2 கும்கி... ஒரு ஜேசிபி... அடங்காத சுள்ளிக் கொம்பன்! - ஒரு கும்கி உருவாகும் கதை - அத்தியாயம் - 10 | Story of making of kumki elephant episode 10

வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (25/04/2018)

கடைசி தொடர்பு:11:10 (25/04/2018)

2 கும்கி... ஒரு ஜேசிபி... அடங்காத சுள்ளிக் கொம்பன்! - ஒரு கும்கி உருவாகும் கதை - அத்தியாயம் - 10

காட்டு யானை எப்படி வேண்டுமானாலும் தாக்கும். ஆனால், கும்கி யானைகள் முகத்துக்கு நேராக அடிக்கும் பழக்கம் கொண்டவை. சுள்ளிக் கொம்பன் பொம்மனை அடிக்கப் பாய்கிறது.

2 கும்கி... ஒரு ஜேசிபி... அடங்காத சுள்ளிக் கொம்பன்! - ஒரு கும்கி உருவாகும் கதை - அத்தியாயம் - 10

சுள்ளிக் கொம்பன் பிடிபட்டதைக் கேள்விப்பட்ட உள்ளூர் மக்கள் யானையைப் பார்க்க சம்பவ இடத்துக்கு வந்தார்கள். இது சுள்ளிக் கொம்பன் அல்ல, உண்மையான சுள்ளிக் கொம்பன் இப்படித்தான் இருக்குமென நான்கைந்து பேர்  சில புகைப்படங்களைக் காட்டுகிறார்கள். அதுவரை சுள்ளிக் கொம்பனைப் பிடித்து விட்டோமென பெருமிதத்தில் இருந்த ஒட்டுமொத்த குழுவும் பீதியாகிறார்கள். சுள்ளிக் கொம்பன் என நினைத்து மயக்க ஊசி செலுத்தியிருந்த யானை சங்கிலிகள் கட்டப்பட்டு லாரியில் ஏற்றி முதுமலை முகாமுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்தது. ஆனால், பிடிபட்டது சுள்ளிக் கொம்பன் இல்லை என்று முடிவானதும் காலை 7 மணிக்குப் பிடித்து வைத்திருந்த யானையின் சங்கிலிகள் விடுவிக்கப்பட்டு மயக்கம் தெளிந்த பிறகு மீண்டும் காட்டிற்குள் விடப்பட்டது. பொம்மன் மற்றும் சுஜய்  இரண்டு கும்கி யானைகளும் உண்மையான சுள்ளிக் கொம்பனைப் பிடிக்கும் ஆப்ரேஷனுக்குத் தயாராகின. 


கும்கி

1 அத்தியாயம்    2 அத்தியாயம்    3 அத்தியாயம்    4 அத்தியாயம்    5 அத்தியாயம்    6 அத்தியாயம்    7 அத்தியாயம்

                                                                                                         8 அத்தியாயம்      9 அத்தியாயம்

நான்கு நாள்களாகக் காத்திருந்து காட்டு யானையைப் பின் தொடர்ந்து கடைசியில் சுள்ளிக் கொம்பனைப் பிடிக்காமல் வேறு ஒரு யானையைப் பிடித்திருக்கிறோம் எனத் தெரிந்ததும் எல்லோரும் சோர்ந்து போகிறார்கள். ஆனால், எந்தக் காரணத்திற்காகவும் சுள்ளிக் கொம்பனை பிடிப்பதிலிருந்து பின் வாங்க முடியாது என்பதை உணர்ந்த வனத்துறை சுள்ளிக் கொம்பனைத் தேடும் முயற்சியைத் தொடங்குகிறது. கிருமாறன் முதுமலைக்குத் திரும்பிவிட்டதால் காட்டு யானை பிடிப்பதில் அனுபவம் வாய்ந்த இன்னொரு மாவூத் மாறன் வனத்துறை குழுவில் இணைந்துகொள்கிறார். யானைகளை விரட்டுவதாக இருந்தால் சாதாரண மாவூத்துக்களைக் கொண்டு விரட்டி விடுவார்கள். ஆனால் காட்டு யானைகளைப் பிடிப்பதாக இருந்தால் அனுபவம் வாய்ந்த ஒரு மாவூத்தை கட்டாயமாக உடன் வைத்திருப்பார்கள். ஊசி செலுத்தப்பட்ட யானை பாதி மயக்கத்தில் இருக்கும்பொழுது யானையின் கழுத்தில் கயிறு கட்ட வேண்டும். அப்படியான நேரங்களில் அனுபவம் வாய்ந்த மாவூத்துக்களால் மட்டுமே காட்டு யானையின் கழுத்தில் கயிறு மாட்ட முடியும். கயிறு மாற்றுவதில் சில நொடிகள் கவனம் குறைந்தாலும் காட்டு யானைப் பாகனைத் தூக்கி வீசி விடும். மயக்க நிலையியல் இருந்தாலும் யானைக்குக் கண் முன்னே நடக்கிற விஷயங்கள் அனைத்தும் தெரியும். யானைக்குச் செலுத்துகிற மயக்க மருந்து யானையை அரை மயக்க நிலையிலேயே வைத்திருக்கும். அப்போது யானையால் நடக்க முடியாதே தவிர எல்லாவற்றையும் பார்க்க முடியும். அதிகமாக முரண்டு பிடிக்கிற யானைகளுக்குத்தான் மயக்கமடையும் அளவுக்கான மயக்க ஊசியைச் செலுத்துவார்கள். 

பொம்மன்  கும்கி

நான்கு நாள்களாகக் கண்காணித்தது சுள்ளிக் கொம்பன் யானையைத்தான் என்பதை உறுதி செய்த வனத்துறை சுள்ளிக் கொம்பன் எங்கே இருக்கிறான் என மீண்டும் தேட ஆரம்பிக்கிறது. வனத்துறையின் தேடலில் அடுத்த நாள் சுள்ளிக் கொம்பன் எல்லியாஸ்கடை பகுதிக்குப் பக்கத்திலிருந்த வனப்பகுதியில் இருப்பது தெரிய வருகிறது. உடலெல்லாம் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டதில் சுள்ளிக் கொம்பன் அதனுடைய நிறமே மாறிப் போய் இருந்தது. யானை பிடிப்பதை வேடிக்கை பார்க்கிற மக்கள் முழுவதுமாக அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வனத்துறை, கால்நடை மருத்துவர்கள் குழு என எல்லோரும் சுள்ளிக் கொம்பனைச் சுற்றி வளைப்பது என முடிவெடுக்கிறார்கள். யானைகள் எப்போதும் தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் ஆபத்துகளையும் நில அதிர்வுகளால் உணர்ந்து கண்டுபிடித்துவிடும். தும்பிக்கையை நிலத்தில் வைத்து எதிரிகளின் நடமாட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படும். 

சுள்ளிக் கொம்பனும் அதைச் சுற்றி நடக்கிற விஷயங்களை நில அதிர்வுகளைக் கொண்டு உணர்ந்து கொள்கிறது. மீண்டும் காட்டுக்குள் செல்ல முயற்சி செய்தது. ஆனால், நிலைமை கை மீறிப் போகிறது. காட்டுக்குள் மீண்டும் செல்ல முடியாத அளவுக்குச் சுள்ளிக் கொம்பனைச் சுற்றி வளைக்கிறார்கள். பொம்மனும் சுஜயும் சுள்ளிக் கொம்பனை எதிர்கொள்ளத் தயார்படுத்துகிறார்கள். சரியாக மாலை 4:30 மணிக்குச் சுள்ளிக் கொம்பன் யானைக்கு மயக்க ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்படுகிறது. ஊசியை உடலில் வாங்கிய சுள்ளிக் கொம்பன் தெறித்து ஓட ஆரம்பிக்கிறது. அதன் பிளிறல் ஆக்ரோஷமாக இருக்கிறது. பொம்மனுக்கும், சுஜய்க்கும் காட்டு யானையைப் பிடிக்க வேண்டுமெனக் கட்டளைகளை அதன் மாவூத்துகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கும்கி யானைகள் இரண்டும் சுள்ளிக் கொம்பனைப் பின் தொடர்ந்து செல்கிறார்கள். இப்போது இன்னொரு சிக்கல் இருக்கிறது. மயக்க மருந்து செலுத்திய சுள்ளிக் கொம்பன் சமவெளிப் பகுதியை விட்டு மேடு பள்ளங்கள் இருக்கிற இடத்துக்குச் சென்றுவிடக் கூடாது. ஆறு, குளம், சரிவான இடம், பள்ளத்தாக்கு இருக்கிற பகுதிக்கும் சென்று விடக் கூடாது. அப்படி மயக்கமடைந்த யானை வேறெங்கும் விழுந்து இறந்து விட்டால் வேறு விதமான விளைவுகளை வனத்துறை சந்திக்க நேரிடும். மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானையைப் பின் தொடர்ந்து மொத்த குழுவும் செல்கிறது. சிறிது தூரம் சென்ற சுள்ளிக் கொம்பன் மேடாக இருக்கிற இடத்தில் ஒரு பெரிய புதருக்குள் சென்று மறைந்து நின்று கொள்கிறது. புதருக்குள் சென்ற சுள்ளிக் கொம்பன் வெளியே வரும் எனக் கும்கி யானைகள் சகிதம் ஓட்டுமொத்த குழுவும் புதருக்கு வெளியே காத்திருக்கிறது. நேரம் போகப் போக இருட்ட ஆரம்பிக்கிறது. புதருக்குள் சென்று இரவு நேரத்தில் சுள்ளிக் கொம்பனுக்குச் சங்கிலி போடுவது அவ்வளவு எளிதான செயல் இல்லை என்பதை உணர்கிற வனத்துறை புதரை வெட்டி யானையை மீட்பது என முடிவெடுக்கிறது. புதரை வெட்டி சுள்ளிக் கொம்பனை மீட்கும் முயற்சி தொடங்குகிறது. மயக்க நிலையில் இருக்கிற சுள்ளிக் கொம்பனின் காலில் சங்கிலி போட்டால் மட்டுமே அதைக் கட்டுப்படுத்தி பிடிக்க முடியும்.

முதுமலை

இரவு எட்டு மணிக்குச் சுள்ளி கொம்பன் மறைந்திருந்த புதர் முழுவதும் வெட்டி அகற்றப்படுகிறது. சுள்ளிக் கொம்பனுக்கு சங்கிலி மாட்டப் பொம்மன் தயார்படுத்தப்படுகிறது. மாவூத்துக்களை பொறுத்தவரை, இந்த இடம் போர்க்களத்துக்குச் சமமானது. ஏனெனில் காட்டு யானை எப்படி வேண்டுமானாலும் தாக்கும். ஆனால், கும்கி யானைகள் முகத்துக்கு நேராக அடிக்கும் பழக்கம் கொண்டவை. சுள்ளிக் கொம்பன் பொம்மனை அடிக்கப் பாய்கிறது. பொம்மனும் அடிக்கப் பாய்கிறது. சுள்ளிக் கொம்பனின் முகத்துக்கு நேராகத் தந்தத்தை வைத்துக் குத்துகிறது. இரண்டு யானைகளும் நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றன. பொம்மனின் உதவிக்கு சுஜய் யானையும் இணைந்து கொள்கிறது. மயக்க மருந்து செலுத்தியிருப்பதால் சுள்ளிக் கொம்பனால் முழு பலத்தையும் பயன்படுத்தி கும்கியோடு போராட முடியாமல் போகிறது. மாவூத்துகள் சுள்ளிக் கொம்பனுக்குச் சங்கிலியை மாட்ட முயல்கிறார்கள். ஆனால், சுள்ளிக் கொம்பன் தொடர்ந்து முரண்டு பிடிக்கிறது. சுள்ளிக் கொம்பனின் வலது, இடது என இரண்டு பக்கமும் கும்கி யானைகள் நின்றுகொண்டு சுள்ளிக் கொம்பனை கட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள். இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிற மாவூத் மாறன் சுள்ளிக் கொம்பனின் கழுத்தில் கயிற்றை மாட்டுகிறார். 

சுள்ளிக் கொம்பனை அங்கிருந்து சாலைக்குக் கொண்டு வர வேண்டும். மேடும், பள்ளமுமாக இருக்கிற இடத்திலிருந்து சாலைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இரவு நேரம் என்பதால் சுள்ளிக் கொம்பனை அங்கிருந்து கொண்டு வருவது  தாமதமாகிறது. வனத்துறை ஜேசிபி வாகனத்தை வைத்து தற்காலிகமாக பாதை அமைக்க முயல்கிறது. அதுவரை அமைதியாக இருந்த சுள்ளிக் கொம்பன் பொம்மனை தாக்கித் தப்பிக்க முயல்கிறது. நான்கு கால்களிலும் சங்கிலி மற்றும் கழுத்தில் கயிற்றால் கட்டியிருப்பதாலும் சுள்ளிக் கொம்பனால் மேற்கொண்டு முன்னேற முடியாமல் போகிறது. இரண்டு பக்கமும் கும்கி யானைகள் நிற்பதால் தப்பிக்கும் முயற்சியைக் கைவிட்டு அமைதியாக நிற்கிறது. ஜேசிபி உதவியுடன் இரவு பதினோரு மணிக்கு மேல் பாதை அமைக்கும் பணி தொடங்குகிறது. இரண்டு மணி நேர முயற்சியில் இரவு 1 மணிக்குப் பாதை அமைக்கப்படுகிறது. 

முதுமலை முகாம்

பிடித்த சுள்ளிக் கொம்பனை லாரியில் ஏற்ற முயற்சி நடக்கிறது. ஆனால், அந்த முயற்சியும் அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை. முழு பலத்தையும் பயன்படுத்தி இருந்த பொம்மன் தந்தத்தால் சுள்ளிக் கொம்பனைத் தள்ள, இன்னொரு பக்கம் சுஜய் முட்டித் தள்ளுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேர முயற்சிக்குப் பிறகு இரவு 2 மணிக்குச் சுள்ளிக் கொம்பன்  லாரியில் ஏற்றப்படுகிறது. உள்ளூர் மக்கள் இது சுள்ளிக் கொம்பன் என உறுதிப்படுத்திய பின்பு சுள்ளிக் கொம்பன் பிடிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. 

கொம்பனைப் பிடிக்க முதலில் வந்த ஜம்புவுக்கு மதம் பிடித்திருந்ததால் சேரம்பாடி பகுதியில் கட்டி வைக்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு ஜம்பு அங்கேயே இருக்க நேர்ந்தது. முதுமலையில் சுள்ளிக் கொம்பனுக்காக கிருமாறன் தலைமையில் பிரத்யேக கூண்டு அமைக்கப்படுகிறது. விடியற்காலை ஆறு மணிக்கு முதுமலை கொண்டு வரப்பட்ட சுள்ளிக் கொம்பன் கரோலில் அடைக்கப்படுகிறது. கரோலில் அடைக்கப்படுகிற சுள்ளிக் கொம்பனுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அதற்கான மாவூத்தாக மாண்பன் என்பவர் நியமிக்கப்படுகிறார்.  மற்ற காட்டு யானைகளைப் போல சுள்ளிக் கொம்பனுக்கு 48 நாள்களில் பயிற்சி கொடுக்க முடியவில்லை. அதிக பட்சமாக எந்தக் காட்டு யானையாக இருந்தாலும் 60 நாள்களில் கரோலில் இருந்து வெளியே கொண்டு வரப்படும். ஆனால்.  ஏப்ரல் 5-ம் தேதி பிடிக்கப்பட்டு கரோலில் அடைக்கப்பட்ட  சுள்ளிக் கொம்பன் கரோலிலிருந்து வெளியே வந்தது நவம்பர் மாதம் 18-ம் தேதி. 

அப்படி ஏழு மாதங்கள்  கரோலில் உள்ளே இருந்து  வெளியே வர முடியாத அளவுக்கு என்ன செய்தது சுள்ளிக் கொம்பன்? 


டிரெண்டிங் @ விகடன்