வெளியிடப்பட்ட நேரம்: 07:36 (03/05/2018)

கடைசி தொடர்பு:07:46 (03/05/2018)

செல்வம், வெற்றி, அன்பு... மூன்றில் எது வேண்டும் உங்களுக்கு? - நம்பிக்கைக்கதை #MotivationStory

செல்வம், வெற்றி, அன்பு... மூன்றில் எது வேண்டும் உங்களுக்கு? - நம்பிக்கைக்கதை #MotivationStory

'நாம் அன்புக்குப் பிறந்தவர்கள்; அன்புதான் நம் தாய்’ - அழகாகச் சொல்லியிருக்கிறார் இஸ்லாமியக் கவிஞரும் சூஃபி ஞானியுமான ரூமி (Rumi). கல்வி, வேலை, செல்வாக்கு, புகழ், குடும்பம்... என்று நாம் ஒவ்வொருவரும் தேடி ஓடும் அத்தனைக்குப் பின்னாலும் ஆதாரமாக இருப்பது அன்பு ஒன்றே. இப்படி யோசித்துப் பாருங்கள்... நம்மை நேசிக்கவோ, நம் மேல் அன்பு பாராட்டவோ ஒருவர்கூட இல்லையென்றால் என்ன ஆகும்? வாழ்க்கை வெறுத்துப் போகும். வாழ்வதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எதிலும் வெற்றி, எங்கேயும் வெற்றி என்கிற இலக்குத் தவறில்லை. சுகபோகமாக வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பொருள் ஈட்ட வேண்டும் என்று நினைப்பதும் தவறில்லை. ஆனால், நாம் வெற்றி பெற்றதை, பணம் சேர்த்ததையெல்லாம் பகிர்ந்துகொள்ள ஒரே ஒரு ஜீவனாவது வேண்டுமில்லையா? அதனால்தான் புத்தர் தொடங்கி உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் அன்பு செய்தலைப் பிரதானமாக வலியுறுத்துகிறார்கள். இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது இந்தக் கதை! 

உன்னை அறிந்தால்

காலை 11:00 மணியிருக்கலாம். அந்த வீட்டிலிருந்த பெண்மணி ஒரு தெரு வியாபாரியின் குரல் கேட்டு வெளியே வந்தார். அந்த வீட்டு வாசலுக்குப் பக்கத்திலிருந்த ஒரு சிறு திண்டில் மூன்று முதியவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். மூவருக்கும் அடர்ந்த, வெண்மையான தாடி. வெகு தூரத்திலிருந்து வந்திருப்பது அவர்களின் முகம் களைத்திருப்பதிலிருந்தே தெரிந்தது. முதுமையோடு இருந்தாலும், பார்த்தவுடனேயே எல்லோரையும் வசீகரித்துவிடும் அழகு அவர்கள் முகத்தில் தெரிந்தது. அதையும் தாண்டி, கருணை பொங்கும் முகம் மூவருக்குமே! 

அந்தப் பெண்மணிக்கு அவர்களைப் பார்த்ததுமே ஒரு மரியாதை ஏற்பட்டுவிட்டது. கூடவே பரிவும் தோன்றியது. ''ஐயா, நீங்கள்லாம் யாருன்னு தெரியலை. ஆனா, பார்த்தாலே உங்க முகத்துல களைப்பும் பசியும் தெரியுது. உள்ளே வந்து ஏதாவது சாப்டுட்டுப் போங்களேன்’’ என்றார். 

அந்த முதியவர்களில் ஒருவர் கேட்டார்... ''உங்க கணவர் வீட்டுல இருக்காராம்மா.’’

''அவர் காலையிலேயே கிளம்பி வேலைக்குப் போயிட்டாரே...’’

''பரவாயில்லை. அவர் வந்ததும், நாங்க உள்ளே வர்றோம்.’’ 

அந்தப் பெண்மணி வேறு எதுவும் செய்ய முடியாமல் வீட்டுக்குள் போய்விட்டார். அன்றைக்கு அந்தப் பெண்ணின் கணவர் வீடு திரும்ப மாலையாகிவிட்டது. கணவர் வந்ததும், விஷயத்தைச் சொன்னார் அந்தப் பெண். ''அப்படியா... உடனே அவங்களை உள்ளே அழைச்சுக்கிட்டு வா. போ...’’ என்று அனுப்பினார் கணவர். 

அந்தப் பெண்மணி வெளியே வந்தார். அந்த முதியவர்களிடம் போனார். ''ஐயா... இப்போ தாராளமா நீங்க வீட்டுக்குள்ள வரலாம். என் கணவர் வந்துட்டார். வாங்க... வாங்க...’’ என்று கூப்பிட்டார். 

''அம்மா... நீங்க எங்களை கூப்பிட்டதுக்கு நன்றி. நாங்க வர்றோம். ஆனா, மூணு பேரும் சேர்ந்து உள்ளே வர முடியாது.’’ என்றார் அவர்களில் ஒருவர். 

வெற்றி, செல்வம், அன்பு கதை

''ஏன் அப்படி?’’ 

''அது அப்படித்தான். இதோ இவர் இருக்காரே...’’ ஒரு முதியவரைக் கையைக் காட்டி அவர் சொன்னார்... ''இவர் பேரு 'செல்வம்’.'' இன்னொருவரைக் கையைக் காட்டி, ''இவர் பேரு 'வெற்றி’...’’ தன்னைக் காட்டி, ''நான் 'அன்பு’. நாங்க மூணு பேரும் சேர்ந்து மொத்தமா ஒரு வீட்டுக்குள்ள நுழைய முடியாது. உங்களுக்கு யாரு வேணும்னு குடும்பத்துல போய் ஆலோசனை பண்ணிட்டு வந்து சொல்லுங்க... அதுக்கு ஏத்த மாதிரி நாங்க வர்றோம்.’’ 

இப்போதுதான் அந்தப் பெண்மணிக்கு வந்திருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதும் தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு என்பதும் புரிந்தது. வீட்டுக்குள் ஓடினார். கணவரிடமும் மற்றவர்களிடமும் விஷயத்தைச் சொன்னாள். 

கணவர் சொன்னார்... ''அடடா... எவ்வளவு நல்ல விஷயம். உடனே போய் செல்வத்தை வரச் சொல்லு. நம்ம வீடு முழுக்க பணம், நகை, நட்டுனு ரொம்பிடும். அப்புறமென்ன... வாழ்நாள் முழுக்க நாம கவலையில்லாம இருக்கலாம்.’’ 

''பணம் எதுக்குங்க? நமக்கு வெற்றிங்கிற புகழ் ஒண்ணு போதுமே...’’ 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களின் மகள் சொன்னாள்... ''இதெல்லாம் எதுக்கும்மா? நாம எப்படியும் பணத்தச் சம்பாதிச்சுகிட்டுதான் இருக்கோம். அப்பாவுக்கு ஏற்கெனவே நல்ல வக்கீல்ங்கிற பேர் இருக்கு. அன்பை உள்ளே வரச் சொன்னா, நாம ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருக்கலாம்ல?’’ 

இதைக் கேட்டப் பெண்ணின் கணவர் சொன்னார்... ''ஆமா. நம்ம மக சொல்றதுதான் சரி. போ... போய் அன்பை நம்ம விருந்தாளியா வீட்டுக்குள்ள வரச் சொல்லு.’’ 

அன்பு

அந்தப் பெண்மணி வெளியே போனார். ''ஐயா, உங்கள்ல அன்பு எங்க வீட்டுக்கு விருந்தாளியா வரணும்னு நாங்க எல்லாருமே விரும்புறோம்’’ என்று சொன்னார். 

முதியவர்களில் 'அன்பு’ எழுந்தார். வீட்டுக்குள் போக அடியெடுத்து வைத்தார். அவ்வளவுதான். 'வெற்றி’, 'செல்வம்’ ஆகிய இருவரும் அவரைப் பின் தொடர ஆரம்பித்துவிட்டார்கள். ஆச்சர்யப்பட்டுப்போன அந்தப் பெண்மணி, ''நான் அன்பை மட்டும்தானே கூப்பிட்டேன். நீங்களும் வர்றீங்களே?’’ 

அவர்களில் 'செல்வம்’ சொன்னார்... 'நீங்க செல்வத்தையோ, வெற்றியையோ கூப்பிட்டிருந்தீங்கன்னா, மத்த ரெண்டு பேரும் வெளியிலேயே நின்னுருப்பாங்க. நீங்க அன்பை அழைச்சுட்டீங்க. அன்பு எங்கெல்லாம் போகுதோ, நாங்களும் அவர் பின்னாலேயே போவோம். எங்கெல்லாம் அன்பு இருக்கோ, அங்கெல்லாம் செல்வமும் வெற்றியும் இருக்கும்.’’ 

***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்