Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``தெனாவட்டா உட்காருவோம்... பாயப்போட்டு மல்லாக்கப் படுப்போம்!" - உலகின் அழகான பூனைகள்

மனிதன்  வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்களும் பூனைகளும் குறிப்பிடத்தக்கவை. நாய்களின் உயரமும் கடிக்கும் தன்மையின் காரணமாகவும் அச்சப்படுபவர்களின் அடுத்த சாய்ஸ் பூனைதான். ஏனெனில் இவை அமைதியான சுபாவம் கொண்டது. பூனைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பல இயல்பான, அழகிய உடலமைப்புகளைக் கொண்டவை. அன்பு, குறும்பு, நட்பு என மனிதரிடத்தில் நெருங்கிப் பழகும் பூனைகளில் சில அரிதான மற்றும் அழகான பூனைகளும் இருக்கின்றன. உலகில் சில அழகான பூனை இனங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.      

                  
1. தேவோன் ரிக்ஸ் 

மிகுந்த அறிவுத்திறனைக் கொண்ட பூனை வகை இது. அலை அலையான முடிகளைக் கொண்டது. 1970-ம் ஆண்டில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இப்பூனை மெலிந்த உடலமைப்பையும், நீண்ட காதுகளையும் கொண்டது. கடுமையான தந்திரங்களைக் கூட எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது. தனது குறும்புத் தனத்தால் மனிதர்களிடையே எளிதில் பழகக் கூடியது. உயரமான தடைகளையும் எளிதில் தாவிப் பற்றிக் கொள்ளும். இதனைப் பராமரிப்பதும் மிக எளிது.  

தேவோன் ரிக்ஸ் பூனைகள் 

       Photo - Dogalize  

2. ஸ்காட்டிஷ் உல்ஃப்

 இயற்கையான மரபணு மாறுபாட்டால் இவ்வகைப் பூனைகளின் குருத்தெலும்புகள் பாதிக்கப்பட்டு காதுகள் முன்புறமாகவோ, பின்புறமாகவோ மடங்கியே இருக்கின்றன. இதனால் ஆந்தையைப் போன்ற முக அமைப்பைக் கொண்டிருக்கும். 1961-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் கண்டறியப்பட்ட இப்பூனையினம் அரிதானதாகக் கருதப்படுகிறது. உருண்டை வடிவத் தலையைக் கொண்டது. இப்பூனை மல்லாக்கப் படுத்துத் தூங்கும். கால்களை தெனாவட்டாக வைத்து உட்காரும்.  

ஸ்காட்டிஷ் உல்ஃப்

 Photo - 2. asms2014.org

3. ஜப்பான் பாப்டைல்

 மிகக் குறுகிய முயலைப் போன்ற வால் அமைப்பைக் கொண்டது. இது தென்கிழக்கு ஆசியா மற்றும் ஜப்பானைப் பூர்வீகமாகக் கொண்டது. மனிதர்களிடையே பாசத்துடன் நெருங்கிப் பழகுவதால் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளாக வலம் வருகிறது. மென்மையான கொஞ்சும் குரலில் வளர்ப்பவர்களிடம் தொடர்பு கொள்ளும் வகையில் இருப்பதால் அதிபுத்திசாலி என்றே இவற்றைச் சொல்லலாம். இவற்றின் குறும்புத்தனமாக விளையாட்டுக் குணம்தான் பலராலும் வீடுகளில் விரும்பி வளர்க்கக் காரணம். 

ஜப்பான் பாப்டைல்

 Photo - Mental Floss


4. காவோ மானி

 தாய்லாந்து நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டது. இதன் கண்கள் வைரத்தைப் போன்று இருப்பதால் வைரக்கண் பூனை என்றும் அழைக்கப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பூனையினம் வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. முழுவதும் வெண்மையான இப்பூனையின் தோல் குறுகிய நீளமுள்ள முடிகளைக் கொண்டுள்ளது. விரைவாக ஓடுவது, தாவிக்குதிப்பதில் வல்லமைப் படைத்தது. இந்த இனம் அழிவினை நோக்கிச் சென்ற காரணத்தால் இனப்பெருக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

காவோ மானி

 Photo - Cat Breed Selector


5. சவானா 

சாதாரண பூனை மற்றும் ஆப்பிரிக்கப் பூனையின் கலப்பினத்தில் உருவாக்கப்பட்டது. உயரமான கால்களையும், மெல்லிய தோல்களையும் கொண்டிருக்கும். நீண்ட கழுத்து மற்றும் கரும்புள்ளிகளுடன் உள்ள தோலானது சிறுத்தையைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. பழகுவதற்கு இனிமையான குணம் கொண்டவை.

சவானா 

 Photo - F1Hybrids Savannah Cats

6. டீ கப் பர்ஷியன்

குறுகிய உடலும், உருண்டை முகமும், நீண்ட முடிகளையும் கொண்டது. மத்திய கிழக்கு நாடுகளில் இரானிய பூனை எனவும், இரான் நாட்டில் சிராஜி பூனை எனவும் அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்பூனை விரும்பி வளர்க்கப்படுகிறது. குறுகியக் கால்களைக் கொண்டது. அப்பாவியான உருவமும், குணமும் கொண்டது. இவை பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே செல்ல விரும்புவதில்லை என்பதால் அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு ஏற்றது. மென்மையான குரல், சுத்தம், எல்லோரிடமும் நட்புப் பாராட்டுவது இவற்றின் பொதுவான குணங்களாகும்.

டீ கப் பர்ஷியன்

 Photo -Catster


7. மன்ச்கின்

மரபணு மாற்றம் காரணமாக குறுகிய கால்களை உடையது.  குறும்புத்தனம், இனிமையான குணம், அதிகமான அறிவுத்திறன் ஆகியவற்றைக் கொண்டது. மனிதக் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடப்பவை. குள்ளமான கால்கள் கொண்டிருப்பதால் குறுகிய உயரம் மட்டுமே தாவும். 1995-ம் ஆண்டு சர்வதேசப் பூனைகள் சங்கம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட  இப்பூனையை அங்கீகரித்தது.  

மன்ச்கின்

 Photo -7.  petcha

8. பிக்ஸி பாப்

கொழுக் மொழுக் என கொழுத்துக் காணப்படும். சுமார் 5 கிலோ எடை வரை வளரக் கூடியது. இதன் முழு அளவிலான வளர்ச்சி சுமார் 4 ஆண்டுகள் வரை நீடிக்கும். உள்ளங்கால்களில் கருமை நிறத் தோல்களுடன் கூடிய முடிகளைக் கொண்டுள்ளது. 2 முதல் 4 இன்ச் அளவிலான வாலைக் கொண்டது. பேரிக்காய் வடிவிலான தலையும் கொண்டது. 

பிக்ஸி பாப்

 Photo - PetGuide

இவற்றைப் போல பல அழகான பூனை வகைகள் உலகில் நிறைந்திருக்கின்றன.                             

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement