20 கி.மீ தூரம் செல்லும் உலகின் முதல் வயர்லெஸ் கம்யூனிகேஷன்..! - அமேசான் பழங்குடியினரின் அதிசயம் | Amazonian bora tribes use drumming language to communicate long distances

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (02/05/2018)

கடைசி தொடர்பு:10:56 (02/05/2018)

20 கி.மீ தூரம் செல்லும் உலகின் முதல் வயர்லெஸ் கம்யூனிகேஷன்..! - அமேசான் பழங்குடியினரின் அதிசயம்

போரா பழங்குடியின மக்கள் 20 கி.மீட்டர் வரைக்கும் ஒலியின் மூலம் தகவல்களைப் பரப்புகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ட்ரம் போன்ற இசைக்கருவிதான் இதற்குக் காரணம். அதன் மூலம் இவர்கள் எழுப்பும் ஒலியானது எளிதில் 20 கிமீட்டர் தூரத்திற்கு பயணிக்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் சாதாரண உரையாடலில் இருந்து முக்கியமான அறிவிப்புகள் வரை எல்லாவற்றுக்கும் இந்த ட்ரம்மின் மூலம் ஏற்படுத்தும் ஒலியைப் பயன்படுத்துகின்றனர்.

20 கி.மீ தூரம் செல்லும் உலகின் முதல் வயர்லெஸ் கம்யூனிகேஷன்..! - அமேசான் பழங்குடியினரின் அதிசயம்

இன்றைய நாள்களில் பக்கத்து ரூமில் இருப்பவரைக் கூப்பிடக்கூட போன் செய்கிறோம், வாட்ஸ்அப்பில் மேசேஜ் போடுகிறோம் இல்லையென்றால் மிஸ்டுகால் கொடுத்தே  கடுப்பேத்தி வரவைத்துவிடுகிறோம். இந்த இணையமும் செல்போன்களும் வந்தபிறகு கடல் கடந்து இருப்பவரைக்கூட தொடர்புகொள்வது அவ்வளவு எளிதாகிவிட்டது. ஆனால், இவையெல்லாம் இல்லாத காலத்தில் ஒருவர் மற்றவரைத் தொடர்புகொள்ள நிறைய வழிமுறைகளை வைத்திருந்தனர். எல்லாமே கொஞ்சம் கடினமானதாகத்தான் இருந்தன. செய்தி கொண்டு போன தூதுவன் ஒருவன் நெடுந்தூரம் ஓடியே இறந்ததில் உருவானதுதான் மாரத்தான் ஓட்டம். இப்படி வரலாறு நெடுக்க செய்தியைக் கடத்துவதைக் குறித்த நிறைய கதைகளும் தகவல்களும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இருபது, முப்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கோயிலில் வழிபாடு முடிந்தபின்தான் அன்றைய நாளை ஆரம்பிக்கும் மன்னர்களும் இருந்ததாகச் சொல்லுவதுண்டு. அந்த இருபது முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் செய்தியை எப்படி உடனே கடத்த முடியும் என ஆச்சர்யங்களும் கேள்விகளுமாய்த்தான் இந்தக் கதைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உண்மையாய் நடந்தவைதான். நாம் இன்றும் ஆச்சர்யப்படும் வகையில் அறிவியல்ரீதியாக முன்னேறியே இருந்துள்ளார்கள். ஆனால், இன்றும் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் உதவியின்றி பல மைல்கள் தொலைவுக்கு எளிதில் தொடர்பு கொள்கின்றனர் அமேசான் காடுகளில் வாழும் போரா (Bora) எனும் பழங்குடி மக்கள். 

அமேசான் காடுகளின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் போரா பழங்குடியின மக்கள் கொலம்பியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் பரவிக் காணப்படுகின்றனர். மனிதன் எழுப்பக்கூடிய ஒலியானது அதிகபட்சமாக 200 மீட்டர் வரை செல்லக்கூடியது. ஆனால், போரா பழங்குடியின மக்கள் 20 கிமீட்டர் வரைக்கும் ஒலியின் மூலம் தகவல்களைப் பரப்புகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ட்ரம் போன்ற இசைக்கருவிதான் இதற்குக் காரணம். அதன் மூலம் இவர்கள் எழுப்பும் ஒலியானது எளிதில் 20 கிமீட்டர் தூரத்துக்குப் பயணிக்கிறது. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் சாதாரண உரையாடலில் இருந்து முக்கியமான அறிவிப்புகள் வரை எல்லாவற்றுக்கும் இந்த ட்ரம்மின் மூலம் ஏற்படுத்தும் ஒலியைப் பயன்படுத்துகின்றனர். போரா பழங்குடியின மக்களின் மொழியும் இந்த ட்ரம்மின் மூலம் எழுப்பப்படும் ஒலியும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று journal Royal Society Open Science இல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அந்த ட்ரம்மின் ஒலியின் ரிதமும் மொழியின் ரிதமும் ஒன்றாக உள்ளது. அவர்களின் மொழியின் கூறுகள் ஒலி வடிவமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் அந்த மக்கள் எவ்வித பயிற்சியும் இல்லாமல் இந்த ட்ரம் ஒலியின் மூலம் சொல்லப்படும் தகவல்களை எளிதில் புரிந்துகொள்கின்றனர். 

அமேசான்

Photo - JULIEN MEYER/LAURE DENTEL

அவர்கள் பயன்படுத்தக் கூடிய இந்த ட்ரம்கள் Manguare Drums என்று அழைக்கப்படுகிறது. பாரம்பர்யமாகப் போரா பழங்குடியின மக்களின் வீடுகளில் இந்த ட்ரம்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு ட்ரம்மை வைத்திருக்க வேண்டும் என்ற வழக்கமும் இங்கு இருக்கிறது. உருளை வடிவில் மரப்பீரங்கிகளைப் போன்று காணப்படும் இந்த ட்ரம்மின் மேல் முனையில் பிளவு ஒன்று காணப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்ட இரு உருளைகளும் 6.5 அடி இருக்கின்றன. அதில் மரத்தடி வைத்து அடிப்பதன் மூலம் ஒலியை எழுப்புகின்றனர். போரா பழங்குடியின குழுக்களில் இருக்கும் அனைவரும் இந்த ஒலி வடிவத் தகவல்களைப் புரிந்து கொள்கின்றனர். இந்த ட்ரம்மின் மூலம் நான்கு வகையான ஒலியானது எழுப்பப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான உணர்வைச் சொல்லப் பயன்படும் ஒலிக்குறிப்புகள். அதுமட்டுமில்லாமல் திருவிழா நேரத்தில் இசைக்கருவியாகவும் அறிவிப்புகளை மக்களிடையே சேர்ப்பதற்கும் சாதாரணமாகப் பேசுவதற்கும் பயன்படுத்துகின்றனர். Manguare Drums மூலம் எந்தவகையான செய்தியையும் தகவல்களையும் போரா பழங்குடியின மக்களிடையே சொல்ல முடியும். இந்த மக்களின் அறிவிப்புகளானது 15 வார்த்தைகளுக்கும் 60 தாளங்களுக்கும் இருக்கிறது. இன்னும் நெருக்கமாக இந்த ட்ரம் ஒலிகளைக் கேட்டால் அந்த மக்கள் பேசுவதைப் போலவே இருக்கிறது ஆய்வாளர் ஃப்ரன்க் செய்ஃபர்ட் (Dr Frank Seifart). 

போரா பழங்குடியினர்

Photo - Dirk Schroeder / CHROMO / agefotostock

அழிந்து வரும் பேச்சு வழக்குகளை ஆவணப்படுத்தி வருகிறார் மொழியியல் ஆய்வாளரான ஃப்ரன்க் செய்ஃபர்ட் (Dr Frank Seifart). இந்தப் போரா மொழியின் பேச்சு வழக்கை ஆவணப்படுத்தச் சென்றபோதுதான் இந்தத் தகவல் பரிமாற்றத்தைக் கண்டிருக்கிறார். ஆம்ஸ்டர்டம் பல்கலைக்கழகத்தைச் (University of Amsterdam) சேர்ந்த ஃப்ரன்க் செய்ஃபர்ட் மற்றும் சில ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோதுதான் இந்தத் தகவல் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தனித்துவமான இந்த ட்ரம்கள் இப்போது 20 மட்டுமே உள்ளது. மேலும் போரா மொழியானது ஸ்பானிஷ் மொழியின் தாக்கத்தால் மெதுவாக அழிந்து வருகிறது. அவர்களது போரா மொழி அழிந்தால் இந்த ட்ரம் ஒலி தகவல் பரிமாற்றமும் அழிந்துவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இப்போதிருக்கும் 20 ட்ரம்களில் கூட ஐந்தாறுதான் பயன்பாட்டில் உள்ளது. சிலர்தான் அதை வாசிக்கிறார்கள். 1900-களில் 15000 பேர் இருந்த போரா பழங்குடியினர் இப்போது வெறும் 1500 பேர் மட்டுமே இருக்கின்றனர் இதுவும் மிக முக்கியமான காரணம், சட்டத்துக்குப் புறம்பாக அமேசான் காடுகளில் மரம் வெட்டுவதில் இவர்களைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களால் இந்தப் பழங்குடியின மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். அடர்த்தியான காடுகளுக்குள் செல்லச் செல்ல செல்போன் டவர்கள் கிடைப்பதுக்கூட அரிதுதான். சாதாரண சூழ்நிலைகளிலும் சரி இக்கட்டான சூழ்நிலைகளிலும் சரி காடுகளில் செய்தித் தொடர்புக்கு இவை பெரிதும் கைகொடுக்கும்.


டிரெண்டிங் @ விகடன்