வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (08/05/2018)

கடைசி தொடர்பு:20:05 (08/05/2018)

மூன்று முக்கிய நிகழ்வுகள்... மூன்று நல்ல கொரில்லாக்கள்..! #AnimalLove

அதிகாரிகள் கொரில்லாவின் மார்பு பகுதியில் சுடுகிறார்கள். ஹராம்பி சிறுவனை விட்டு விட்டு கீழே விழுகிறது.

மூன்று முக்கிய நிகழ்வுகள்... மூன்று நல்ல கொரில்லாக்கள்..! #AnimalLove

1986 ஆம் ஆண்டு ஜெர்சி மாகாணத்தில் இருக்கிற  டரல் தேசிய பூங்காவில் 25 வயது ஜம்போ ( Jambo) என்கிற கொரில்லா பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் லேவன் மேட்ரிட் என்கிற ஐந்து வயது சிறுவன் தவறி கொரில்லா இருந்த பகுதிக்குள் விழுந்து விடுகிறான். சிறுவனின் பெற்றோர் பதறுகிறார்கள். பூங்கா ஊழியர்கள் மொத்தமாகக் கூடி விடுகிறார்கள். சிறுவன் விழுந்ததில் சுயநினைவை இழந்து மயக்கமடைந்து விடுகிறான். அங்கிருந்த ஜம்போ உடனே சிறுவனுக்கு அருகில் வந்து நின்று கொள்கிறது. ஜம்போவோடு இருந்த மற்ற இரண்டு கொரில்லாக்களையும் சிறுவனுக்கு அருகில் வர விடாமல் தடுக்கிறது. சிறுவன் கீழே விழுந்ததில் அடிபட்டு ரத்தம் வருவதைப் பார்க்கிற ஜம்போ சிறுவனுக்கு பாதுகாப்பாக நிற்கிறது. சிறுவன் மயக்கம் தெளிந்து எழுந்ததும் சூழ்நிலையை அறிந்து அழ ஆரம்பிக்கிறான். ஜம்போ சிறுவன் அழுவதை வினோதமாகப் பார்க்கிறது. எந்த வகையிலும் ஜம்போ சிறுவனை தாக்கவோ, பயமுறுத்தவோ இல்லை. அதற்குள் பூங்கா பாதுகாப்பு அதிகாரிகள் ஜம்போவை விரட்டுகிறார்கள். சிறுவனின் உறவினர் ஒருவர் கயிறு மூலம் கீழே இறங்குகிறார். ஜம்போ எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்புகிறது. சிறுவன் மீட்கப்படுகிறான். இந்தச் சம்பவம் அங்கிருந்த கேமரா மூலம் பதிவாகிறது. வீடியோ அமெரிக்காவின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது. அப்போது வரை கொரில்லாக்கள் மீது இருந்த தவறான பிம்பம் உடைகிறது. உலகமே ஜம்போவைக் கொண்டாடுகிறது. 1991 ஆம் ஆண்டு வரை உயிரோடு இருந்த ஜம்போவிற்கு பூங்கா வாசலில் இப்போது சிலை வைத்திருக்கிறார்கள். 

ஜம்போ என்கிற சொல்லுக்கு “மிகப் பெரியவன்” என்று பொருள். 

ஜம்போ

ஆகஸ்ட் 16 1996-ஆம் ஆண்டு சிக்காக்கோ ப்ரூக்பீல்டு உயிரியல் பூங்காவில் இருந்த 8 வயது கொரில்லா (Binti Jua) பிந்தி ஜூவா. அதனோடு அதன் வாழ்விடத்தில் மேலும் ஏழு கொரில்லாக்கள் இருந்தன. அன்றைய தேதியில் கொரில்லாவைப் பார்க்க வந்த மூன்று வயது சிறுவன் ஒருவன் தவறி கொரில்லாக்கள் இருந்த 20 அடிக்கும் கீழான பகுதியில் விழுந்து விடுகிறான். பெற்றோர்கள் கதறுகிறார்கள். பூங்கா அதிகாரிகள் கொரில்லாவிடமிருந்து குழந்தையை எப்படிக் காப்பாற்றுவதென ஆராய்கிறார்கள். 15 அடி ஆழத்தில் விழுந்ததில் சிறுவன் சிறிய காயங்களுடன் மயக்கமடைகிறான். சிறுவன் விழுந்ததைப் பார்க்கிற பிந்தி உடனே சிறுவனை நோக்கி வருகிறது. சுற்றி இருந்தவர்கள் பதறுகிறார்கள். சிறுவனுக்குப் பக்கத்தில் வருகிற பிந்தி சிறுவனைக் குழந்தையை தூக்குவது போல இரு கைகளால் தூக்கிக் கொண்டு கொரில்லாக்களுக்கு உணவளிக்கும் வாசல் பகுதிக்கு வருகிறது. ஏனெனில் மேலும் ஏழு கொரில்லாக்கள் அதே இடத்தில் இருக்கின்றன. கொரில்லாக்களின் நுழைவு வாசலில் தன்னுடைய மடியில் சிறுவனை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு குரல் எழுப்பியது. மற்ற கொரில்லாக்கள் பிந்தி இருந்த இடத்தை நோக்கி வர முயன்றன. அதற்குள் பூங்கா ஊழியர்கள் பிந்தி இருந்த இடத்தில் தண்ணீரைப் பாய்ச்சி விரட்டுகிறார்கள். பிந்தி உட்பட மற்ற கொரில்லாக்களும் அங்கிருந்து ஓடி விடுகின்றன. சிறுவன் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். பிந்தி கொரில்லா பற்றிய வீடியோ உலகமெங்கும் பரவ ஆரம்பிக்கிறது. கொரில்லாக்கள் மோசமானவை அல்ல என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்படுகிறது. 30 வயதான பிந்தி இப்பொழுதும் ப்ரூக்பீல்டு பூங்காவில் இருக்கிறது. 

