் கூட்டம்; அவரிடம் மனமுவந்து தங்கள் பிரச்னையைச் சொல்லும் எளிய மனிதர்கள்... அவர் அந்த சர்ச்சுக்கு பாதிரியாராகப் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து அருமையாகப் போய்க்கொண்டிருந்தது தேவாலயச் செயல்பாடுகள். அண்மைக்காலமாக அவருக்கு புதிதாக ஒரு பிரச்னை... அதுவும் ஒரு பெண்ணின் வடிவில்!

தினமும் மாலை நான்கு மணியானால் போதும்... அந்தப் பெண் தேவாலயத்துக்கு வந்துவிடுவாள். உள்ளே வர மாட்டாள். வாசலில் நின்றுகொண்டு இயேசு கிறிஸ்துவை திட்டித் தீர்ப்பாள். முதல் நாள் அந்தப் பெண் தேவாலய வாசலில் நின்று திட்டிக்கொண்டிருந்தபோது பாதிரியார் பதறிப் போனார். என்னென்னமோ சொல்லி, அந்தப் பெண்ணைத் தடுக்கப் பார்த்தார். அந்தப் பெண் அவரைப் பொருட்படுத்தவேயில்லை. மனமார இயேசுவைத் திட்டித் தீர்த்துவிட்டு, கிளம்பிப் போனாள்.

பாதிரியார்

கில்மர் மையர்ஸ் பாதிரியார், அங்கே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம், ``இந்தப் பெண் யாருனு உங்களுக்குத் தெரியுமா?’’ என்று விசாரித்தார்.

``இப்போதான் இங்கே குடிவந்திருக்காங்க. பேரு எம்மா (Emma). ஐரோப்பாவுல ஏதோ ஒரு வதை முகாம்ல இருந்தாங்களாம். போர் முடிஞ்சிடுச்சுல்ல... அதான் வெளியே வந்துட்டாங்க. அவங்க பேசுறதைப் பெருசா எடுத்துக்காதீங்க ஃபாதர். பாவம்...’’

இப்போது எம்மா அனுபவித்திருந்த வலியையும் வேதனையையும் பாதிரியார் புரிந்துகொண்டார். ஆனால், எத்தனை நாள்களுக்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியும். எம்மா மாலை நான்கு மணிக்கு சர்ச் வாசலுக்கு வருவதும், இயேசுவைத் திட்டுவதும் நாள் தவறாமல் நடந்தது. அவளைத் தெரிந்தவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தெரியாதவர்கள் பாதிரியாரிடம்தான் வந்து கேட்பார்கள். இந்த நிகழ்வு தொடர்ந்துகொண்டிருக்க ஒரு கட்டத்தில் அயர்ந்து போனார் பாதிரியார்.

ஒருநாள் எம்மா, வழக்கம்போல இயேசுவின் மேல் வசை பாடிக்கொண்டிருந்தாள். பாதிரியார் கில்மர் அவளருகே போனார். அன்பான குரலில் இப்படிச் சொன்னார்... ``மேடம்... தினமும் இப்படி வாசல்ல நின்னு திட்டுறீங்களே... உங்களுக்குக் கால் வலிக்கலை? அதோட இயேசுவுக்குக் கேட்குமோ, என்னவோ... நீங்க ஏன் உள்ளே போய் அவர்கிட்டயே நின்னு திட்டக் கூடாது?’’

பிரார்த்தனை

இப்படிச் சொல்லிவிட்டு பாதிரியார் வேறு பக்கம் போய்விட்டார். அதற்குள் யாரோ கூப்பிட்டது கேட்க, சர்ச்சின் பின்புறமுள்ள தன் அறைக்குப் போனார். ஒரு மணி நேரம் கழித்து அவர் திரும்பி வந்தார். எம்மா வாசலில் இல்லை. `இந்தப் பெண்மணி எங்கே போயிருப்பாள்?’ என்ற யோசனையோடு சர்ச்சுக்குள் நுழைந்தார். உள்ளே சிலுவைக்குக் கீழே மண்டியிட்டு அமர்ந்து, அப்படியே சிலைபோல எதையோ முணுமுணுத்து வேண்டிக்கொண்டிருந்தாள். பாதிரியார் மெள்ள அவள் தோளைத் தொட்டார். எம்மா திரும்பி அவரைப் பார்த்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டு இப்படிச் சொன்னாள்... ``பாவம்... இந்த இயேசுவும் எங்களை மாதிரி கஷ்டப்பட்டவருதானே!’’

குறிப்பு: எழுத்தாளர் மேகி ரோஸ் (Maggie Ross) தன்னுடைய `The Fire of Your Life' நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்