``பூமியிலும் ஆக்சிஜன் இல்லை..!" - ஓமன் வளைகுடாவின் அபாயப் பகுதி #DeadZone | Climate change evaquate oxygen from Gulf of oman that is Dead zone larger than Scotland

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (06/05/2018)

கடைசி தொடர்பு:09:47 (07/05/2018)

``பூமியிலும் ஆக்சிஜன் இல்லை..!" - ஓமன் வளைகுடாவின் அபாயப் பகுதி #DeadZone

ஓமன் வளைகுடாவில் (Gulf of Oman) எட்டு மாதங்கள் Seaglider ரோபோட்டுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் குறிப்பிட்ட பகுதியில் ஆக்சிஜனே இல்லை என்று உறுதி செய்துள்ளனர் ஓமன் வளைகுடாவின் 1,65,000 சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பினை இந்த அபாயப் பகுதி ஆக்கிரமித்துள்ளது.

``பூமியிலும் ஆக்சிஜன் இல்லை..!

கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அதன் அழுத்தம் தாங்காமல் மிகப்பெரிய நீர் மூழ்கிக் கப்பல்கள் கூடப் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கி விடும். ``அப்படியென்றால் அங்கு உயிரினங்களே வாழ முடியாதா?" என்ற கேள்வி கண்டிப்பாக எழும். ஆனால், அந்த அதீத அழுத்தத்திலும் வாழக்கூடிய உயிரினங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதேபோன்று உலகின் பல்வேறு இடங்களில் நம்ப முடியாத புறச்சூழல்களிலும் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவற்றுக்கெல்லாம் மூல ஆதாரமாக இருப்பது ஆக்சிஜன். இந்த வாயு மட்டும் இல்லையென்றால் உயிர் வாழ்வது சிரமம்தான். புவியின் வளிமண்டலமானது பல்வேறு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில அடுக்குகளைத் தாண்டினால் அங்கேயும் ஆக்சிஜன் இருக்காது. உலகிலேயே உயரமான இமயமலையில் ஏறுவதில் கூட இந்தச் சிரமம் இருக்கிறது.

அரபிக் கடலுக்கு அருகிலுள்ள மத்திய கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓமன் வளைகுடாவில் (Gulf of Oman) எட்டு மாதங்கள் Seaglider ரோபோக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் குறிப்பிட்ட பகுதியில் ஆக்சிஜனே இல்லை என்று உறுதி செய்துள்ளனர் கிழக்கு அங்க்லியா பல்கலைக்கழக (University of East Anglia) ஆய்வாளர்கள். இந்த ஆய்வானது சுல்தான் க்யூபூஸ் பல்கலைக்கழகத்தின் (Sultan Qaboos University ) உதவியுடன் கடந்த வாரம் Geophysical Research Letter என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் இதுவரை யூகமாகச் சொல்லப்பட்டு வந்த பலவற்றை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்கு மேலேயும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை ஆய்வுகள் கூறுகின்றன. ஓமன் வளைகுடாவின் இந்தக் குறிப்பிட்ட கடல் பரப்பை அபாயப் பகுதி (Dead Zone) என்று அழைக்கின்றனர். உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை விடக் குறைவான ஆக்சிஜன் (Oxygen Minimum Zones) அல்லது முற்றிலும் ஆக்சிஜனே அற்ற பகுதி அபாயப் பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இரண்டு, மூன்று அபாயப் பகுதிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம்விட இந்த ஓமன் வளைகுடாவின் அபாயப் பகுதிதான் உலகிலேயே பெரியது, அடர்த்தியானது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

Arabian Sea , Gulf of Oman

ஹோர்மஸ் ஜலசந்தியிலிருந்து(Strait of Hormuz) அரபிக்கடல் வரை நீண்டுள்ள ஓமன் வளைகுடாவின் 1,65,000 சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பினை இந்த அபாயப் பகுதி ஆக்கிரமித்துள்ளது. இது ஸ்காட்லாந்து நாட்டை விட பெரியது. இதன் பரப்பளவும் அடர்த்தியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவும் ஆய்வு கூறுகிறது. இதுபோன்ற ஆக்சிஜன் அற்ற பகுதிகளானது கடலினுள் 200 மீட்டர் முதல் 800 மீட்டருக்கு இடைப்பட்ட பகுதியில் இயல்பாகவே காணப்படும் விஷயம். மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் என எதுவும் இந்தப் பகுதியில் வாழ்வதில்லை.

``இது மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னை. இதனால் மிகக் கடுமையான விளைவுகளை மனிதர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக உணவுத் தேவைக்காகவும் பொருளாதாரத்திற்காகவும் கடலைச் சார்ந்து வாழ்பவர்களின் அடிப்படை பிரச்னையாகவும் மாறக்கூடும்" என்கிறார் கிழக்கு அங்க்லியா பல்கலைக்கழக ஆய்வாளர் பாஸ்டின் ஃயிஸ்டே (Bastien Queste). இந்த அபாயப் பகுதியின் பரப்பளவு வளர்ந்துகொண்டே போவதற்கு காலநிலை மாற்றமும் காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார் ஃயிஸ்டே. ஏனென்றால் கடற்பரப்பின் வெப்பம் அதிகரிக்கும்போது தன்னிடம் ஆக்சிஜனைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனும் கடலுக்குக் குறைகிறது. கடலின் வெப்பம் அதிகரிக்கக் காலநிலை மாற்றமே முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை இப்படித்தான் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் ஃயிஸ்டே. 

கடலில் அளவுக்கு அதிகமான கழிவு நீர் கலப்பும் அதிகமான உரங்களைப் பயன்படுத்தி அதனுடன் கலந்த நீர் கடலுடன் கலப்பதும் ஆக்சிஜன் அளவை குறையச் செய்திருக்கின்றன. மேலும் ஆக்சிஜன் இல்லா இடத்தில் இரசாயன மாற்றங்களால் நைட்ரஸ் ஆக்ஸைடு உருவாகிறது. நைட்ரஸ் ஆக்ஸைடு ஒரு பசுமை இல்ல வாயு. இது கார்பன் டை ஆக்ஸைடை விட 300 மடங்கு அதிகமாகப் புவி வெப்பமயமாதலில் தாக்கம் செலுத்தக்கூடியது. அபாயப் பகுதி வளர்வதும் நைட்ரஸ் ஆக்ஸைடு உருவாகுவதும் ஆக்சிஜன் அற்றுப் போவதும் இதெல்லாம் ஒரு சுழற்சியாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த அபாயப் பகுதி இன்று நேற்று திடீரென உருவாகவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றதன் விளைவே இவ்வளவு பெரிய அபாயப் பகுதி. 1960களின் தொடக்கத்திலேயே அபாயப் பகுதி பற்றிய ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின் 1990களிலும் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், தொடர்ச்சியான கடற்கொள்ளையாலும் புவிசார்ந்த அரசியல் நெருக்கடியாலும் இந்தப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்வது கடினமான காரியமாக இருந்தது. 

ஓமன் வளைகுடா

இதுநாள் வரை இருந்த யூகத்தின் மூலமும் சில ஆரம்பக்கால ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்புதான் இந்தப் பிரச்னையின் தீவிரம் ஆய்வாளர்கள் நினைத்ததைவிடக் கடுமையானதாக இருந்திருக்கிறது. இதுபோன்றே கருங்கடலிலும் (Black Sea) மெக்ஸிகோ வளைகுடாவிலும் (Gulf of Mexico) ஆக்சிஜன் குறைந்த பகுதிகள் இருக்கின்றன. இதில் மெக்ஸிகோ வளைகுடாவில்தான் 9,000 சதுர கிலோமீட்டர் பரப்பிற்கு அபாயப் பகுதி காணப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் வளரவில்லை. ஓமன் வளைகுடாவின் அபாயப் பகுதி மட்டுமே வளர்ந்துகொண்டே செல்கிறது. ஓமன் வளைகுடாவின் அபாயப் பகுதி வளர்ந்து மற்ற கடற்பரப்பிற்கும் செல்லாமல் இருக்க இப்போதே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் பல்வேறு வகையில் விளைவுகளை ஏற்படுத்தத்தொடங்கியிருக்கிறது. இனியாவது இயற்கையைப் புரிந்துகொள்ள முயற்சிகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நம் புவி முழுதும் அபாயப் பகுதியாக மாறினாலும் ஆச்சர்யமில்லை.


டிரெண்டிங் @ விகடன்