ஒரு ஐஸ்கட்டியில் மட்டும் 12,000 பிளாஸ்டிக் துகள்கள்... நடுக்கடலையும் நாம் விட்டுவைக்கவில்லை! | Arctic sea ice contains huge quantity of microplastics, a new study find

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (27/04/2018)

கடைசி தொடர்பு:16:17 (27/04/2018)

ஒரு ஐஸ்கட்டியில் மட்டும் 12,000 பிளாஸ்டிக் துகள்கள்... நடுக்கடலையும் நாம் விட்டுவைக்கவில்லை!

ஒரு லிட்டர் கடல் நீர்ப் பனிக்கட்டியில் மட்டும் 12,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன. இது ஆர்டிக் கடற்பகுதி முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. ஆய்வாளர்கள் நினைத்த அளவை விட இது மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது.

ஒரு ஐஸ்கட்டியில் மட்டும் 12,000 பிளாஸ்டிக் துகள்கள்... நடுக்கடலையும் நாம் விட்டுவைக்கவில்லை!

மனித இனம் மட்டும்தான் பூமியில் இருக்கும் பல்வேறு வளங்களை அதீதமாகப் பயன்படுத்துகிறது. பூமியை அதீதமாக மாசுபடுத்துவதும் நம் மனித இனம்தான். எந்தளவிற்கு எடுக்கிறமோ அந்தளவிற்குக் கொடுக்க வேண்டும் என ஒரு சொற்றொடர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் கொடுப்பதெல்லாம் அனைத்து உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் குப்பைகளும் மாசுக்களும்தாம். பூமியில் மனிதன் அதிகம் வாழாத இடம் வரை இது பரவியுள்ளது. அதற்கான ஆய்வு முடிவு ஒன்று கடந்த ஏப்ரல் 24ல் வெளியாகியுள்ளது. பூமியின் வடதுருவப் பகுதியான ஆர்டிக் கடற்பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மைக்ரோபிளாஸ்டிக் எனச் சொல்லப்படும் நுண்ணிய அளவிலான பிளாஸ்டிக்குகள் அதிகம் காணப்படுகிறது. யாரும் வாழாத பனிப் பரப்பைக் கூட நமது பிளாஸ்டிக்குகள் விட்டு வைக்கவில்லை. 

டாக்டர் இல்கா பீகீன்(Dr.Ilka Peeken) விஞ்ஞானி குழுவினர் துருவப் பகுதியின் ஆய்வு நிறுவனமான ஆல்பிரெட் வெகெனெர் இன்ஸ்டிட்யூட் ஃபார் போலார் அண்ட் மரைன் ரிசர்ச் ( Alfred Wegener Institute for Polar and Marine Research) இல் ஆர்டிக் கடற்பகுதியின் பனிக்கட்டிகளைச் சேகரித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆர்டிக் கடலில் ஐந்து மண்டலங்களில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவானது கடந்த ஏப்ரல் 24ல் ஜானர்ல் நேச்சர் கம்யூனிகேஷன் (journal Nature Communications) எனும் அறிவியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது. இந்த முடிவுகள் மனிதன் அலட்சியத்தன்மையால் விளையும் அபாயங்களை அடுக்குகிறது. மத்திய ஆர்டிக் கடல் பகுதியிலிருந்து வடக்கு அட்லான்டிக் கடற்பகுதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆர்டிக் கடற்பகுதியின் பெரும்பாலான பகுதி பனியாக உறைந்துதான் காணப்படுகிறது. ஒரு லிட்டர் கடல் நீர் பனிக்கட்டியில் மட்டும் 12,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன. இது ஆர்டிக் கடற்பகுதி முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. ஆய்வாளர்கள் நினைத்த அளவை விட இது மூன்று மடங்கு அதிகம்.

