மல்லாக்கப் படுத்து சுறா மீனையும் திமிங்கிலத்தையும் பார்க்கலாம்... கடலுக்கடியில் ஒரு ரிசார்ட்! | world's first undersea villa in maldives let you sleeps with sharks

வெளியிடப்பட்ட நேரம்: 09:03 (30/04/2018)

கடைசி தொடர்பு:10:00 (30/04/2018)

மல்லாக்கப் படுத்து சுறா மீனையும் திமிங்கிலத்தையும் பார்க்கலாம்... கடலுக்கடியில் ஒரு ரிசார்ட்!

நீங்கள் இந்த ரிசார்ட்டிற்குள் சென்றால் சுறா மீன்கள், டால்பின்கள் இன்னும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் உங்களைச் சுற்றி அங்குமிங்கும் போய்க்கொண்டிருக்கும். கடலுக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வைத் தரும் அளவிற்கு ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்நேரத்திலும் சுறா மீன்கள் கூட உங்கள் மண்டையின் மேல் வந்து முட்டிக் கொண்டிருக்கலாம்.

மல்லாக்கப் படுத்து சுறா மீனையும் திமிங்கிலத்தையும் பார்க்கலாம்... கடலுக்கடியில் ஒரு ரிசார்ட்!

சாகசப் பயணங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் சிந்துபாத்தும், விக்ரமாதித்யனும் கற்பனையாக இருந்தாலும் பலரின் நினைவுகளோடு உயிரோட்டமாய் இருக்கிறார்கள். கதைகளில் வரும் சாகசப் பயணங்கள் சில நேரங்களில் சாத்தியமாகலாம். ஆனால், அது எல்லோருக்குமானதாக இருக்காது. அப்படியான ஒரு விஷயம்தான் மாலத்தீவில் நடக்க இருக்கிறது. உலகிலேயே முதன்முறையாக கடலுக்கடியில் ரிசார்ட் (Undersea Resort) ஒன்று அமைய இருக்கிறது. ஸ்கூபா டைவிங், பாரசூட் கிளைடிங், ஆழ்கடலுக்குள் செல்வது, மலையேறுதல் போன்ற பல்வேறு சாகசப் பயணங்களை விரும்பியோருக்கு இதுவும் ஒரு சுவையான செய்தியாக இருக்கும். 

கொன்ராட் மாலத்தீவு ரங்காலி ஐஸ்லன்ட் (Conrad Maldives Rangali Island) எனும் ஹோட்டல் இந்த கடலுக்கடி ரிசார்ட்டை அமைத்து வருகிறது. அதனுள் அமையவிருக்கும் பல்வேறு வசதிகளையும் அந்த ஹோட்டலின் அமைப்பையும் தற்போதே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இப்போதிருந்தே அந்த ஹோட்டலைப் புக் செய்யவும் ஆரம்பிக்கலாம் எனவும் சொல்லியிருக்கிறது. இதற்கு முன்னும் சில நாடுகளில் கடலுக்கடியில் மனிதர்கள் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிகமான ஆழத்தில் அமைக்கப்படும் ரிசார்ட் இதுதான். நீங்கள் இந்த ரிசார்ட்டிற்குள் சென்றால் சுறா மீன்கள், டால்பின்கள் இன்னும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் உங்களைச் சுற்றி அங்குமிங்கும் போய்க்கொண்டிருக்கும். கடலுக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வைத் தரும் அளவுக்கு ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்நேரத்திலும் சுறா மீன்கள் கூட உங்கள் மண்டையின் மேல் வந்து முட்டிக்கொண்டிருக்கலாம். இதயம் பலவீனமானவர்களுக்கு இந்த ரிசார்ட்டில் அனுமதி கிடையாது. முடிந்தளவு தைரியமான மனதுடன் சென்றால் நல்லது. 

ரிசார்ட்

(ITHAA UNDERSEA RESTAURANT)

