சிங்கம்... புழுதிப் புயல்... பாலை... உணவுக்காக ஆப்பிரிக்க யானைக்கூட்டத்தின் ஓர் ஆபத்தான பயணம்! | Dangerous journey of African elephants in search of food

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (27/04/2018)

கடைசி தொடர்பு:12:12 (27/04/2018)

சிங்கம்... புழுதிப் புயல்... பாலை... உணவுக்காக ஆப்பிரிக்க யானைக்கூட்டத்தின் ஓர் ஆபத்தான பயணம்!

1000 அடிக்குப் புழுதி புயல் அடிக்கிறது. வனத்தில் சிங்கம் நீரில் முதலை என எதிர் கொண்டு எளிதில் தப்பி வந்த யானைகள் கூட்டம் புழுதிப் புயலை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.

சிங்கம்... புழுதிப் புயல்... பாலை... உணவுக்காக ஆப்பிரிக்க யானைக்கூட்டத்தின் ஓர் ஆபத்தான பயணம்!

யானை ஓரிடத்தில் நிற்காது. காலமெல்லாம் கடந்துகொண்டே இருக்கும். மனிதர்களுக்கு நிகராகக் குடும்ப முறையைப் பேணி, சிறுசிறு கூட்டுக் குடும்பமாக பாசத்துடன் வாழும் இயல்புடையது. ஒரு யானைக் கூட்டத்துக்கு வயது முதிர்ந்த பெண் யானைதான் தலைமை வகிக்கும். இந்தப் பெண் யானையின் கட்டளைப்படிதான் அந்தக் கூட்டத்தின் மற்ற யானைகள் நடந்துகொள்ளும். தலைமை யானையின்  ''மெண்டல் மேப்"பில் அதன் வழித்தடங்கள் பதிந்திருக்கும். ஒவ்வொரு யானைக் கூட்டத்துக்கும் ஒரு வழித்தடம் உண்டு. இந்த வழித் தடம் யானைகளின் ஜீன்களிலேயே இருப்பவை. அதன் தாய் எந்த வழியில் சென்றதோ அதே வழியில் அதன் பிள்ளைகளும் செல்லும். அந்த வழியில்தான் எங்கே நீர் கிடைக்கும், தீனி கிடைக்கும், ஆபத்துக்கு எந்தப் பக்கம் சென்று ஒதுங்க வேண்டும் என்பதெல்லாம் தெரியும். கூட்டத்தில் தப்பிய யானையைப் பிடித்து ஏதாவது ஒரு காட்டுக்குள் சென்று இறக்கிவிட்டால், கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதைதான். அப்படி உணவு தேடி காடு விட்டு காடு கடந்து செல்லும் ஒரு யானைக் கூட்டத்தின் கதைதான்  ''மான்ஸாவும் அதன் மக்களும்"   

சோப்பி தேசிய பூங்கா போஸ்ட்வானாவில் இருக்கிற 47 வயது ஆப்ரிக்க பெண் யானை மான்ஸா. அதற்கு 3 வயது  எள்ளா, 6 மாத குட்டி பூமா என இரண்டு குட்டிகள் இருக்கின்றன. அதன் தலைமையில் 13 பெண் யானைகளும், 3 வயதுடைய 2 குட்டிகளும், 6 மாதமேயான ஒரு குட்டியும் இருக்கின்றன. மான்ஸா கூட்டத்தின் தலைவன். அதற்கு அந்தக் காடுகளின் வரைபடம் மனதளவில் பதிந்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு முந்தைய ஒரு கோடைக்காலத்தில் உணவுக்காகச் சோப்பி தேசிய பூங்காவிலிருந்து தெற்கே 100 மைல்களுக்கு அப்பால் இருக்கிற பசுமைப் பகுதிக்குக் கூட்டமாக இடம் பெயரும் பயணத்தைத் தொடங்குகிறது. பயணத்தைத் தொடங்குகிற யானைகள் வனப்பகுதியில் மிகப் பெரிய ஆபத்துகளைச் சந்தித்தாக வேண்டும். ஆப்ரிக்காவில் முதல் ஆபத்தே அங்கிருக்கிற சிங்கங்கள்தான். இந்தப் பயணத்தின் முடிவில் சில உயிரிழப்புகள் நேரலாம். யாராவது தொலைந்து போகலாம், எவ்வளவு விழிப்பாய் இருந்தாலும் சில ஆபத்துகளைச் சந்தித்தாக வேண்டும். ஆபத்துகளைக் கண்டு இங்கேயே இருந்துவிட முடியாது. உயிர் வாழ உணவும் தண்ணீரும் வேண்டும். அதை நோக்கிப் பயணித்தாக வேண்டும். பயணத்தைத் தொடங்கிய மூன்று நாள்களில் பெரிதாக எந்தச் சம்பவமும் நிகழவில்லை. மூன்றாவது நாளின் இறுதியில் ஒரு ஆற்றைக் கடந்தாக வேண்டும். ஆற்றைக் கடக்கிற நேரம் இரவென்பதால் விடியும் வரை அந்தப் பகுதியிலேயே யானைகள் முகாமிடுகின்றன.

ஆப்ரிக்க யானை

யானைகளின் சத்தமும் அதன் வாசனையும் சிங்கங்களை யானைகள் இருக்கிற பகுதிக்கு வர வைக்கின்றன. சிங்கங்களின் வருகை யானைகள் கூட்டத்தை பயமுறுத்துகிறது. தன்னுடைய இரண்டு குட்டிகளையும் தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறது. மற்ற யானைகளும் அவற்றுக்குப் பாதுகாவலாக இருக்கின்றன. அப்படியிருந்தும் மான்ஸாவின் 3 வயது குட்டி யானை எல்லாவை சிங்கங்கள் தனிமைப் படுத்திவிடுகின்றன. இரவென்பதால் என்ன நடக்கிறது என்பதை யானைக் கூட்டத்தாலும் உணரமுடியாமல் போகிறது. சிங்கங்களின் கர்ஜனையும், யானைகளின் பிளிறல்களும் காடு முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது. சிங்கங்களின் தாக்குதலால் யானைகள் சிதறி ஓடுகின்றன. சிங்கங்களின் தாக்குதலுக்கு உள்ளான எள்ளா வனத்துக்குள் அங்குமிங்கும் ஓடுகிறது. இரவெல்லாம் தாய் மான்ஸா பிளிறிக்கொண்டே இருக்கிறது. கொஞ்ச நேரம் காணோம் என்றாலும் அங்கமே பதறிப் போகிற மான்ஸா இன்னும் அதிகமாகப் பிளிறுகிறது. குட்டி யானை எங்கே போனது எனத் தெரியாமல் வனத்துக்குள் யானைகள் தேட ஆரம்பிக்கின்றன. எள்ளாவின் வாசனையை வைத்து மான்ஸாவும்  மற்ற யானைகளும் வனமெங்கும் தேட ஆரம்பிக்கின்றன. யானைகள் இருக்கிற வனத்தின் ஆற்றுப் பகுதியில் சிங்கங்களின் வேட்டையில் சிக்கிய குட்டி யானை எள்ளா உடலில் காயங்களுடன் கிடக்கிறது. சிங்கங்கள் ஏதும் அருகினில் இல்லை என்பதை உறுதி செய்கின்றன. வனத்திலிருந்து வெளியே வருகிற யானைக் கூட்டம் ஆற்றங்கரையில் கிடக்கிற குட்டி யானையைப் பார்க்கின்றன. மொத்த யானைகளும் பதறிக்கொண்டு குட்டி யானையை நோக்கி ஓடுகின்றன. குட்டி யானையின் தாய் மான்ஸா தன்னுடைய தும்பிக்கையால் குட்டி யானையை அசைத்துப் பார்க்கிறது. குட்டி யானைக்கு உயிர் இருப்பதை உணர்கிற தாய் யானை உயிருக்குப் போராடுகிற குட்டிக்குப் பக்கத்தில் வந்து அதன் உடலைத் தொட்டு பார்த்துப் பதறுகிறது. குட்டி யானையின் கால்கள் தாயின் தொடுதலில் மெதுவாக அசைகிறது. குட்டி யானை உயிரோடு இருப்பதை உணர்கிற தாய் அங்குமிங்கும் தும்பிக்கையை தூக்கிப் பிளிறுகிறது. 

