வெளியிடப்பட்ட நேரம்: 07:52 (30/04/2018)

கடைசி தொடர்பு:10:51 (30/04/2018)

உங்களுக்காகக் கடவுள் அனுப்பிய தேவதையின் பெயர் தெரியுமா? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

உங்களுக்காகக் கடவுள் அனுப்பிய தேவதையின் பெயர் தெரியுமா? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

உன்னை அறிந்தால்

'டவுள் அனுப்பும் தேவதைகளுக்கு இறக்கைகள் இருப்பதில்லை’ என்பது ஓர் ஐரோப்பியப் பழமொழி. இது தேவதைகள் சூழ்ந்த உலகம். அவர்களின் ஆசீர்வாதத்தால்தான் நம் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. தத்தித் தவழும் காலம் தொடங்கி ஆளாகும் நாள் வரை அவர்களின் உதவியில்லாமல் நம் வளர்ச்சி சாத்தியமில்லை. நம் உடல்நலக் கோளாறுகளுக்கு உதவுவதிலிருந்து, மனப் பிரச்னையின்போது மயிலிறகால் வருடுவதுபோல் ஆறுதல் வார்த்தைகள் தருவதுவரை தேவதைகளின் அரவணைப்பு மகத்தானது. உங்களுக்காக கடவுள் அனுப்பிவைத்திருக்கும் தேவதை யார் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கேள்வியைக் கேட்டால் யாராலும் உடனே பதில் சொல்லிவிட முடியாது. அந்தப் பதிலைக் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறது இந்தக் கதை. 

ஒரு குழந்தை பூமியில் வந்து பிறப்பதற்குத் தயாராக இருந்தது. சொர்க்கத்திலிருந்த அந்தக் குழந்தை கடவுளிடம் கேட்டது... ''சாமி... நான் இவ்ளோ குட்டியா இருக்கேன். எனக்கு உதவி செய்றதுக்கும் ஆள் இல்லை. நான் எப்பிடி பூமிக்குப் போய் பொழைக்கப் போறேன்?’’ 

கடவுள் சொன்னார்... 'கவலைப்படாதே கண்ணு. என்கிட்ட நிறைய தேவதைகள் இருக்காங்க. அவங்கள்ல ஒரு தேவதையை உனக்காகத் தேர்ந்தெடுத்துவெச்சிருக்கேன். அந்த தேவதை உனக்காக பூமியில காத்துக்கிட்டிருக்கு. அது உன்னை நல்லா பார்த்துக்கும்.’’ 

சொர்க்கம்

''ஆனா கடவுளே... இங்கே, சொர்க்கத்துல நான் எதையும் செய்யறதில்லை. என்ன... பாட்டுப் பாடுறேன், சிரிக்கிறேன். என் சந்தோஷத்துக்கு அது போதுமானதா இருக்கு. ஆனா, அங்கே பூமியில...’’ 

''தினமும் உன்னுடைய தேவதை உனக்காகப் பாட்டுப் பாடும்; சிரிக்கும். அந்த அன்பை நீயும் அனுபவிப்பே. மகிழ்ச்சியாத்தான் இருப்பே.’’ 

''சரி... அங்கே மனுஷங்க என்கிட்ட பேசுவாங்கல்ல? அவங்க பேசுற மொழி எனக்குத் தெரியாத நிலையில நான் எப்படி அதைப் புரிஞ்சுக்குவேன்?’’ 

''இதுவரைக்கும் நீ கேட்டேயிருக்காத அழகான, இனிமையான வார்த்தைகளை தேவதை உன்கிட்ட பொறுமையாகவும் அக்கறையோடவும் சொல்லித்தரும். நீ எப்படிப் பேசணும்கிறதையும் அதுவே உனக்குக் கத்துத் தரும்.’’ 

''அது இருக்கட்டும். உங்ககிட்ட பேசணும்னா, நான் என்ன செய்யறது?’’ 

''தேவதை உன் கைகளைக் குவிச்சு எப்பிடி என்னை வணங்கணும், எப்பிடி பிரார்த்தனை பண்ணணுங்கிறதையெல்லாம் சொல்லித் தரும்.’’ 

''அப்புறம்... நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். பூமியில ரொம்ப மோசமான மனுஷங்க நிறைய பேர் இருக்காங்களாமே... என்னை யார் காப்பாத்துவா?’’ 

''உன்னோட தேவதை  உன்னைப் பாதுகாக்கும்... தன் உயிரைக் குடுத்தாவது எந்தச் சூழ்நிலையிலும் உன்னைக் காப்பாத்தும்.’’ 

அம்மா கதை

''ஆனாலும், இனிமே உங்களை என்னால பார்க்க முடியாதுனு ரொம்ப துயரமா இருக்கு கடவுளே...’’ 

''வருத்தப்படாதே.  உன் தேவதை எப்பவும் என்னைப் பத்தியே உன்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்; எப்பிடி என்கிட்ட திரும்பி வர்றதுங்கிறதையும் சொல்லித் தரும். அதோட, நானும் உன்கூடவேதானே இருக்கப் போறேன்.’’ 

சொர்க்கத்தில் இப்போது முழு அமைதி. பூமியிலிருந்து குழந்தையை அழைப்பதற்கான குரல்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. 

''நன்றி கடவுளே. நான் கிளம்பவேண்டிய நேரம் வந்துடுச்சு. தேவதை, தேவதைனு சொன்னீங்களே... அதோட பேர் என்ன?’’ 

''அதோட பேர் முக்கியமில்லை. உனக்குக் கூப்பிடணும்னு தோணிச்சுன்னா, இப்பிடிக் கூப்பிடு... 'அம்மா..!’ ’’

***   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்