வெளியிடப்பட்ட நேரம்: 07:49 (10/05/2018)

கடைசி தொடர்பு:07:49 (10/05/2018)

ஒரு வேலையை `நாளைக்கு...’ என்று தள்ளிப்போடலாமா? - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

பொறுப்புகளில் இருந்து பின்வாங்குவது நமக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்

ஒரு வேலையை `நாளைக்கு...’ என்று தள்ளிப்போடலாமா? -  யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

 

`ன்றைக்கு ஒரு பொறுப்பிலிருந்து நழுவதன் மூலம், நாளைக்கு அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்; அது முடியாது’ - முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் உணர்ந்து சொன்ன வாக்கியம் இது. பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பது என்பது கடமையிலிருந்து தவறுவதற்கு ஒப்பானது. படிக்கும் நேரத்தில் படிப்பு; வேலை பார்க்கவேண்டிய நேரத்தில் வேலை... இப்படித் தங்களுக்கான கடமையை உணர்ந்து செய்கிறவர்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. வெளியூர் செல்வதற்கு காலை ஆறு மணி பேருந்தை எதிர்பார்த்து ஒரு சிறுநகரத்தில் காத்திருக்கிறர் ஒரு முதியவர். உரிய நேரத்தில் அந்தப் பேருந்து வந்தால்தான் அவரைப் போன்ற பயணிகளுக்கு நிம்மதி. அதன் ஓட்டுநர் ஏதோ காரணத்தால் விடுமுறை எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்காகப் பேருந்து சேவை நின்றுவிடுமா? நிற்காது. மாற்றாக இன்னோர் ஓட்டுநரைப் போட்டு பேருந்தை இயங்கச் செய்வார்கள். அதே நேரத்தில் இந்த `மாற்று’ ஏற்பாடு எப்போதும் கைகொடுப்பதும் இல்லை `ஒரு வேலையை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தள்ளிப்போடுவது ஒருபுறம் `சோம்பல்’ என்று தோன்றலாம். இதுவும் பொறுப்பிலிருந்து நழுவுகிற காரியம்தான். காரணமே இல்லாமல் வேலைக்குப் போகாமல் இருப்பது, பொய் சொல்லி விடுமுறை எடுப்பது... இவையெல்லாம் நமக்கு சுகமாகத் தெரியலாம். ஆனால், அதன் பின்விளைவு நம்மை பாதிக்கவே செய்யும். இப்படி நம் பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவது சில நேரங்களில் நம்மை கூனிக் குறுகிப் போகச் செய்துவிடும். அதை உணர்த்தும் கதை இது...

கதை

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நேரம். கல்லூரி மாணவர்கள் நான்குபேர் ஒன்று கூடினார்கள். கேட்க வேண்டுமா? உற்சாகம் கரைபுரண்டது. நால்வரும் சேர்ந்து ஒரு சினிமாவுக்குப் போனார்கள். பிறகு ஒரு ரெஸ்டாரன்ட்டில் டின்னர் சாப்பிட்டார்கள். அவர்களில் ஒருவன் தனியாக ஓர் அறை எடுத்துத் தங்கியிருந்தான். அங்கே போய் கும்மாளமடிப்பது என்று முடிவு செய்தார்கள். அந்த நண்பனின் அறையில், நள்ளிரவுக்கும் மேல் பேசி, சிரித்து, டி.வி பார்த்து, மொபைலில் கேம் விளையாடி எனக் களித்துத் தீர்த்தபோது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. படுக்கப் போகும்போதுதான் அவர்களில் ஒருவன் நினைவுபடுத்தினான். ``மச்சி நாளைக்கு நமக்கு கெமிஸ்ட்ரி எக்ஸாம் இருக்குடா...’’ அடுத்த நாள் பரீட்சைக்கு அவர்கள் தயாராகியிருக்கவில்லை.

அது ஒன்றும் முக்கியமான பரீட்சை இல்லை. பேராசிரியர் தன் மாணவர்களின் திறனை அறிய நடத்தும் மாதாந்திரப் பரீட்சைதான். என்றாலும், கெமிஸ்ட்ரி புரொஃபஸர் கொஞ்சம் கறாரானவர். இன்டர்னல் மார்க்கில் தாட்சண்யமில்லாமல் கைவைத்துவிடுவார். அந்த மாணவர்கள் என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

தேர்வு

அடுத்த நாள் காலை அந்த நான்கு மாணவர்களும் வந்தபோது கல்லூரியே அவர்களை வேடிக்கை பார்த்தது. நான்கு பேரும் கலைந்த தலை, சட்டையில் தூசு, மண், கிரீஸ் படிந்திருக்க அழுக்காக வந்திருந்தார்கள். வகுப்பறைக்குள் வந்த புரொஃபஸர் அவர்களை விசாரித்தார்.

மாணவர்களில் ஒருவன் சொன்னான்... ``சார் நேத்து என்னோட சித்தி பொண்ணுக்குக் கல்யாணம் சார். நான்தான் இவங்களையும் `வாங்கடா’னு கூட்டிட்டுப் போயிருந்தேன். கல்யாணம்லாம் முடிஞ்சு ஒரு கார்ல கிளம்பிட்டோம். நம்ம ஊருக்கு வர்ற வழியில காரோட ஒரு டயர் பஞ்சர் ஆகிடுச்சு. அக்கம்பக்கத்துல எந்த வொர்க்‌ஷாப்பும் இல்லை. அதனால நாலு பேரும் காரைத் தள்ளிக்கிட்டே வந்து சேர்ந்தோம்...’’

``சரி... அப்புறம்?’’

``சார்... நாங்க இன்னும் வீட்டுக்குக்கூடப் போகலை சார். இன்னிக்கி எக்ஸாம் இருக்கேனு கெளம்பி நேரா இங்கே வந்துட்டோம்...’’ என்றான் இன்னொருவன்.

``ம்...’’ பேராசிரியர் அவர்களின் துயரக் கதையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.

``எங்களுக்கு மட்டும் இன்னிக்கி டெஸ்ட் வைக்காம, இன்னொரு நாள்வெச்சீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும் சார்...’’

பேராசிரியர் அதற்கு ஒப்புக்கொண்டார். `சரி... உங்களுக்கு மட்டும் மூணு நாள் கழிச்சு பரீட்சை’’ என்றார்.

தேர்வு

அந்த நால்வரும் பேராசிரியருக்கு நன்றி சொன்னார்கள். பரீட்சை நாள் வந்தது. அன்றைக்கு அந்த மாணவர்கள் தங்கள் பாடங்களை நன்றாகப் படித்திருந்தார்கள். பேராசிரியர் அந்த நால்வரையும் அழைத்துக்கொண்டு போய் தனித்தனி அறைகளில் உட்காரவைத்தார். அவர்களுக்குக் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. அதில் அதிகமில்லை... இரண்டே கேள்விகள்தான் கேட்கப்பட்டிருந்தன.

1. உங்களுடைய பெயர் ______________ ( 1 மதிப்பெண்)

2. நீங்கள் பயணம் செய்த காரில் எந்த டயர் வெடித்தது? ______________ (கீழ்க்கண்ட நான்கு விடைகளில் ஒன்றை எழுதவும் - 99 மதிப்பெண்கள்)

விடை: அ) காரின் முன் இடது பக்க டயர் ஆ) காரின் முன் வலது பக்க டயர் இ) காரின் பின் இடது பக்க டயர் ஈ) காரின் பின் வலது பக்க டயர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்