அதே நேரத்தில் தூரத்தில் சிங்கங்கள் மறைந்திருந்து யானைகளின் நடவடிக்கையைப் பார்க்கின்றன. யானைகள் சென்றுவிட்டால் குட்டி யானையை உணவாக்கிக் கொள்ள அவை தங்களின் குட்டிகளுடன் காத்திருக்கின்றன. ஏனெனில் சிங்கங்களின் குணங்கள் அப்படி. குட்டி யானையைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்கிற மற்ற யானைகள் குட்டி யானைக்குக் கடைசி அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பிக்கின்றன. ஆனால், தாய் யானை அங்கேயே நின்று உயிருக்குப் போராடுகிற குட்டி யானையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறது. பயணத்தில் முதல் பலியாக தன்னுடைய  குட்டியை இழந்திருக்கிறது அந்தத் தாய். இந்தச் சம்பவம் உளவியலாகத் அதைப் பாதிக்கிறது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு குட்டி யானை இறந்துவிட்டது என நினைக்கிற தாய் வேதனையில் சத்தமாக பிளிறுகிறது. தாயின் சத்தத்தை கேட்கிற குட்டி யானையின் தும்பிக்கை மட்டும் சில நொடிகள் மெதுவாக அசைந்து அப்படியே மண்ணில் விழுகிறது. இருபது  நிமிடங்களுக்கு மேலாகக் குட்டி யானையின் பக்கத்தில் நின்று குட்டி யானையை நினைத்து அழுகிற தாய் யானை, மனதினை கல்லாக்கி அங்கிருந்து கிளம்பத் தயாராகிறது. உயிருக்குப் போராடுகிற ஒரு மகனை ஒரு அம்மா அப்படியே விட்டுப் போக மிகப்பெரிய மனவலிமை வேண்டும். கூட்டத்து யானைகளுக்காக மகனை விட்டு விட்டு தாயும் கிளம்பத் தயாராகிறது. குட்டி யானையை விட்டு பத்து அடி தள்ளிப் போன தாய் குட்டி யானையைப் பார்த்து தும்பிக்கையைத் தூக்கி சத்தமாகப் பிளிறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறது.