பிந்தி ஜூவா என்கிற பெயருக்கு “சூரிய ஒளியின் மகள்” என்று பொருள். 

பிந்தி ஜூவா கொரில்லா

சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் இருந்த 17 வயது கொரில்லா ஹராம்பி. 2016 ஆம் ஆண்டு மே 28 தேதி எப்போதும் போல அதனுடைய பகுதியில் உலாவிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாயிருந்தது. ஹராம்பியை பார்க்க வந்திருந்த 3 வயது சிறுவன் ஒருவன் அமைக்கப்பட்டிருந்தத் தடுப்பைக் கடந்து 10 அடி ஆழ கொரில்லா இருக்கிற பகுதியில் விழுந்து விடுகிறான். அங்கிருந்த மூன்று கொரில்லா குரங்குகளும் விழுந்த சிறுவனை பார்க்கின்றன. பூங்காவில் இருக்கிற ஊழியர்கள் விரைந்து வந்து கொரில்லாக்களை திரும்பிப் போக சொல்லிக் கட்டளையிடுகிறார். அதில் இரண்டு கொரில்லாக்கள் அங்கிருந்து கிளம்பி விடுகின்றன. ஆனால் ஹராம்பி கொரில்லா விழுந்த சிறுவனின் பக்கத்தில் வந்து பார்த்து கொண்டிருக்கிறது. முன்னிரண்டு சம்பவங்களும் கொரில்லாக்களின் மீது நன்மதிப்பைப் பெற்று தந்திருப்பதால் அசம்பாவிதம் எதுவும் நிகழாது என நம்புகிறார்கள். ஆனாலும் கூடி இருந்தவர்களின் சத்தம் கொரில்லாவைப் பயமுறுத்துகிறது. பூங்காவிற்கு வந்திருந்த மக்கள் எல்லோரும் அலற ஆரம்பிக்கிறார்கள். கொரில்லா சிறுவனின் காலைப் பிடித்து  தண்ணீரில் இழுக்கக் கொண்டு ஓடுகிறது. சிறுவன் ஒரு மூலையில் இருக்கக் கொரில்லா சிறுவனை மறைத்துக் கொண்டு நிற்கிறது. மக்களின் சத்தம் கொரில்லாவைப் பதற்றமடைய வைக்கிறது. பூங்காவின் சேஃப்ட்டி அதிகாரிகள் வருகிறார்கள். மீண்டும் கொரில்லா சிறுவனின் காலை பிடித்து தண்ணீரில் இழுத்துக் கொண்டு ஓடுகிறது. 

ஹராம்பி

மக்கள் இன்னும் அதிகமாகக் கத்துகிறார்கள். சிறுவன் அழுதுகொண்டே அமர்ந்திருக்கச் சிறுவனின் கைகளை மிருதுவாக தொட்டு பார்க்கிறது. பிறகு சிறுவனின் சட்டையை இழுத்துப் பார்க்கிறது.மக்களின் சத்தம் இப்போது இன்னும் அதிகரித்திருந்தது. பதற்றமடைகிற கொரில்லா மீண்டும் சிறுவனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்திற்குச் செல்ல முயன்றது. நிலைமையின் தீவிரத்தை உணர்கிற பூங்காவின்  சேஃப்ட்டி அதிகாரிகள் வேறு வழியின்றி ஹராம்பியை துப்பாக்கியால் சுட்டு சிறுவனை மீட்பது என முடிவெடுக்கிறார்கள். கொரில்லா கூடியிருக்கும் மக்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் கொரில்லாவின் மார்பு பகுதியில் சுடுகிறார்கள். ஹராம்பி சிறுவனை விட்டு விட்டு கீழே விழுகிறது. சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறான். இந்தச் சம்பவத்தை வீடியோ எடுக்கிற ஒருவர் அதை இணையத்தில் பதிவிடுகிறார். உலகெங்கும் பெரிய அதிர்வலைகளை அந்தச் சம்பவம் உருவாக்குகிறது. பூங்கா அதிகாரிகள் செய்தது தவறு என்று பூங்காவிற்கு முன்பு போராடுகிறார்கள். பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது. ஹராம்பி சைவம் என்றும் அதனால் சிறுவனுக்கு எந்த ஆபத்தும் வந்திருக்காது என்று விமர்சனங்கள் எழுகின்றன. முன் இரண்டு சம்பவங்களையும் முன்னிறுத்தி கொரில்லாவை பதற்றப்படுத்தி அதைக் கொன்றிருக்கிறார்கள் எனக் குற்றம் சுமத்துகிறார்கள். மே மாதம் 30 தேதி பூங்கா தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் “ஹராம்பியை இழந்தது வருத்தமளிக்கிறது, அப்போதைய சூழ்நிலையில் சிறுவனின் உயிர் முக்கியமென்பதால் வேறு வழியின்றி அதிகாரிகள் துப்பாக்கியால் சுட நேர்ந்தது என” விளக்கமளித்தது. மே 27 1999 ஆம் ஆண்டு பிறந்த ஹராம்பி தன்னுடைய 17 வயதைத் தொடங்கிய அடுத்த நாள்  மே மாதம் 28 தேதி கொல்லப்பட்டது. 

ஹராம்பி என்கிற பெயருக்கு “ஒன்றிணைந்து வருவது”  என்று  பொருள்.