வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (25/04/2018)

கடைசி தொடர்பு:14:40 (25/04/2018)

``மரங்களை உருவாக்கும் தொழிற்சாலையா காடு?” - புதிய வனக் கொள்கையும் சில கேள்விகளும்

இப்போதைய வனக் கொள்கை அவை அனைத்துக்கும் எதிராக அமைந்துள்ளது. இப்போதைய தேசிய வனக் கொள்கையில் வனம் என்ற சொல்லுக்கான முறையான வரையறைகூட தரப்படவில்லை.

``மரங்களை உருவாக்கும் தொழிற்சாலையா காடு?” - புதிய வனக் கொள்கையும் சில கேள்விகளும்

இந்தியாவில் வனப்பரப்பு அதிகமாகி விட்டதாக சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசின் வன அளவை நிறுவனம் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்த்தியது. அதில் முன்பு இருந்ததைவிட 1% காடுகள் அதிகமாகி இருப்பதாகக் கூறி இருந்தது. ஆனால், அதை கவனிப்பதற்கு முன்பாக காடு என்று எதை அழைப்பது என்றொரு வரையறை வேண்டாமா?

Indian forests

அதுவே அந்த ஆய்வறிக்கையில் தெளிவாக இல்லை. இதில் மட்டுமல்ல கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட எந்த ஆய்வுகளின் அறிக்கைகளிலுமே அது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. நாட்டின் வனப்பகுதிகளைப் பாதுகாக்கவும் அதிகப்படுத்தவும் புதிய தேசிய வனக் கொள்கைகளை மத்திய அரசு வரையறுத்துள்ளது. இதிலும் அதேபோல் காடு குறித்த முறையான வரையறை வழங்கப்படவில்லை. இதுபோன்ற வனப் பாதுகாப்புக் கொள்கை என்று 30 வருடங்களுக்கு முன்பு 1988-ல் அப்போதைய மத்திய அரசு ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி தேசிய வனப் பாதுகாப்புச் சட்டம் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் இருந்தன. மிக முக்கியமாகப் பழங்குடியினருக்கும் காடுகளைச் சார்ந்து வாழும் மற்ற மக்களின் வாழ்வாதாரத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் இருந்தது மட்டுமின்றி அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இருந்தது. அதைவிட முக்கியமாகத் தனியார் நிறுவனங்களின் தலையீடுகள் இந்தியக் காடுகளுக்குள் இருக்கக் கூடாது என்று அழுத்தமாக மறுத்தது.

NFP-1988

தேசிய வனக் கொள்கை-1988

ஆனால், இப்போதைய வனக் கொள்கை அவை அனைத்துக்கும் எதிராக அமைந்துள்ளது. இப்போதைய தேசிய வனக் கொள்கையில் வனம் என்ற சொல்லுக்கான முறையான வரையறைகூட தரப்படவில்லை. இதில் பல நல்ல கொள்கைகள் இருப்பதும் உண்மைதான். உதாரணமாகக் காட்டுத்தீ உருவாவதைக் கட்டுப்படுத்துவது, வனப் பரப்பில் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாப்பது, மரங்களை அதிகமாக வளர்ப்பது போன்றவை அவற்றில் சில.

அதில் இருக்கும் அனைத்தையும் செயல்படுத்துவதில் முரண்படக் கூடிய ஒரு கொள்கையும் அதில் அடக்கம். அதுதான் அரசாங்கக் காடுகளைத் தனியாருக்குத் தத்துக்கொடுப்பது. அதாவது காடுகளைப் பராமரிக்கவும், அதிகப்படுத்தவும், வனம் சார்ந்த தொழிற்சாலைகளை நிர்வகிப்பதற்கும் அரசாங்கத்துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதால் அரசாங்கத்தோடு தனியாரும் இணைந்து அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம். இது இந்தியாவில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை மேன்மேலும் காடுகளை நோக்கி வரவழைக்கும். அவர்கள் காடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டால் அதன் அருகே வாழும் பழங்குடிகள் மற்றும் காடுகளைச் சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் உட்பட பல கோடி பேரின் வாழ்வாதாரம் திசை திருப்பப்படும்.

சூழலை முழுக்க முழுக்கத் தொழிற்சாலை மயமாக்கும் அவர்களது கொள்கைக்கு ஆதரவு தருவதுபோல் அந்தக் கொள்கை அறிக்கையில் இருக்கும் மற்றுமொரு விஷயம் என்னவென்றால் காடுகளுக்குள் பண மரங்களான யூகலிப்டஸ், பாப்லர் போன்ற மரங்களை வளர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் வனம் சார்ந்த தொழிற்சாலைகளின் உற்பத்தியை அதிகப்படுத்தலாம் என்கிறது மத்திய அரசு. ஆனால், அங்கு இருக்கக்கூடிய பல்லுயிர்ச்சூழல் என்ன ஆவது. அவற்றைச் சுற்றி வேறு எதையும் வளரவிடாது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சக்கூடிய அந்த வெளிநாட்டு மரங்கள் விரைவாக வளர்ந்து டிம்பர்களாக வருமானத்தைத் தருமே தவிர  சுற்றுச்சூழலுக்கு எந்தப் பயனையுமே நல்காது.