 ஆப்ரிக்க யானைகள்

இப்போது தாய் யானையின் கண் முன்னே இருக்கிற ஒரே விஷயம் ஒட்டுமொத்த யானைக் கூட்டத்தையும் அதுதான் வழி நடத்தியாக வேண்டும். ஏனெனில் அதற்குத்தான் போக வேண்டிய பாதையின் வழி தெரியும். அதன் தலைமையில்தான் யானைகள் பயணத்தைத் தொடங்கின. ஏற்கெனவே சிங்கங்களின் தாக்குதலில் எள்ளாவை இழந்திருக்கின்றன. இப்போது உடனிருக்கும் இன்னொரு குட்டி யானை பூமாவை காப்பாற்றியாக வேண்டும். தொடர்ந்து அந்த வனத்தில் இருப்பது ஆபத்து என்பதை உணர்கிற மான்ஸா தன்னுடைய தும்பிக்கையால் நில அதிர்வுகளை அளவிடுகிறது. சிறுது தூரத்தில் குறைந்த நில அதிர்வுகளை மான்ஸா உணர்கிறது. உடனே கூட்டத்தை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றது. ஒரு நாளைக்கு 300 பவுண்ட்ஸ் உணவும் 150 லிட்டருக்கு அதிகமான நீரும் எடுத்துக் கொள்ள வேண்டிய யானைகள் உணவுக்காகவே தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிடுகின்றன. ஏழு டன் கொண்ட மான்ஸா முன்னே செல்ல பின்னால் அதன் குடும்பம் பின் தொடர்கிறது. காய்ந்து போன வனங்கள் மட்டுமே கண் முன்னே இருக்கிறது. உணவோ நீரோ அடுத்த பத்து மைல்களுக்கு இல்லை என்பதை உணர்கிற மான்ஸா வேகமாக நடக்க ஆரம்பிக்கிறது. அவை இருக்கிற வனத்தில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. யானைகளைப் போல உணவு தேடி அலைகிற சிங்கங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு யானைகளை வேட்டையாடுவது இன்னும் சுலபம். அவற்றுக்கும் குட்டிகள் இருக்கின்றன. யாரையும் தனியாக விடாத மான்ஸா மொத்த கூட்டத்தோடு பயணிக்கிறது. இப்போது யானைகளுக்குத் தண்ணீர் வேண்டும், அடிக்கிற வெயிலுக்குக் காய்ந்து போன நிலங்கள் கரடு முரடாக வெடித்திருக்கிறது. உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் சேர்த்தே மழையும் வெயிலும் அடிக்கிறது, இதில் சிங்கம் யானை என்றெல்லாம் வேறுபாடு இல்லை. அடிக்கிற வெயிலில் யானைகள் சோர்ந்து போகின்றன. குட்டி யானை வெயில் தாங்காமல் மான்ஸாவின் காலுகளுக்கு அடியில் நடந்து வருகிறது. தூரத்தில் பட்டுப்போன மரம் கொஞ்சமாக நிழல் கொடுப்பதை பார்க்கிற மான்ஸா கூட்டத்தோடு அங்கு இளைப்பாறுகிறது.வெட்ட வெளி பொட்டலில் ஒரு பட்டுப்போன மரத்தின் நிழலில் மொத்த யானைகளும் நிழலுக்கு இளைப்பாற முயல்கின்றன. 

மான்ஸா தண்ணீர் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்து நீர் நிலைக்குக் கூட்டிச் செல்கிறது. 500 மீட்டருக்கு அப்பால் நீர் நிலையைப் பார்க்கிற மொத்த யானைக் கூட்டமும் அம்மாவைப் பார்த்த பிள்ளையைப் போல ஓடுகின்றன. தண்ணீர் அருந்திவிட்டு தண்ணீரில் விழுந்து புரள்கின்றன. ஆற்றில் இருக்கிற சகதியை அள்ளி  உடலெங்கும் பூசிக் கொள்கின்றன. மான்ஷா சகதியில் படுத்திருக்க பூமா அதன் மீது ஏறி சகதியைப் பூசி விளையாடுகிறது. வெயிலிலிருந்தும், பூச்சிகளின் கடியிலிருந்தும் தப்பித்துக் கொள்ள இருக்கிற ஒரே வழி சகதியை அள்ளிப் பூசிக்  கொள்வதுதான். 100 டிகிரி வெயிலில் அடுத்துப் பல மைல்களுக்குப் பயணித்தாக வேண்டும். பயணத்தில் அடுத்து எத்தனை மைல்கல் கடந்து நீர் நிலைகளை யானைகள் பார்க்குமென்பது  உறுதியில்லை. எனவே, தண்ணீரில் இருக்கிற மொத்த கூட்டத்தையும் அரை மணி நேரம் கழித்து மீண்டும் அழைத்துக்கொண்டு மான்ஸா அங்கிருந்து பயணத்தைத் தொடங்குகிறது. 

