மன உறுதியிருந்தால், எதிலும் வெற்றி பெறலாம்! - உண்மைக்கதை #MotivationStory

மன உறுதியின் அவசியத்தை உணர்த்தும் அற்புதமான கதை!

மன உறுதியிருந்தால், எதிலும் வெற்றி பெறலாம்! - உண்மைக்கதை #MotivationStory

கதை

`ர் அற்புதமான கருவிலிருந்துதான் ஒரு சிறந்த புத்தகம் உருவாகிறது. அதேபோல் மனிதனுக்கு மன உறுதி இருந்தால்தான் அவனுக்கு சிறந்த வாழ்க்கை அமையும்’ - அமெரிக்க எழுத்தாளர் லூயி லேமுர் (Louis L'Amour) உதிர்த்த பொன்மொழி இது. நம் வேதங்கள் தொடங்கி ஞானிகள் வரை மனிதனுக்குத் தேவையென வலியுறுத்துவது மனோதிடம். திடமான சிந்தனையுள்ள மனிதனால் என்ன செய்ய முடியும்? எதையும் செய்ய முடியும்! ஒருவரின் லட்சியத்தை, கனவை நிஜமாக்குவதற்கு முதல் தேவை மனஉறுதி. இது இல்லையென்றால் எந்தச் சாதனையும் சாத்தியமில்லை. மன உறுதியோடு, முயற்சி, அர்ப்பணிப்போடுகூடிய உழைப்பு, ஒழுங்கு எல்லாம் சேர்ந்துகொள்ளும்போது கனவு நனவாகிறது; ஒருவர் தான் அடைய நினைக்கும் இலக்கை அடைந்துவிடுகிறார். ஆக, எதுவும் சாத்தியம், சாத்தியமில்லை என்பது மனிதனின் மன உறுதியில்தான் அடங்கியிருக்கிறது. மன உறுதியிலிருந்து எந்த நிலையிலும் பின்வாங்காமலிருப்பதுதான் உண்மையான ஞானம். இந்த உண்மையை விளக்குகிறது இந்தக் கதை.

அது 1968-ம் ஆண்டு. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் தான்சானியாவிலிருந்து (Tanzania) நான்கு தடகள வீரர்கள் மெக்ஸிகோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள கிளம்பிப் போனார்கள். எப்படியாவது ஒரே ஒரு பதக்கத்தையாவது வென்றுவிட வேண்டும் என்பது அவர்களின் லட்சியம். ஆனால், அவர்களில் ஒருவர்கூட வெள்ளி... ஏன் வெண்கலப் பதக்கம்கூட வாங்கவில்லை. ஆனால், அவற்றைவிட மிகப் பெரிய மரியாதையை உலக அளவில் தன் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தார் அவர்களில் ஒருவர்... ஜான் ஸ்டீபன் அக்வாரி (John Stephen Akhwari). அன்றைய தினம் அவர் போட்டியில் கலந்துகொண்ட ஒரே காரணத்துக்காக அக்வார் எண்ணற்ற தடகள வீரர்கள், அவருடைய நாட்டு மக்கள், ரசிகர்கள் மனதில் அழிக்க முடியாத சித்திரமாக உயர்ந்து நின்றுவிட்டார். அப்படி என்னதான் நடந்தது?

மாரத்தான்

அன்று, ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாள் நிகழ்வு அது. மாரத்தான் பந்தயம். ஓடியும் நடந்தும் இலக்கை அடையும் போட்டி. அதில் கலந்துகொண்டிருந்தார் அக்வாரி. தான்சானியாவின் கிலி மஞ்சாரோ (Kili Manjaro) மலைப் பகுதியில் நீண்ட தூரம் ஓடிய அனுபவமுள்ளவர்தான். ஆனால், மெக்ஸிகோவின் பருவநிலை அவருக்கு ஒத்துக்கொள்ளாததாக இருந்தது. அந்த நாட்டுச்சூழலுக்கு ஏற்ப ஓடுவதற்கு அவர் பயிற்சி பெற்றிருக்கவில்லை. கடல் மட்டத்திலிருந்து 2,300 மீட்டர் உயரமான இடம். பல உலக சாதனைகளைப் படைத்த ஓட்டப் பந்தய வீரர்களே சர்வ சாதாரணமாக இடறி விழும் அளவுக்கு கடினமான, சவால்கள் நிறைந்த பாதை.

