பெட்ரோல், டீசலுக்கு பயோ எத்தனால் சரியான மாற்றாக இருக்குமா?! | Bio-Ethanol... Will it be a Creditable Alternative to Petrol & Diesel?

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (09/05/2018)

கடைசி தொடர்பு:16:41 (09/05/2018)

பெட்ரோல், டீசலுக்கு பயோ எத்தனால் சரியான மாற்றாக இருக்குமா?!

தேவையில்லாமல் இருக்கும் வைக்கோலை எரிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இதனால் நமது கைவசம் இருக்கும் பொக்கிஷத்தை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்!

பயோ எத்தனால்... பெட்ரோல்/டீசல் ஆகியவற்றைத் தொடர்ந்து, விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் மாற்று எரிபொருள். ஆம், தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும்விதமாக, 100 சதவிகிதம் பயோ எத்தனாலில் இயங்கக்கூடிய இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கு, வாகன உற்பத்தியாளர்களுக்குப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (MoRTH) அனுமதி வழங்கிவிட்டது. எனவே, பயோ எத்தனாலில் ஓடக்கூடிய பைக், ஸ்கூட்டர், ஆட்டோ ஆகியவை நம் ஊர்ச் சாலைகளில் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை!

பயோ எத்தனால் என்றால் என்ன?

பயோ எத்தனால்

மாடுகளின் சிறந்த உணவாகக் கருதப்படும் அரிசி வைக்கோல், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் உபரியாக இருக்கிறது. அங்கே தேவையில்லாமல் இருக்கும் வைக்கோலை எரிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இதனால் காற்று மாசடைவதுடன், நமது கைவசம் இருக்கும் பொக்கிஷத்தை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம். ஆம், ஒரு டன் அரிசி வைக்கோலைக்கொண்டு, 280 லிட்டர் பயோ எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும்!

farmers

அவ்வளவு ஏன், நாம் அன்றாடம் உணவாக எடுத்துக்கொள்ளும் அரிசி, கரும்பு மற்றும் பருத்திச் சக்கை, கோதுமை மற்றும் நெல் வைக்கோல், மூங்கில், உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் ஆகியவற்றில் இருந்தும்கூட பயோ எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். கூடவே மெத்தனால், சிஎன்ஜி ஆகியவற்றையும் உற்பத்தி செய்ய முடியும். இதனால், விவசாயம் சார்ந்த மாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்படும். சுருங்கச் சொல்வதென்றால், விவசாயிகளின் வாழ்க்கைத்திறன் உயரும்.

பஜாஜ், டிவிஎஸ்

இந்தச் சூழ்நிலையில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி, இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரித்துவரும் பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களை, 100 சதவிகிதம் பயோ எத்தனாலில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதன் வெளிப்பாடாகவே, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற `2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில், பயோ எத்தனாலில் இயங்கக்கூடிய அப்பாச்சி RTR 200 பைக்கைக் காட்சிப்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம். 

பயோ எத்தனாலின் ப்ளஸ், மைனஸ் ..?

 

தற்போது புழக்கத்தில் இருக்கும் பெட்ரோல்/டீசலுடன் ஒப்பிடும்போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பயோ எத்தனாலின் விலை மிகவும் குறைவுதான். ஒருவேளை ஜிஎஸ்டி வரம்புக்குள் பயோ எத்தனாலைக் கொண்டுவந்தால், பெட்ரோல்/டீசல் ஆகியவற்றைவிட லிட்டருக்கு 8 ரூபாய் விலை குறைவாக இருக்கும். தவிர எத்தனால், மெத்தனால், சிஎன்ஜி ஆகியவற்றை உற்பத்தி செய்வதன் வாயிலாக, ஆண்டுக்குச் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை நாம் மிச்சப்படுத்த முடியும். மேலும், காய்கறி மற்றும் பழக்கழிவுகள், உயிரினங்களின் கழிவு மூலம் இயற்கை எரிவாயுவைத் தயாரித்தால், அது சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்தும். மிக முக்கியமாக, பயோ எத்தனாலில் 35 சதவிகிதம் ஆக்சிஜன் இருப்பதால் இதில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் (Carbon Monoxide, NOx, Suphur Dioxide, Particulate Matter) மாசு, பெட்ரோல்/ டீசலில் இயங்கும் வாகனங்களைவிட 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை குறைவாகவே இருக்கும். ஆனால், 100 சதவிகிதம் பயோ எத்தனாலில் சில நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. 

nithin kadkari

இது பெட்ரோல்/டீசலைப் போல விரைவில் வெப்பமடையாது என்பதால், குளிர்காலத்தில் வாகனத்தை இயக்குவது சற்று கடினமான அனுபவமாக இருக்கலாம். இதே காரணத்தால் பெட்ரோல்/டீசலில் இயங்கும் வாகனத்தைவிட, பயோ எத்தனாலில் இயங்கும் வாகனத்தின் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும். எனவே, இன்ஜினில் அதற்கேற்ப மாற்றங்கள் செய்யவேண்டும். இதற்கான தீர்வாக `E85' எனப்படும் 85 சதவிகிதம் எத்தனால் மற்றும் 15 சதவிகிதம் பெட்ரோல் கலவை (Flexi-Fuel) பயன்படுத்தப்பட்டால், அதனால் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. ஏனெனில், தற்போதைய சூழ்நிலையில், 2 சதவிகிதம் குறைவான அளவிலேயே, பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக பயோ எத்தனாலுக்கு மாறும்போது, அது பெட்ரோல் மற்றும் டீசலைத் தாண்டி மக்களிடையே எந்தளவு சென்றடையும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தவிர, பயோ எத்தனால் ஆபத்தற்ற ஓர் எரிபொருளாகவே இருந்தாலும், அதை எப்படிக் கையாள்வது என்பதுகுறித்து முன்பே தெளிவுபடுத்துவது அவசியம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்