வீடியோ கேமில் அடுத்தடுத்த நிலைகளைக் கடக்க சந்திக்கும் ஆபத்துகளைக் கடப்பதுபோல் இல்லை. யானைகளின் ஒவ்வொரு நாளும் கடும் ஆபத்தானவை. அடுத்தடுத்த பயணத்தில் இன்னும் அநேக ஆபத்துகள் இருக்கின்றன, இலக்கை நோக்கிய பயணத்தில் யானைகளின் கூட்டம் ஆற்றைக் கடக்க வேண்டும். சாதாரணமாக யானைகள் ஆறுகளைக் கடந்து விடும். ஆனால், இப்போது குட்டி யானையும் இருக்கிறது. நிலமோ நீரோ யானைகளுக்கு ஆபத்து எப்போதும் ஒரே வடிவில் வருவதில்லை. இப்போது கடக்க வேண்டியது ஆற்று முதலைகளை, பெரிய உணவின்றி இருக்கிற முதலைகள் குட்டிகளை குறிவைத்து எளிதாக வீழ்த்திவிடும். முதலைக்கு நீரில் பலம் அதிகமென்பதை யானைகளும் உணர்ந்திருந்தன. நீரின் போக்கு அதிகமாக இருக்கிறது மான்ஸாவைப் பின் தொடர்ந்து ஒவ்வொரு யானைகளும் ஆற்றில் நடக்கின்றன. குட்டி யானை முழுவதும் நீரில் மூழ்கி தும்பிக்கை மட்டுமே வெளியே தெரிகிறது. பின்னால் வரும் யானை குட்டி யானை மூழ்கி விடாமல் இருக்க அதனுடைய கால்களால் தள்ளி விட்டுக்கொண்டே வருகிறது. முதலைகள் யானைகள் இருக்கிற இடத்துக்கு வருவதற்குள் மான்ஸா எல்லா யானைகளையும் கரையேற்றி விடுகிறது. ஆனால், இன்னொரு முறை ஆற்றைக் கடக்க வேண்டி நேர்ந்தால் உயிரிழப்பு நிச்சயம் என்பதுபோல முதலைகள் தண்ணீரில் இருந்து முகத்தை நீட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

ஆப்ரிக்க யானை

 

வனத்தைக் கடந்து ஒரு பரந்த வெளிக்கு மொத்த யானைகளும் வந்து சேருகின்றன. அந்த வெளி எந்த ஒரு பொருளையோ உயிரையே தன்னகத்தே கொண்டதில்லை. மிகப் பெரிய பாலைவனம் அது. 1000 அடிக்குப் புழுதி புயல் அடிக்கிறது. வனத்தில் சிங்கம் நீரில் முதலை என எதிர் கொண்டு எளிதில் தப்பி வந்த யானைகள் கூட்டம் புழுதி புயலை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. வேறு வழி இல்லை, புயலையும் சூழலையும் எதிர் கொண்டாக வேண்டும். ஒவ்வொரு புழுதி சுழலும் 1000 அடிக்கும் அதிகமாக இருக்கிறது. யானைகளின் கூட்டத்தை சுற்றி அன்கொன்றும் இங்கொன்றுமாக புழுதி சுழல் உருவாகிறது. சுழலில் எந்த யானையும் சிக்கிவிட கூடாது என்பதால் மான்ஷா முதலில் செல்ல அதனைப் பின் தொடர்ந்து  ஒன்றின் பின் ஒன்றாக யானைகள் பின் தொடர்கின்றன. ஆனாலும் புழுதி புயலும் சுழலும் யானைக் கூட்டத்தை நோக்கி வருகிறது. மிக மிக எச்சரிக்கையாய் இருக்கிற யானைக் கூட்டத்தை புயல் தாக்குகிறது. சில அடிகளுக்கு முன்னாள் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்குப் புயலின் தாக்கமிருக்கிறது. ஒளியை மறைக்கும் அளவிற்குப் புழுதி அந்த இடத்தை முழுவதும்  ஆக்கிரமித்துவிடுகிறது. மான்ஷா தன்னுடைய குட்டி பூமாவுடன் குடும்பத்திலிருந்து பிரிந்து வேறு வழி மாறிவிடுகிறது. கூட்டத்திலிருந்த எட்டு வயது ஆண் யானை ஒன்றும் புயலில் சிக்கி வழி  மாறிவிடுகிறது.  மற்ற யானைகள் கூட்டமாக வேறு ஒரு வழியில் பிரிந்து செல்கின்றன. புழுதி புயல் ஓய்ந்ததும் கூட்டத்தில் மான்ஸா இல்லை என்பதை உணர்கிற எல்லா யானைகளும் பதறி பிளிற ஆரம்பிக்கின்றன. பாலைவனத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கின்றன. கூட்டமாக இருப்பவை எப்படிப் பயணிப்பது எனத் தெரியாமல் பிளிறுகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட ஒற்றை யானை எங்கே செல்வதென தெரியாமல் தன்னுடைய குடும்ப யானைகள் இருக்கிற திசைக்கு  எதிர்த் திசையில் பயணிக்கிறது. மிகப் பெரிய மணல் பரப்பில் தனியாக நடக்கிறது. யானைகளின் தடத்தை கண்டுபிடிக்க முயல்கிறது. முழுவதும் புழுதியால் சூழ்ந்திருப்பதால் யானைகளின் வாசனையைக் கணிப்பதில் தாமதமாகிறது. பிரிந்த யானை சிங்கங்கள் இருக்கிற திசையை நோக்கி மீண்டும் செல்ல ஆரம்பிக்கிறது. ஒட்டு மொத்தமாக இருக்கிற யானைகளுக்கு இப்போது தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தப்பிப் பிழைக்க முடியும். பாதங்கள் கடும் வெயிலில் நிற்க முடியாமல் தடுமாறுகிறது. ஒரு கால் மாற்றி இன்னொரு காலில் நிற்க முயல்கின்றன. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாய் இருக்கிறது. நாக்கு, உடல், இடம், பாதம் என எல்லாம் வறண்டிருக்கிற இடத்தில் தப்பி பிழைத்திருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதற்கு யானைகளின் சர்வைவல் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

எத்தனை இன்னல்கள் இருந்தாலும் இலக்கை அடைந்ததாக வேண்டும். மான்ஸா தன்னுடைய  தும்பிக்கையைத் தூக்கி மற்ற யானைகளின் சத்தத்தையும், அதிர்வுகளையும் ஆழ்ந்து கவனிக்கிறது. வெயிலில் நடந்து கலைத்திருப்பதால் இப்போதைக்குத் தண்ணீர் தேவை என்பதை உணர்கிறது. பூமாவிற்கு உடனடியாக நீர் தேவை. இல்லையெனில் பூமாவால் மேற்க்  கொண்டு நடக்க முடியாது என்பதை மான்ஸா குட்டியின் நடவடிக்கையில் தெரிந்து கொள்கிறது. பாலைவனத்தின் அலைந்து திரிகிற இரண்டாவது நாள் இன்னும் சில மைல்கல் நடந்தால் மட்டுமே தண்ணீரைப் பார்க்க முடியும் என்பதை உணர்கிற மான்ஸா  பூமாவை தட்டி கொடுத்து நடக்க வைக்கிறது. அன்றைய பொழுதின் மாலையில் மான்ஸா பாலைவனத்தை கடந்து சதுப்பு நில பகுதிக்கு வருகிறது. கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை தவறுதலாக மீண்டும் வந்த பாதையில் செல்கிறது. கூட்டத்தைத் தேடி சிங்கங்கள் இருக்கிற பகுதிக்குள் செல்கிறது. அங்கிருக்கிற சிங்கங்கள்தான் அந்த வனப்பகுதியின் கேட் கீப்பர்ஸ். தனிமையில் சிக்கி கொள்கிற குட்டியானையை அவை எளிதாக வீழ்த்தி உணவாக்கிக் கொல்கின்றன. உணவுத் தேடி போகிற தங்களின் பயணத்தில் இரண்டாவது யானை பலி. இன்னொரு பக்கம் கூட்டமாகப் பிரிந்த யானைகளும் தண்ணீரின் வாசனையை முகர்ந்து அதை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றன. மான்ஸா தண்ணீர் இருக்கிற பகுதியை நோக்கி நடக்க, கூட்டமாக இருக்கிற யானைகள் மான்ஸா வருகிற திசையை நோக்கி வர ஆரம்பிக்கின்றன. மான்ஸா சத்தமாக பிளிறியதில் கூட்டமாக இருக்கிற யானைகள் மான்ஸாவை கண்டு கொள்கின்றன. அவை மான்ஸாவின் குரலுக்கு பதில் சத்தம் எழுப்புகின்றன. பிரிந்த மான்ஸா மீண்டும் கூட்டத்தோடு இணைகிறது. தண்ணீரைக் கண்டதும் கூட்டமாகத் தண்ணீரில் விழுந்து புரள்கின்றன. நீர் நிலையில் எல்லா யானைகளும் ஒன்றாக நீர் அருந்துகின்றன. நீர் அருந்தியதும் உணவு தேடி அங்கிருக்கிற சதுப்பு நில காடுகளுக்குள் நுழைகின்றன. 

தண்ணீர் அருந்தும் ஆப்பிரிக்க யானைகள்


இங்கும் யானைகளுக்குச் சிங்கங்களால் ஆபத்து இருக்கிறது. சிங்கங்கள் வேட்டையாடுவதில் அனுபவம் வாய்ந்தவை. கூட்டமாக இருக்கிற யானைகளைப் பிரித்து அதில் ஒன்றை வேட்டையாடக் காத்திருக்கின்றன. செடி கொடிகளை உடைத்து உணவு உண்கிற மான்ஸா தனக்கு முன்னால் ஒரு  சிங்கம் அமர்ந்திருப்பதைப் பார்த்து உடலைச் சிலுப்புகிறது. மற்ற யானைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கிறது. ஆனால், சிங்கங்கள் தங்களுக்கான உணவை அவை தேர்ந்தெடுத்துவிட்டன. சிங்கங்கள் மான்ஸாவோடு இருந்த பூமாவை குறி வைக்கின்றன. முன்பு இழந்ததைப் போல இன்னொரு மகளையும்  இழக்க இப்போது மான்ஸா தயாராக இல்லை. மொத்தக் கூட்டமும் பூமாவைச் சுற்றி அரண் அமைக்கின்றன. மான்ஸா கோபத்தோடு சிங்கத்தை அங்கிருந்து துரத்துகிறது. சூழ்நிலை சாதகமாக இல்லையென்பதை உணர்கிற சிங்கங்கள் தற்காலிகமாக அங்கிருந்து கிளம்புகின்றன. தொடர்ந்து அங்கிருந்தால் ஆபத்து என்பதை உணர்கிற மான்ஸா மொத்தக் கூட்டத்தையும் அங்கிருந்து கிளப்பத் தயாராகிறது. ஆனால், சிங்கங்களை ஏமாற்றி அங்கிருந்து கிளம்புவது சாதாரண விஷயமில்லை. எல்லா யானைகளும் பூமாவை அரண் அமைத்துக் காப்பதால் இப்போது சிங்கங்கள் தங்களுடைய இலக்கை மாற்றி அமைக்கின்றன. ஒரு சிங்கம் என்ன நடந்தாலும் சரி என்பதுபோல யானைக் கூட்டத்துக்குள் புகுந்துவிடுகிறது. அதற்குப் பின்னால் இன்னும் இரண்டு சிங்கங்களும் பாய்கின்றன. யானைக் கூட்டம் சிதற ஆரம்பிக்கிறது. மான்ஸா தன்னுடைய குட்டியைப் பத்திரமாக பார்த்துக்கொள்கிறது. பூமா பயத்தில் கத்துகிறது. சிங்கங்கள் கூட்டத்திலிருந்த ஒரு பெண் யானையை விரட்ட ஆரம்பிக்கின்றன. பெண் யானை உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வனத்துக்குள் ஓடுகிறது. மொத்த யானைக் கூட்டமும் சிதறியிருப்பதால் என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியாமல் இருக்கின்றன. சிங்கங்கள் அருகில் இல்லை என்பதை உணர்ந்த  மான்ஸா குட்டியையும் மற்ற யானைகளையும் மீண்டும் ஒன்று சேர்க்கிறது.  பெண் யானையை சிங்கங்கள் துரத்திக் கொண்டு வனத்துக்குள் ஓடுகின்றன.

