''கண்ணுத் தெரியாதவங்ககூட ஆசீர்வதிச்சுட்டுப் போவாங்க!'' கோயம்பேடு பேட்டரி கார் டிரைவர் துர்கா | Meet this gutsy woman driver who inspires people by driving battery car in Koyambedu

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (07/05/2018)

கடைசி தொடர்பு:12:51 (07/05/2018)

''கண்ணுத் தெரியாதவங்ககூட ஆசீர்வதிச்சுட்டுப் போவாங்க!'' கோயம்பேடு பேட்டரி கார் டிரைவர் துர்கா

சதியான குடும்பத்தில் பிறந்து பிசினஸில் சாதிக்கிற பெண்களைவிட, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வறுமையை ஜெயிக்க வித்தியாசமான வேலைகளைச் செய்கிற  பெண்களை சற்றுக் கூடுதலாகவே கொண்டாடுவோம் இல்லையா... கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் பேட்டரி கார் ஓட்டும் துர்காவை அப்படித்தான் கொண்டாடத் தோன்றியது. தற்போது, இந்தப் பேருந்து நிலையத்தில் பேட்டரி கார் ஓட்டும் ஒரேயொரு பெண், துர்காதான். குறித்த நேரத்துக்குள் பஸ்ஸைப் பிடிக்க ஓடும் மக்களுக்கு நடுவே, வயதானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் பேட்டரி காரில் ஏற்றிக்கொண்டு மிக லாகவமாக வண்டியை ஓட்டிச் செல்கிற துர்காவிடம், அவர் சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் பேச்சுக்கொடுத்தோம். 

துர்கா


"இந்த வேலையில சேர்ந்து ஒரு வருஷமாச்சு. ரெண்டாவது தடவையா ஹார்ட் அட்டாக் வந்து தப்பிப் பிழைச்ச அப்பா, சமையல் வேலை செஞ்சு  குடும்பத்தைக் காப்பாத்துற அம்மா, நானு, என்னோட ரெண்டு குழந்தைங்க... அவ்வளவுதான் என் குடும்பம்" என்று பேச ஆரம்பித்தவர், இந்த வேலைக்குத் தான் வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார். 

"பத்தாவது வரைதான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க முடியலை. உடம்பு சரியில்லாத அப்பாவாலேயும், அடுப்படியில வெந்து சமையல் வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்திக்கிட்டு இருந்த அம்மாவாலேயும் அதுக்கு.மேல ஒண்ணும் பண்ண முடியலை. நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். இப்படியே போய்க்கிட்டு இருந்த வாழ்க்கையில காதல் வந்துருச்சு. பதினெட்டு வயசுலேயே லவ் பண்ணவரை கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். ஒரு பையன், ஒரு பொண்ணு. ஆனா, இந்த சந்தோஷமெல்லாம் ரொம்ப நாளைக்கு நீடிக்கலை. என் வீட்டுக்காரருக்கு குடிப்பழக்கம் இருந்துச்சு. அதனால, எப்பவும் வீட்ல பிரச்னைதான். குடிச்சுட்டு தினமும் நைட்டு ஒரு மணி, ரெண்டு மணிக்குத்தான் வருவாரு. அதுக்கப்புறம் அவரோட தொல்லை தாங்க முடியாது. வேலை செஞ்சுட்டு வீட்டுக்குப் போனா, நிம்மதியா தூங்கக்கூட முடியாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தாங்க முடியாம, பிள்ளைங்களைத் தூக்கிட்டு நான் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். அதுக்கப்புறம் அம்மாதான் எங்களுக்கு எல்லாமேன்னு ஆகிப் போயிடுச்சு" என்கிற துர்காவின் அப்பாவுக்கு  சென்ற வாரம்தான் இரண்டாவது ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. நேற்றுதான் ஐசியூ-வில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். `அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது நீங்க வேலைக்கு வந்திருக்கீங்களே...' என்றால், ''வேற வழி இல்ல. அப்பாவுக்கு ஹார்ட் பிராப்ளம் வந்ததுல இருந்து, அவரைக் காப்பாத்த அம்மா நிறைய கடன் வாங்கிட்டாங்க. அதெல்லாம் அடைக்கணுமில்லையா...'' என்கிறார் பொறுப்புடன்.

டிரைவர் 

" இலவசமா  கோர்ஸ்கள் கத்துத் தர்ற ஒரு அமைப்பைப் பத்தி ஒரு விளம்பரத்துல படிச்சேன். உடனே அங்கே போய் நானும் ஜாயின் பண்ணிட்டேன். எங்கம்மா அங்க என்னை நர்ஸிங் கோர்ஸ் படிக்கச் சொன்னாங்க. ஆனா, நான் கார் டிரைவிங் கத்துக்கிட்டேன். எனக்கு டிரைவிங் ரொம்பப் பிடிக்கும். இப்பக்கூட என் வீடு இருக்கிற போரூர்ல இருந்து கோயம்பேடுக்கு தினமும் டூ வீலர்லதான் வர்றேன். வாங்குற 9 ஆயிரம் சம்பளத்துல ஆயிரம் ரூபாய்க்கும் மேல பெட்ரோலுக்கே செலவானாலும் வண்டியோட்டறது எனக்குப் பிடிச்ச விஷயம். அதான் டிரைவிங் கத்துக்கிட்டு இந்த வேலைக்கு வந்துட்டேன்'' என்றவரின் குரலில் தன் வேலையைப் பற்றிய உற்சாகம் தெறிக்கிறது.  

''மனசுக்குள்ள குடும்பக் கஷ்டம் எத்தனை இருந்தாலும், வேலைக்கு வந்துட்டா அதையெல்லாம் மனசுக்குள்ள வெச்சுக்கவே மாட்டேன். என் பேட்டரி கார்ல ஏறும் வயசானவங்க, கண்ணு தெரியாதவங்களை கையைப் பிடிச்சு அவங்க ஏற வேண்டிய பஸ்ல ஏத்தும்போது, என் தலையில கை வெச்சு ஆசீர்வதிச்சுட்டுப் போவாங்க பாருங்க, அது போதும் நானும் என் குடும்பமும் நல்லா இருக்க..."  என்கிற துர்காவின் குரல் நெகிழ்ந்து ஒலிக்கிறது. 

துர்கா மாதிரியான பெண்கள்... வீட்டின் கண்கள்!


டிரெண்டிங் @ விகடன்