கொஞ்சம் செய்தி, நிறைய கலாய்... மீம்ஸை அதிகம் விரும்புவதும் பகிர்வதும் எதனால்? | Why are we so obsessed over memes?

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (03/05/2018)

கடைசி தொடர்பு:08:42 (03/05/2018)

கொஞ்சம் செய்தி, நிறைய கலாய்... மீம்ஸை அதிகம் விரும்புவதும் பகிர்வதும் எதனால்?

மீம்ஸ்... இன்று பல ஃபேஸ்புக் பக்கங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் ஃப்ரீ ஹிட். நாம் இப்படி மீம்கள் மேல் பித்து பிடித்தது போல் இருக்க, என்ன காரணம்?

கொஞ்சம் செய்தி, நிறைய கலாய்... மீம்ஸை அதிகம் விரும்புவதும் பகிர்வதும் எதனால்?

மீம்ஸ்... இன்று பல ஃபேஸ்புக் பக்கங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் ஃப்ரீ ஹிட். சில ஆயிரம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் ஒரு சின்ன பக்கமாக இருந்தாலும் சரி, பல லட்சம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் பெரிய பக்கமாக இருந்தாலும் சரி, மீம்கள்தான் அங்கே பிரபலம். மீம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி, திட்டுவதற்காகவாது அங்கே கூட்டம் சேரும். சொல்லப்போனால் இன்றைய இணையர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களின் பக்கம் செல்வதே இரண்டு மீம்களைப் பார்த்துச் சிரிக்கத்தான். மோடி முதல் ஊறுகாய் ஜாடி வரை, நாம் மீம்களில் பேசாத விஷயங்களே கிடையாது. தோனி சிக்ஸ் அடித்தாலும் மீம்... டக் அவுட் ஆனாலும் மீம்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை சாமி என விளம்பரம் செய்தாலும் மீம்... ஃபேஸ்புக் மார்க் லைவ் வந்தாலும் மீம்! 'அவென்ஜர்ஸ்' வில்லன் தாநோஸ்-க்கும் மீம்... 'காலா' சிங்கிள் ட்ராக்கிற்கும் மீம்! "போதும்டா... மிடில..." என யாரேனும் ஒரு பிரபலம் புலம்பினால் அதை வைத்தே ஒரு மீம். ஹைக், வாட்ஸ்அப் வரை மீம்கள் வந்து நம்மை ஃபார்வர்ட் செய்யச் சொல்லி கெஞ்சும். காரணம், மீம்ஸ் டிசைன் பண்றது ரொம்ப ஈசி பாஸ்! இந்த மீம்ஸ் பற்றி கொஞ்சமே கொஞ்சம் ஹிஸ்டரி...

மீம்ஸ்

பல விஷயங்களைப் போல, மீம்ஸ் கலாசாரமும் மேற்கத்திய நாடுகளிலிருந்து இங்கே வந்ததுதான். மீம்ஸ் என்றால் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இருந்தும், ஒரே ஒரு வரி விளக்கம். மீம் என்பது படம், வீடியோ, லிங்க், இணையதளம், ஹேஷ்டேக் இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது அனைத்தையும் சேர்த்து அவியலான ஒரு வடிவில், ஓர் இடத்தில் இருக்கும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் செயல். அப்போதைய அரசியல் மற்றும் கலை சூழல்கள் மீம்களின் முக்கியக் கருவாக இருக்கும். இந்த 'மீம்' (Meme) என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் புகழ்பெற்ற உயிரியல் நிபுணர் ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins). அவர் எழுதி 1976-ம் ஆண்டு வெளிவந்த 'The Selfish Gene' என்ற புத்தகத்தில் 'மீம்' என்ற சொல்லாடலை கலாசாரத் தகவல்கள் எப்படிப் பரிமாறப்படுகின்றன என்ற செயலோடு தொடர்புப்படுத்தி பேசி இருப்பார். நம் இன்டர்நெட் மீம்களும் கிட்டத்தட்ட அதனோடு தொடர்புடையது என்பதால் அதே பெயர் இதற்கும் வந்துவிட்டது. இன்டர்நெட் மீம்ஸை 1993-ம் ஆண்டு மைக் காட்வின் (Mike Godwin) என்பவர் கொண்டு வந்தார். ஏற்கெனவே இருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சில மாறுதல்கள் செய்து, அதன் மூலம் நாம் சொல்ல வந்த கருத்தை பட்டெனவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே மீம்களின் பணி. 

மீம்ஸை பகிர்வது எதனால்

இன்டர்நெட்டால் மீம்கள் பிரபலமடைந்திருந்தாலும், இன்டர்நெட்டிற்கு முன்பே, மீம்கள் இருந்திருக்கின்றன. ஏற்கெனவே யாரோ சொன்ன ஒரு கருத்து, செய்துவிட்ட செயல் போன்றவற்றை மேற்கோள் காட்டி, ஒரு கலையின் உதவியுடன் அதை நையாண்டி/விமர்சனம்/பாராட்டு/எதிர்ப்பு என நாம் செய்யும் விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் மீம்ஸ் என்ற பெயருக்குள் அடக்கிக்கொள்ளலாம். உங்களின் ஏழாம் வகுப்பு கணக்குப் பாட நோட்டில், பாட்ஷா ரஜினியை வரைந்து 'நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி' என எழுதினீர்களே அதுவும் ஒரு மீம்தான்!  சரி, நாம் இப்படி மீம்ஸை பித்துப் பிடித்ததுபோல் கொண்டாட என்ன காரணம் தெரியுமா?

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய மூன்று கட்ட நீண்ட உளவியல் ஆராய்ச்சியில் இதுகுறித்து முழுமையான விளக்கங்கள் கிடைக்கின்றன. நாம் ஒரு விஷயத்தை ஆன்லைனில் நம் ப்ரோஃபைலில் ஷேர் செய்ய ஐந்தே ஐந்து காரணங்கள்தான் இருக்க முடியும்.

கிரிக்கெட் மீம்

1) நம்மைச் சார்ந்தவர்களுக்கு ஒரு தகவலைக் கொண்டு செல்ல வேண்டும்; அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

2) நாம் யார், நம் எண்ண ஓட்டங்கள் எப்படிப் பட்டவை, நம் மனத்தின் நிலைப்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

3) இருக்கும் உறவுகளை வலிமைப்படுத்த வேண்டும்; புது உறவுகளை வளர வைக்க வேண்டும்.

4) நாம் தன்னிறைவு பெற வேண்டும்.

5) நாம் விரும்பும் விஷயங்களை உலகமும் விரும்ப வேண்டும். அதுகுறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு வேண்டும்.

உள்ளே இருக்கும் படங்களின் தரம், வார்த்தையில் இருக்கும் பிழைகள், சிறுபிள்ளைத்தனமான  கருத்துகள் போன்றவற்றைக்கூட பொருட்படுத்தாமல் நீங்கள் ஒரு மீம்மை ஷேர் செய்யும் காரணத்தை நிச்சயம் இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்றில் அடக்கி விடலாம். சில சமயங்களில் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள்கூட இருக்கலாம். அதைக் கிட்டத்தட்ட உங்களின் மன ஓட்டத்தோடு ஒத்துப்போகிறவர்கள் ரசிப்பார்கள். அது மட்டுமின்றி, வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சேட்டிங் ஆப்களில் மீம்கள், ஸ்மைலிகள், ஜிஃப் படங்களை அதிகம் பகிர்வதன் மூலம் அனுதாபம், பச்சாதாபம், பரிவு, அன்பு போன்ற குணநலன்கள் அதிகம் வளரும் என்கின்றன உளவியல் சார்ந்த ஆய்வுகள். காரணம், காட்சி அல்லது பார்வைக்குரிய விஷயங்களை அதிகம் விரும்புபவர்கள், இணையம் என்ற நிழல் உலகில் இருந்தாலும் நிஜ உலகின் மீது ஈர்ப்பு கொண்டவர்களாகவே இருப்பார்கள். நிஜத்திலும் இந்தக் குணநலன்களைப் பிரதிபலிக்கும் மனதைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் மீம்

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் லைக்/ஷேர் செய்த மீம்களை வைத்தே அவர்களின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடு, கொள்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். அகவயத்தன்மை (Introvert) கொண்டவர்கள் பலருக்கு இன்று சமுதாயத்தில் ஒரு வலிமையான குரலை கொடுத்து இருக்கின்றன நம் சமூக வலைதளங்கள். உதாரணமாக, உங்கள் நண்பர் அவ்வளவாக யாரிடமும் பேச மாட்டார். ஆனால், சமூக வலைதளங்களில் சூப்பர்ஸ்டாராக இருப்பார். 4,000 நண்பர்கள், 50,000 ஃபாலோயர்கள் என மார்கிற்கே சவால் விடும் பக்கம் ஒன்றை நடத்தி வருவார். அவரா இப்படி, என நீங்களே வியந்து போவீர்கள். தனிமை, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை சமூக வலைதளங்கள் இன்று உடைத்து எறிந்திருக்கின்றன. அதில் மீம்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் சொல்ல வந்த கருத்தை உங்களால் வார்த்தைகளால் கோர்க்க முடியாமல் இருக்கலாம். அதை நீங்கள் பார்த்த ஒரு மீம், இரண்டே இரண்டு படங்களுடன் அதைக் கூறி இருக்கும். அதை நீங்கள் ஷேர் செய்ய முனைவீர்கள்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி நேரில் உங்கள் நண்பர்களுடன் விவாதம் செய்யும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறதோ, அதேபோல இங்கேயும் நடக்கும். ஆனால், பலர் சமூக வலைதளத்தில் இப்படி நிகழ்வதை மிகவும் பெரிதாக எடுத்துக்கொள்வார்கள். காரணம், இது பொது மேடையில் அரங்கேறும் செயல்! ஆகவே, ஒரு மீம்மோ, கருத்தோ ஷேர் செய்யப்படும் முன்பு அது எந்த அளவுக்குச் சரியானது, யாரையேனும் புண்படுத்துகிறதா, போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். கேளிக்கை மற்றும் நகைச்சுவை அவசியம்தான். ஆனால், அது யாரையும் தாக்கிவிடக் கூடாது. ஒருவரின் கருத்தோடு, கண்ணோட்டத்தோடு நீங்கள் மோதலாம். அது குறித்து விவாதிக்கலாம். அது அதையும் தாண்டி அவர் மீதே நிகழும் நேரடி வார்த்தைப் போர் (personal attacks) ஆகிவிடக் கூடாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்