பெண் யானையைக் காணவில்லை என்பதை உணர்கிற இன்னொரு யானை பிளிறுகிறது. இப்போது வேறு வழியில்லை, இருக்கிற இடத்தைக் கடந்து போயாக வேண்டும், இழப்புகள் போதும் இனியொரு இழப்பு வேண்டாம் என்பதில் மான்ஸா கவனமுடன் இருக்கிறது. எல்லா யானைகளையும் ஒன்று சேர்த்து சூழலை உணரவைக்கிறது. மான்ஸா முன்னே செல்ல யானைகள் அதைப் பின் தொடர்கின்றன. பயணம் தொடங்கிய 37-வது  நாள் அவை திட்டமிட்டபடி பசுமையான  இலக்கை அடைகின்றன. யானைகள் எல்லாம் ஓரிடத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது ஒரு யானையின் சத்தம் ஒட்டுமொத்த யானைக் கூட்டத்தையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அந்தக் குரல் கூட்டத்திலிருந்து பிரிந்த பெண் யானையின் குரல் என்பதை மான்ஸா உணர்ந்துகொண்டு சத்தம் வந்த பகுதியை நோக்கி ஓடுகிறது. மற்ற யானைகளும் அதன் பின் ஓடுகின்றன. மரத்துக்குப் பின்னால் இருந்து சிங்கங்கள் பிரித்துக்கொண்டுபோன அந்தப் பெண் யானைக் கூட்டத்தை நோக்கி சந்தோஷத்தில் பிளிறிக்கொண்டே  ஓடி வருகிறது. ஆனால், அதன் தும்பிக்கை பாதியாக வெட்டப்பட்டிருந்தது, அதனுடைய வாலும் முழுதாக  துண்டிக்கப்பட்டிருந்தது. சிங்கக் கூட்டத்திலிருந்து எப்படியோ தப்பி வந்து விட்டது. கூட்டத்திலிருந்த ஒரு யானை அதன் அருகில் சென்று பிழைத்திருப்பதை நினைத்து மகிழ்கிறது. வெட்டப்பட்ட தும்பிக்கையை தன்னுடைய தும்பிக்கையால் தொட்டு ஆறுதல் சொல்கிறது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிற மான்ஸாவின் கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்க்கிறது. எல்லா யானைகளும் நீர் நிலை ஒன்றில் நீர் அருந்துகின்றன. குட்டி யானை பூமா தும்பிக்கை இல்லாத பெண் யானையின் முதுகில் தண்ணீரை எடுத்துப் பீய்ச்சி அடிக்கிறது….

சில உயிர்களுக்குப் பிழைப்பே பிழைத்திருப்பதுதான்...

தொலைக்காட்சியில் தொடராக வந்த இந்த நிகழ்வுகள், இந்த ஆண்டு டாக்குமென்ட்ரியாக வெளியாக இருக்கிறது. 

 


டிரெண்டிங் @ விகடன்