வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (02/05/2018)

கடைசி தொடர்பு:15:43 (02/05/2018)

நீங்கள் ஒருவர் 99 பேருக்குச் சமம்... எப்போது தெரியுமா? உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

எளிய மனிதர்களின்  நம்பிக்கை எவ்வளவு பெரிய தத்துவத்துக்குச் சமம் தெரியுமா?

நீங்கள் ஒருவர் 99 பேருக்குச் சமம்... எப்போது தெரியுமா? உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

உன்னை அறிந்தால்

'திடமான நம்பிக்கையுள்ள ஒருவர், ஆர்வம் மட்டுமே கொண்ட 99 பேருக்குச் சமமானவர்’ - இங்கிலாந்து தத்துவவியலாளர் ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) அழகாகச் சொல்கிறார். 'நம்பிக் கெட்டவர் எவருமில்லை’ என்பது நம் முன்னோர்களின் மூதுரை. ஏதோ கருத்து வேற்றுமையில் பெற்றோர் நம்மைப் பிரிந்து போயிருக்கலாம்; பிள்ளைகள் நம்மைவிட்டு விலகிச் சென்றிருக்கலாம்; நண்பர்கள் மனக்கசப்பில் நம்மைத் தவிர்த்திருக்கலாம்; பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்காமலே போயிருக்கலாம்; வேலையை இழந்திருக்கலாம்... எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையைவிடாமல் பற்றிக்கொண்டிருப்பவர்களை, அவர்களின் உறுதியான அந்த மனப்பான்மையே காப்பாற்றிவிடும். பல அற்புதமான, கடினமான தத்துவங்களைப் புரிந்துகொள்ளக்கூட நம்பிக்கை உதவும். இந்த நம்பிக்கையைத்தான் பக்தி மார்க்கத்தில் 'சரணாகதி தத்துவம்’ என்று சொல்கிறார்கள். 'சாமி... நீதான் என்னைக் காப்பாத்தணும்’ என்று சரணடைந்து வீழ்கிற சாதாரண பக்தி. 'எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவான்’ என்கிற நம்பிக்கை. எளிய மனிதர்களின்  நம்பிக்கை எவ்வளவு பெரிய தத்துவத்துக்குச் சமம் என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை. 

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இறையியல் (Theological) பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கின்றன. அங்கே போய் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு மாணவர்கள் வருவார்கள். பின்னாள்களில் மதபோதகர்களாகி, தேவாலயங்களில் தாங்கள் புரிந்துகொண்ட இறையியல் தத்துவங்களை எளிமையாக்கி மக்களுக்கு விளக்கிச் சொல்வது இவர்களுடைய வேலையாக இருக்கும். 

விளையாட்டு கதை

அது, அமெரிக்காவிலுள்ள ஒரு இறையியல் கல்லூரி. அங்கே சில மாணவர்கள் படித்துவந்தார்கள். அந்த மாணவர்களில் ஒருவர் பெர்னார்டு ட்ராவேய்யில்லே (Bernard Travaieille). இறையியல் தத்துவங்களையும் பாடங்களையும் படிக்கும் நேரம் தவிர, மீதமிருக்கும் நேரத்தில் அந்த மாணவர்களில் சிலருக்கு ஒரு வழக்கம் இருந்தது. கல்லூரிக்கு அருகிலிருக்கும் மைதானத்தில் பேஸ்கெட் பால் விளையாடுவது. பெர்னார்டு இறையியல் கல்லூரியில் அந்த வருடம்தான் சேர்ந்திருந்தார். அவருக்கும் பேஸ்கெட் பால் விளையாடுவது மிகவும் பிடிக்கும். 

அந்த மைதானத்துக்கு ஒரு காவலாளி இருந்தார். அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்; தலை நரைத்த முதியவர். மாலை நேரத்தில் இவர்கள் வரும்போதெல்லாம் அந்த முதியவர் அன்போடு வரவேற்பார். அவர்கள் மைதானத்தில் விளையாடப் போனதும், தன் கையிலிருக்கும் புத்தகத்தை எடுத்துக்கொள்வார். எதைப் பற்றியும் கவலைப்படாமல், யாரைப் பற்றியும் யோசிக்காமல் படிக்க ஆரம்பித்துவிடுவார். மாணவர்கள் விளையாடிவிட்டு வந்ததும், அவர்களுக்கு சிரித்த முகமாக விடை கொடுப்பார். பிறகு, மைதானத்தின் வெளி கேட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். சில நாள்களாக அவரின் இந்த நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்தார் பெர்னார்டு. 

ஒருநாள் வழக்கம்போல மாணவர்கள் விளையாடி முடித்தார்கள். பெர்னார்டு, அந்த முதிய காவலாளியின் அருகே நின்றார். ''ஐயா... ஏதோ புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்தீங்களே... என்ன புத்தகம் அது?’’ 

''திருவெளிப்பாடு...’’ 

பேஸ்கெட் பால்

இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பெர்னார்டு. 'திருவெளிப்பாடு’ (Book of Revelation) என்பது, 'புதிய ஏற்பாடு’ நூலில் இருக்கும் ஒரு பகுதி. 'இதையெல்லாம் பாடமாகப் படிப்பதற்காக நாம் வந்திருக்கிறோம். இந்தப் பெரியவர் எளிதாக இதைப் படிக்கிறேன் என்று சொல்கிறாரே?!’

திரும்பவும் அவரிடம் பெர்னார்டு கேட்டார்... ''திருவெளிப்பாடா?’’ 

''ஆமாம் தம்பி. புதிய ஏற்பாடுல சொல்லப்பட்டிருக்குற அதே திருவெளிப்பாடுதான்.’’ 

''உங்களால அதுல என்ன சொல்லப்பட்டிருக்குனு புரிஞ்சுக்க முடியுதா?’’ 

''புரிஞ்சுதே...’’ 

''என்ன புரிஞ்சுது... அதுக்கு என்ன அர்த்தம்?’’ 

''வேற என்ன... 'இயேசுதான் வெற்றி பெறுவார்’ இதுதான் அர்த்தம்.’’

*** 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்