PC: Conrad Hotels

ஒட்டுமொத்த கொன்ராட் ஹோட்டலின் கட்டமைப்பானது இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. கடற்பரப்புக்கு மேலே ஒன்றும் கடற்பரப்புக்கு கீழே ஒன்றும் என அமைந்துள்ளது. மொத்தமாக ஒன்பது பேர் இந்த ஹோட்டலில் தங்க முடியும். மேல்தளத்தில் இரண்டு படுக்கையறைகளும் இரண்டு வரவேற்பறையும் என இரண்டு வில்லாக்களின் அமைப்பைக் கொண்டிருக்கிறது. சூரிய உதயம், மறைவு இரண்டையும் ரசிக்கும் வண்ணம் அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதேப்போன்று கடலுக்கு கீழேயும் உள்ளது. ஆனால், படுக்கையறை வரவேற்பறை எனத் தனித்தனியாக கிடையாது. 16.4 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் 180 டிகிரியில் சுற்றிலும் பார்ப்பதற்கு வசதியாக ஒரே அறையாக வடிவமைத்துள்ளனர். இந்த ரிசார்ட்டானது கடற்சூழலுடன் இயைந்தவாறு இருக்குமளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலுக்கடியில் கட்டப்படுவதால் கடல் உயிரினங்களுக்கு எந்தவொரு தொல்லையோ பாதிப்போ ஏற்படாது எனக் கூறுகிறார் இந்த ரிசார்ட்டினை வடிவமைத்த அஹமத் சலீம் (Ahmed Saleem). கிரவுன் கம்பெனி எனும் கட்டடக்கலை வடிவமைப்பு (Crown Company) நிறுவனத்தை நடத்தி வரும் அஹமத் சலீம் மாலத்தீவின் முக்கியமான கட்டடக் கலை வடிவமைப்பாளர் ஆவார். மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முற்றிலும் வேறொரு அனுபவத்தை இந்த ரிசார்ட் மூலம் பெறுவார்கள். அதுமட்டுமில்லாமல் கடலுக்கடியிலும் சுற்றிப் பார்க்கும் புதிய பார்வையினையும் பெறுவார்கள் எனச் சொல்கிறார் அஹமத் சலீம். 
உலகிலேயே முதல் கடலுக்கடி ரிசார்ட் உருவாக்கியிருக்கும் கொன்ராட் ஹோட்டல்தான் 13 வருடங்களுக்கு முன்பு 2005ல் மாலத்தீவில் இதா (Ithaa) எனும் உலகிலேயே முதல் கடலுக்கடி உணவகத்தை (Undersea Restaurant) ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியே இந்த ரிசார்ட். திவேஹி (Dhivehi) மொழியில் இதா என்பதற்கு முத்துச் சிற்பி என்று பொருள். கடலுக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரிசார்ட்டுக்கு முராகா (Muraka) எனப் பெயரிட்டுள்ளனர். திவேஹி மொழியில் முராக் என்றால் பவளம் என்று பொருள். அந்தப்பகுதியில் பவளப்பாறைகளின் அளவும் அதிகமாக இருக்கிறது. இந்த முராகா ரிசார்ட்டில் பணியாளர்கள் தங்குவதற்கு மேல்தளத்தில் அறைகள் இருக்கிறது. சமையலறையும் மேல்தளத்திலேயே இருக்கிறது. 50,000 டாலர் என்பது முராகா ரிசார்ட்டின் குறைந்தபட்ச கட்டணமாக இருக்கிறது. இதுவும் மேல்தளத்துக்கு மட்டும்தான். கடலுக்கடியில் இருக்கும் ரிசார்ட் பகுதியின் கட்டணம் அதிகமாக இருக்கலாம். கடலுக்கடியில் தங்க ஆடம்பரமாய் செலவு செய்துதான் ஆக வேண்டும். இந்த ரிசார்ட்டானது நவம்பர் மாதம் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர். 

ரிசார்ட்

PC: Conrad Hotels

இந்தியாவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலிலும் அரபிக் கடலிலும் மாலத்தீவு அமைந்துள்ளது. தெற்காசியாவில் முக்கியமான சுற்றுலாத்தலம் மாலத்தீவு. தற்போது மாலத்தீவு நாடானது நெருக்கடி நிலையில் (Emergency) இருக்கிறது. அந்நாட்டின் அதிபர் அப்துல்லா யாமீன் (Abdulla Yameen) எமெர்ஜென்ஸியை அறிவித்துள்ளார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அரசுக்கு எதிராகப் பேசுபவர்களையும் விசாரணையின்றி கைது செய்து சிறையில் அடைக்கத் தொடங்கியிருக்கிறது அப்துல்லாவின் அரசு. இந்த அரசியல் சூழ்நிலைகளால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மாலத்தீவானது சுற்றுலா மூலம்தான் பெருவாரியான வருமானத்தைப் பெறுவதால் பொருளாதாரரீதியாகவும் பின்னடைந்துள்ளது. கடலுக்கடி ரிசார்ட்டின் மூலம் சுற்றுலா புதுப்பொலிவு பெறும் என நம்புகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்