Published:Updated:

கட்சி நிர்வாகிக்கு ஆறுதல் கூறச் சென்ற தினகரன்! தொண்டர்கள் மிகுதியால் உடைந்த கண்ணாடி

கட்சி நிர்வாகிக்கு ஆறுதல் கூறச் சென்ற தினகரன்!  தொண்டர்கள் மிகுதியால் உடைந்த கண்ணாடி
கட்சி நிர்வாகிக்கு ஆறுதல் கூறச் சென்ற தினகரன்! தொண்டர்கள் மிகுதியால் உடைந்த கண்ணாடி

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகியை காண தினகரன் வந்த போது தொண்டர்களிடையே ஏற்பட்ட நெரிசலால் மருத்துவமனை கண்ணாடி கதவுகள் நொருங்கி உடைந்தன. இதில் ஊழியர் உட்பட மூவர் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியைக் காண தினகரன் வந்தபோது தொண்டர்களிடையே ஏற்பட்ட நெரிசலால் மருத்துவமனை கண்ணாடிக் கதவுகள் நொறுங்கி உடைந்தன. இதில் ஊழியர் உட்பட மூவர் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் கொத்தர் தெரு பகுதியில் வசித்து வருபவர் தவமுனியசாமி. முன்னாள் அ.தி.மு.க நகராட்சி கவுன்சிலரான இவர் தற்போது தினகரனின் கட்சியான அ.ம.மு.க-வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மதுரை சாலையில் உள்ள சிதம்பரம்பிள்ளை பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற தவமுனியசாமியை 3 பேர்கள் பின் தொடர்ந்து சென்று வாள் மற்றும் உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். இதில் தவமுனியசாமியில் தலை, கை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய தவமுனியசாமி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், தவமுனியசாமியைக் காண டி.டி.வி.தினகரன் நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் தவமுனியசாமியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், தினகரனை காண வந்திருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்குள் செல்ல முயன்றனர். இதனால் மருத்துவமனை வார்டு கதவுகளில் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தன. இதில் மருத்துவமனை பாதுகாவலர்களாகப் பணியாற்றி வரும் முருகன், முனியசாமி மற்றும் தினகரன் அணி நிர்வாகி செல்வராஜ் ஆகியோருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.

இதன் பின்னர் அங்கு வந்த போலீஸார் மருத்துவமனை வார்டு பகுதியில் குழுமியிருந்த தொண்டர்களை வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தினகரன் கிளம்பிச் சென்றார். தினகரனுடன், தங்கதமிழ்செல்வன், அமைப்புச் செயலாளர்கள் ஜி.முனியசாமி, வ.து.நடராஜன், மாவட்டச் செயலாளர் ஆனந்த், நடிகர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் முத்தையா, முருகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு