Published:Updated:

அலகாபாத் பலி: பாலம் இடியவில்லை என ரயில்வே அமைச்சர் மறுப்பு

புதுடெல்லி அலகாபாத் ரயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்துவிழவில்லை என்றும், கூட்ட நெரிசலே உயிரிழப்புக்குக் காரணம் என்றும்  ரயில்வே அமைச்சர் பன்சால் தெரிவித்துள்ளார்.

நேற்று அலகாபாத் கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் சொந்த ஊர் திரும்ப அலகாபாத் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அலகாபாத் ரயில் நிலையத்தில்  மேம்பாலம் இடிந்து விழுந்ததால்தான்  நெரிசல் ஏற்பட்டது என்று தகவல் வெளியானது. இதை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. ரயில்வே நடைமேம்பாலத்தில் எந்த இடிபாடும் ஏற்படவில்லை. அதிக அளவில் மக்கள் கூடியதே நெரிசலுக்குக் காரணம். கும்ப மேளாவையொட்டி ரயில்வே துறை சார்பில் முன்னரே  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரயில்வே துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்"  என்று தெரிவித்தார்.

இதற்கிடையே கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸ் நடத்திய தடியடிதான் இந்த விபத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

ரூ.5 லட்சம் நிவாரணம்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள உத்தரப்பிரதேச அரசு,   விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும்  நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.