NFP-2018

தேசிய வனக் கொள்கை-2018

வனம் சார்ந்த மூலப்பொருள்களைப் பயன்படுத்தும் பல்வேறு நிறுவனங்கள் 2008-ம் ஆண்டு இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால், அப்போதைய அரசாங்கம் அதை 1988-ம் ஆண்டின் தேசிய வனக் கொள்கையை அடிப்படையாக வைத்துத் தடுத்தது. இன்றைய  அரசாங்கம்கூட 2015-ம் ஆண்டு இதற்கான முயற்சிகளை எடுத்தது. ஆனால், பழைய தேசிய வனக் கொள்கை அதைச் செய்யவிடாத வகையில் இருந்தது. அதனால் இப்போது அதை மாற்றி அமைத்துள்ளது அரசு. இதன்மூலம் தனியாரின் ஆதிக்கம் இந்திய சுற்றுச்சூழலின் மீது நேரடியாக வருவதால் அவர்கள் காடுகளைப் பல்லுயிரியம் நிறைந்த பசுமையான பகுதியாக நினைக்காமல் மரங்களை உருவாக்கும் தொழிற்சாலையாக மாற்றிவிட வாய்ப்புகள் அதிகம்.

வனப் பகுதிகளில் பண மரங்களை வளர்த்து வனசார் மூலப்பொருள்களுக்கான தோட்டமாக மாற்றாமல் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று 1988-ம் ஆண்டின் வனக் கொள்கை தெளிவாகச் சொல்கிறது. 

1988-ம் ஆண்டின் தேசிய வனக் கொள்கையில் கூறப்பட்ட வரிகள், ``இயற்கைக் காடுகள் மரபணு வங்கியாகச் செயல்பட்டு சூழலியல் சமநிலையைப் பாதுகாக்கிறது. அத்தகைய காடுகளைத் தொழில்நிறுவனங்கள் பண மரங்களைப் பயிரிடுவதற்கு வழங்கப்படக் கூடாது."
அதை உடைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த தேசிய வனக்கொள்கையை நடைமுறைப் படுத்தக்கூடாது என்று 15 மாநிலங்களைச் சேர்ந்த 150 சூழலியல் அமைப்புகள் ஒற்றுமையாக விளைவுகளை எடுத்துரைத்து அரசுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பித்துள்ளது.

Eucalyptus

1970-களில் கொடைக்கானலில் வியாபார நோக்கோடு தனியார்களால் யூகலிப்டஸ், வாட்டல், பைன் போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டன. வனப் பாதுகாப்புச் சட்டம் வந்தபிறகு காட்டுக்குள் மரங்களை வெட்டுவது குற்றமாகக் கருதப்பட்டதால் வியாபார நோக்கோடு வளர்த்த மரங்கள் கூட அப்படியே விடப்பட்டன. அவற்றின் விதைகள் காற்றில் பரவக்கூடியவை. காலப்போக்கில் கொடைக்கானல் முழுக்கப் பரவி பழனி மலைகள் முழுக்க ஆக்கிரமித்துவிட்டது. பழைய தமிழ்த் திரைப்படங்களில்  ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் பெரும் அளவுக்குப் புல்வெளியாகப் பார்த்திருப்போம்.

காடு

அதுவே அவற்றின் இயற்கையான அமைப்பு. முழுக்க முழுக்க சோலைக் காடுகளாக இருந்த அந்தப் பகுதிகளில் அந்தப் புல்வெளிகளில் மேய்ந்து திரியக்கூடிய மான்கள், காட்டெருமைகள் போன்ற உயிரினங்களால் இப்போதைய சூழலில் தேவையான உணவைத் தேடிக்கொள்ள முடியாமல் ஊருக்குள் புகுந்து மேய்ந்துகொண்டு இருக்கின்றன. இவ்வளவு வருடங்கள் கழித்து இன்றளவும் அதன் தாக்கம் அந்தப் பகுதியின் காடுகளில் இருப்பதே தனியார் கைகளில் காடுகளைக் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு.

வனம் என்பது புவியின் சுற்றுச்சூழலைச்  சமநிலையில் வைப்பதற்காகப் பல செயற்பாடுகளைப் புரியும் ஒரு இயற்கைத் தொழிற்சாலை. அதை நிறுவனங்களுக்குக் கொடுத்து செயற்கைத் தொழிற்சாலைக்கு லாபம் தரக்கூடிய வகையில் மாற்றுவது இயற்கையைச் சீர்குலைக்கும். காடுகளை அதிகப்படுத்துகிறோம் என்ற பெயரில் மரத் தோட்டங்களை உருவாக்குவதைவிட இருப்பதை அறிவார்ந்த முறையில் பாதுகாப்பதே மத்திய அரசு செய்யும் சிறந்த செயலாக இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்