பிளாஸ்டிக்

Photo : Alfred-Wegener-Institut/Rüdiger Stein

இந்தப் பனிக்கட்டியை ஆராயும்போது அப்பகுதியில் மனிதர்களின் தடங்களைக் காண முடிகிறது. அதனைப் பின்பற்றி சென்றால் சைபீரியாவின் மீன்பிடிக் கப்பல்களும் மற்றவையும் பிளாஸ்டிக் மாசுக்குக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் இதுமட்டும் இவ்வளவு பெரிய பிரச்னைக்குக் காரணமாக இருக்க முடியாது. தினமும் பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து மிகப்பெரிய குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கும் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான கிரேட் பசிபிக் கார்பேஜ் பேட்ச்சும் (Great Pacific Garbage Patch) இதற்குக் காரணம். ஆர்டிக் பகுதியின் பிளாஸ்டிக்கின் மூலங்களில் இவையும் ஒன்று என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் மட்டும் வருடத்துக்கு 80,000 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்கின்றன. தற்போதைய நிலையில் பூமியின் பல்வேறு நீர்நிலைப் பரப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக் காணப்படுவது சாதாரணமாக இருக்கிறது. இதன் விளைவுதான் ஆர்டிக் கடற்பகுதியின் காணப்படும் மைக்ரோ பிளாஸ்டிக். 

ஆர்டிக் பகுதியில் வாழக்கூடிய கடல்வாழ் உயிரிகள் இந்த நுண்ணிய துகள்களை உட்கொள்ளும் அபாயம் அதிகமாகவே உள்ளது. இதனால் அப்பகுதியின் உணவுச்சங்கிலியே பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தப் பனிக்கட்டிகள் உருகும்போது பிளாஸ்டிக் இல்லாத கடற்பரப்பிற்கு கூட இந்த மைக்ரோ பிளாஸ்டிக் சென்றுவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் இதனைக் கவனமாகக் கையாள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். போரியர்-உருமாற்ற அகச்சிவப்பு நிறமாலை (Fourier-transform infrared spectrometer) என்ற கருவியின் மூலம் சேகரிக்கப்படும் பனிக்கட்டியானது மிகவும் ஆழமாக ஊடுருவி நுண்ணிய துகள் வரை ஆய்வு செய்யப்படுகிறது. இதன் மூலம் பனிக்கட்டியில் எந்த மாதிரியான பிளாஸ்டிக்குகள் இருக்கின்றன, எவ்வளவு இருக்கின்றன என்பதையெல்லாம் துல்லியமாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். 

ஆர்டிக் கடல்

Photo : Alfred-Wegener-Institut/Rüdiger Stein

17 வகையான பிளாஸ்டிக் பனிக்கட்டியில் காணப்படுகின்றன. கப்பல்களுக்குப் பூசப்படும் வண்ணத் துகள்கள், பிளாஸ்டிக் இழைகள், சிகரெட்டின் பட்டுகள், மீன்பிடி வலையின் பிளாஸ்டிக் துகள்கள், நைலான் துகள்கள் போன்றவைதாம் அதிகம் காணப்படுகின்றன. மேலும் பெரும்பாலான பிளாஸ்டிக் துகள்கள் 20 மில்லி மீட்டருக்கும் குறைவாக இருக்கின்றன. இந்த பிளாஸ்டிக் துகள்கள் 11 மைக்ரான் அளவுக்கு  மிகவும் மெல்லியது. கடற்பரப்பில் எளிதில் கலந்து விடக்கூடியவை. இதனைச் சுத்தப்படுத்துவது எளிதல்ல. உலகம் முழுக்க பிளாஸ்டிக் பயன்பாடு என்பது அபரிதமாக இருக்கிறது. அதனால் ஏற்படும் சூழலியல் விளைவுகளும் அதிகமாகவே இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உட்பட பல்வேறு கழிவுகளும் கடலில்தான் கலக்கின்றன. பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்துவது என்பது பல்வேறு பெரிய நாடுகளாலேயே முடியாத காரியமாக இருக்கிறது. பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் இதனால் இறந்துள்ளன. ஆர்டிக் பகுதியில் இதுவரை எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றாலும் இனிமேல் அப்படி எதுவும் நிகழாமல் இருக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக தடை செய்வது இயலாத காரியமாக இருந்தாலும் அதனை மறுசுழற்சி செய்வது, பிளாஸ்டிக் தயாரிப்பில் இருக்கும் ஒழுங்குமுறைகளை இன்னும் கடுமையாக்குவது போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். 


டிரெண்டிங் @ விகடன்