அக்வாரி மாரத்தானில் ஓட ஆரம்பித்த ஆரம்பநிலையிலேயே பிரச்னைதான். அவரின் பின்னங்காலில் தாள முடியாத வலி. அதைத் தாங்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். மொத்தம் 42 கிலோமீட்டர் ஓட வேண்டும். மற்றவர்களுடன் போட்டி போட்டு ஓடியபோது ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட்டார் அக்வாரி. காலில் சுளுக்கு வேறு பிடித்துக்கொண்டுவிட்டது. `ஆனாலும் ஓடியே ஆக வேண்டும். நாடு, `ஏதாவது சாதித்துவிட்டு வா’ என்று நம்பி அனுப்பியிருக்கிறது. பின்வாங்கக் கூடாது’ இந்த மன உறுதியோடு ஓடிக்கொண்டிருந்தார். கரடு முரடான, அறிமுகமில்லாத, அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சாலை அது. முதுகில் தசைப் பிடிப்பு, காலில் வெட்டுக் காயம்... எனத் தொடர்ந்து உடலில் பிரச்னைகள். 30 கிலோ மீட்டரைத் தாண்டியதும், அது நடந்தது. ஓட முடியாமல் கீழே விழுந்துவிட்டார். நடுவர்கள் வந்து பேசிப் பார்த்தார்கள். ``உங்களால முடியலை. பேசாம பந்தயத்துலருந்து விலகிடுங்களேன்...’ என்று சொன்னார்கள். அக்வாரி கேட்கவேயில்லை. காலில் கட்டுப் போட்டுக்கொண்டு மெள்ள மெள்ள மீதமிருக்கும் 12 கிலோமீட்டரையும் கடந்துவிடும் உத்வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்.

 

 

மாரத்தான் ஓட்டம் முடிவு பெறும் இடத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காத்திருந்தார்கள். அன்றைய மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றவர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த மேமோ வோல்டே (Mamo Wolde). 2:20:26 என்ற மணிக்கணக்கில் அவர் தன் ஓட்டத்தை முடித்திருந்தார். மேமோதான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதுமே கூட்டம் கலைய ஆரம்பித்துவிட்டது. அதுதான் ஒலிம்பிக்கின் கடைசி நிகழ்வு என்பதும் ஒரு காரணம். மேமோ வெற்றி பெற்று, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துதான் ஸ்டேடியத்துக்குள் நுழைந்தார். அதற்குள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கிளம்பிப் போயிருந்தார்கள். எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டு, அப்படியே சுருண்டு கீழே விழுந்தார் அக்வாரி.

வெற்றி

ஒலிம்பிக் வரலாற்றின் சாதனை நிகழ்வுகளில் இது முக்கியமான ஒன்று. அந்த நிகழ்வை ஒட்டி ஊடகத்துக்கு அக்வாரி பேட்டி ஒன்று கொடுக்கவேண்டியிருந்தது. ``நீங்க உடம்புல அவ்வளவு அடிகள் பட்டிருந்தும், வலியிருந்தும் ஏன் ஓடுறதை நிறுத்தலை?’’ என்று நிருபர் கேட்க, பதில் சொன்னார் அக்வாரி... ``என்னோட நாடு இந்த ஓட்டப்பந்தயத்தை ஆரம்பிச்சுவெக்கிறதுக்காக என்னை இங்கே அனுப்பலை. முடிச்சுவெக்கிறதுக்காக அனுப்பியிருக்கு.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!