'சூப்பர்ஸ்டார்' ஊத்துக்குளி வெண்ணெய் 'பவர்ஸ்டார்' ஆன கதை தெரியுமா?

இதையெல்லாம் படிக்கும்போது ஊத்துக்குளி வெண்ணெய் பற்றிய செய்திகள் இனிப்பாக இருந்தாலும், இன்றைய அளவில் ஊத்துக்குளி பகுதியில் இத்தொழில் செய்வோர் அதிகமான நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

'சூப்பர்ஸ்டார்' ஊத்துக்குளி வெண்ணெய் 'பவர்ஸ்டார்' ஆன கதை தெரியுமா?

ல்வாவுக்குத் திருநெல்வேலி, பஞ்சாமிர்தத்துக்கு பழனி, மாம்பழத்துக்கு சேலம், மல்லிக்கு மதுரை என்ற வரிசையில் வெண்ணெய்க்கு ஊத்துக்குளி மிகவும் பிரபலமானது. திருப்பூரிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் இருபதாவது கிலோ மீட்டரில் உள்ள பரபரப்பான குட்டி ஊர்தான் ஊத்துக்குளி (பொள்ளாச்சி அருகில் உள்ள ஊத்துக்குளி வேறு) ஊத்துக்குளி என்ற ஊரின் பெயரிலேயே வெண்ணெய்யின் மணம் வீசும். நொய்யலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஊத்துக்குளியின் பிரதான தொழில் கறவை மாடு வளர்ப்புதான். இவ்வூரைச் சுற்றிலும் உள்ள மக்களின் பொருளாதாரம் பாலைச் சார்ந்தே இருக்கிறது. இந்த ஊருக்குள் நுழையும்போதே வெண்ணெய்யின் வாசம் மூக்கைத் துளைக்கும். ஊத்துக்குளி வெண்ணெய் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படித் தயாராகும் வெண்ணெய் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம் எனப் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஊத்துக்குளியில் பல குடும்பங்களின் தொழிலும் வெண்ணெய் எடுப்பதைச் சார்ந்துதான் இருக்கும். 

ஊத்துக்குளி வெண்ணெய்

தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெண்ணெய் கிடைத்தாலும், ஊத்துக்குளிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. இந்த வெண்ணெய்யின் தரமும் சுவையும் அதிகம். இங்குக் காய்ச்சும் வெண்ணெய்யின் வாசம்தான் ஊத்துக்குளி முழுக்க வீசும். இப்பகுதியில் பல நூறு ஏக்கர் கணக்கில் இயற்கையாகவே கொழுக்கட்டைப் புல் விளைந்து கிடைக்கும். இந்தப் புல்லை மேயும் மாடுகளிடம் இருந்து கறக்கும் பால் நன்றாக இருக்கும். அந்தப் பாலில் இருந்து தயாரிக்கும் பொருள்களும் தரமாகவும், தனித்துவமாகவும் இருக்கும். அப்படி இயற்கையாகக் கிடைக்கும் மணம்தான் ஊத்துக்குளி பிரபலமாக முக்கியமான காரணம். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கொழுப்பு நிறைந்த தீவனங்களான பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை ஆகிய தீவனங்களை கால்நடைகளுக்கு அதிக அளவில் வழங்குகின்றனர். இவற்றை உண்ணும் பசுக்களும், எருமைகளும் கறக்கும் பாலில் கொழுப்புச் சத்துக்களும், மற்ற சத்துகளும் அதிகமாக இருக்கிறது. அப்பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய்யில் சத்து அதிகம் உள்ளது. இதுவும் வெண்ணெய் பிரபலமானதற்கு ஒரு காரணமாகவும் சொல்லப்படுகிறது. 

வெண்ணெய்

ஊத்துக்குளியைச் சுற்றி இருக்கும் சென்னிமலை, காங்கேயம், வெள்ளைக் கோவில் ஆகிய ஊர்களிலும் தயாராகும் வெண்ணெய்யும் ஊத்துக்குளி தரத்தில்தான் இருக்கும்.  ஊத்துக்குளி பகுதிகளில் 25 வருடங்களுக்கு முன்னர் கால்நடைகள் வைத்திருந்தவர்கள், தனக்குப் போக மீதிப் பாலை விற்பனை செய்வது வழக்கம். அதில் மீதமாகும் பாலை சூடேற்றி அத்துடன் மோர் ஊற்றி மண் பானையில் உறைய வைப்பார்கள். அதைத் ‘தயிர்ப் பானை’ என்றும் அழைப்பார்கள். ஊத்துக்குளியில் ஒவ்வொரு வீட்டிலும் தயிர்ப் பானை நிச்சயமாக இருக்கும். அந்தத் தயிரை வீட்டுப்பெண்கள் 6 அடி உயரம் இருக்கும் மத்தில் கடைந்து, வெண்ணெய் எடுத்து உரிப்பானையில் சேர்த்து வைப்பார்கள். அப்படிச் சேர்த்த வெண்ணெய்யை வாரச்சந்தைகளுக்குக் கொண்டு போய் மரத்தடி வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். அதற்குப் பதிலாக வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக்கொண்டு செல்வதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அப்படி வியாபாரிகள் வாங்கிச் செல்லும் வெண்ணெய் பல ஊர்களில் விற்பனையாகி அதைக் காய்ச்சும்போது நல்ல மணமாக இருப்பதால், ஊத்துக்குளி பகுதியில் அதிகமானோர் வாங்க ஆரம்பித்ததாக வரலாறும் உண்டு. 

வெண்ணெய் தயாரிக்கும் பணியில்

எருமைப் பாலில் இருந்து தயாராகும் வெண்ணெய் மஞ்சள் நிறத்திலும், பசும் பாலில் தயாராகும் வெண்ணெய் வெள்ளை நிறத்திலும் இருக்கும். ஆனால், எருமைப் பாலில் இருந்து கிடைக்கும் வெண்ணெய்யின் சுவை நன்றாக இருக்கும். எருமை வெண்ணெய் அதிக அடர்த்தியும் கொண்டது. ஒரு கிலோ வெண்ணெய் எடுக்க 8 லிட்டர் எருமைப் பால் தேவை. அதேநேரம் பசுமாட்டிலிருந்து ஒரு கிலோ வெண்ணெய் எடுக்க 11 லிட்டர் பால் தேவைப்படும். வெண்ணெய் எடுத்த சக்கைப் பாலையும் காய்ச்சி லிட்டர் 7 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். மொத்தத்தில் ஊத்துக்குளியே வெண்ணெய்யை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் படிக்கும்போது ஊத்துக்குளி வெண்ணெய் பற்றிய செய்திகள் இனிப்பாக இருந்தாலும், இன்றைய அளவில் ஊத்துக்குளி பகுதியில் இத்தொழில் செய்வோர் அதிகமான நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து நிலவிய வறட்சியால் பெரும்பாலானோர் மாடுகள் வளர்ப்பதையும் வெண்ணெய் எடுக்கும் தொழிலையும் நிறுத்திவிட்டனர். வெண்ணெய்க்குப் பெயர் பெற்ற ஊத்துக்குளியில் இப்போது வெண்ணெய் தயாரிப்பு குறைவான அளவிலேயே நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வறட்சியே என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!