``ஏ.சி. ஹால், நீச்சல் குளம்னு ஒவ்வொரு குதிரையையும் பிள்ளைங்க மாதிரி பார்த்துக்கிறோம்!’’ - கிண்டி குதிரை ரேஸுக்கு ஒரு விசிட் | A day at the Guindy Race Course

வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (10/05/2018)

கடைசி தொடர்பு:13:00 (10/05/2018)

``ஏ.சி. ஹால், நீச்சல் குளம்னு ஒவ்வொரு குதிரையையும் பிள்ளைங்க மாதிரி பார்த்துக்கிறோம்!’’ - கிண்டி குதிரை ரேஸுக்கு ஒரு விசிட்

நிறைய மகாராஜாக்கள் இங்கு ரேஸ் ஆடியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பெரும்புள்ளிகள் இங்கே தொடர்ந்து வருவார்கள். ஆனால், எங்களுக்கு எப்போதும் ஆதரவு தருவது பாமர மக்கள்தான்.  இங்கே நிகழும் சில தில்லுமுல்லுகளால் ஏழைகள் பாதிக்கப்படுவதை மறுப்பதற்கில்லை.

``ஏ.சி. ஹால், நீச்சல் குளம்னு ஒவ்வொரு குதிரையையும்  பிள்ளைங்க மாதிரி பார்த்துக்கிறோம்!’’ - கிண்டி குதிரை ரேஸுக்கு ஒரு விசிட்

``எப்பா தம்பிங்களா, நீங்க எதுவும் தெரிஞ்சிக்க வேணாம். தயவுசெய்து இப்டியே வெளில போயிடுங்க... உள்ளே வந்துடாதீங்க!” என்று தலைக்குமேல் இரு கரங்களைக் கூப்பியவருக்கு, வயது 70 இருக்கும். கிண்டி ரேஸ் கோர்ஸில் என்ன நடக்கிறது...  இன்னும் அங்கே ரேஸ் நடைபெறுகிறதா... என, ஒருநாள் முழுக்க அங்கிருந்து சூழலைத் தெரிந்துகொள்ளச் சென்றோம். கிண்டி பேருந்துநிலையத்துக்கு பின்புறம் உள்ள அந்தப் பெரிய கேட்டினுள் நுழைந்து அங்கு இருப்பவர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் இந்த முதியவரின் குரல்தான் எச்சரிக்கையுடன் எங்களை வரவேற்றது. 

கிண்டி ரேஸ் கோர்ஸ்

தேர்வு அறைக்கு வெளியே மாணவர்கள் குனிந்த தலை நிமிராமல் பரபரப்புடன் புத்தகத்தைப் புரட்டுவதுபோல ஆளாளுக்கு கையில் பேனாவை வைத்துகொண்டு பிங்க் நிறத்திலும் நீல நிறத்திலும் உள்ள காகிதங்களையும், கால்குலேட்டர் அளவு உள்ள புத்தகத்தையும் உற்றுப்பார்த்தபடி மனக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தனர். அந்தச் சீட்டுகளும் புத்தகங்களும் அங்கு உள்ள அனைவரின் கைகளிலும் இருந்தன. அன்றைய தேதியில் நடக்கவுள்ள ரேஸில் பங்கேற்கும் குதிரைகளின் எடை, அவை இதற்கு முன் பங்கேற்ற முந்தைய போட்டிகள், அதன் ஜாக்கிகள் என ஒட்டுமொத்தத் தகவலும் அதில் இடம்பெற்றுள்ளன. அன்று நடக்கும் 8 ரேஸுக்கான தகவல்களும் அந்தப் புத்தகத்தில் இருந்தன.

கிண்டி

குதிரைகள் மீது பெட் கட்டுவதற்காக, அந்த இடத்தில் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. தரையில் வரிசையாக அமர்ந்து ஒரு தரப்பினர், வட்டமாக அமர்ந்து விவாதித்தபடி ஒரு தரப்பினர், ஒவ்வொரு மூலையிலும் தனித்தனியாக நின்று, உட்கார்ந்து, படுத்தபடி என விதவிதமான தோரணையில் மனிதர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரிடத்திலும் இருந்த ஒற்றுமை கையில் பேனா, பேப்பர், மனக்கணக்கு, குனிந்த தலை நிமிராத தீவிரம் என, கிண்டி ரேஸ் கோர்ஸ் உள்ளே நுழைந்தால் ஒருபக்கம் இப்படி இருந்தது.

கிண்டி  ரஸ் கோர்ஸ்

இன்னொரு பக்கம், சொகுசு கார்கள் வந்தவண்ணம் இருந்தன. வெயில் படாத இடங்களில் காரை நிறுத்திவிட்டு கோட், சூட்டுடன் வந்து இறங்குகிறார்கள். பெரும்பாலும் முதியவர்கள் என்பதால், பொடிநடையில் மைதானத்துக்குள் நுழைகிறார்கள். அவர்கள் கையில் எந்த பேப்பர் பேனாவும் இல்லை. கிண்டியில் தினமுமே குதிரைப் பந்தயம் நடக்கிறது. வாரத்தில் அல்லது மாதத்தில் இரண்டுமுறை கிண்டி மைதானத்திலேயே குதிரைகள் ஓடுகின்றன. மற்ற நாள்களில் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, மைசூர் ஆகிய ஊர்களில் நடக்கும் பந்தயத்தை உள்ளே இருக்கும் டி.வி-யில் பார்த்தபடி பணம் கட்டி ஆடுகிறார்கள்.

 ரேஸ் கோர்ஸ்

நாங்கள் சென்ற தினம், கிண்டியில் நேரடி குதிரைப்பந்தயம் நடைபெற்றது. அதை ‘மெட்ராஸ் ரேஸ்’ எனச் சொல்கிறார்கள். காண விரும்புபவர்களுக்கு 10 ரூபாய், 30 ரூபாய், 120 ரூபாய்  என மூன்றுவிதமான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. 

இரண்டுவிதமாக பெட் கட்டுகிறார்கள். ஒன்று `வின்'; மற்றொன்று 'பிளேஸ்'. இந்தக் குதிரை வெற்றிபெறும் என உறுதியாகச் சொல்லி ஒரு குதிரையின் மீது பணம் கட்டுவது `வின்'. குறிப்பிட்ட மூன்று குதிரைகள்மேல் பணம் கட்டி அந்த மூன்றில் ஏதேனும் ஒரு குதிரையாவது முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும் எனச் சொல்லி பணம் கட்டுவது `பிளேஸ்'. Jackpot, forecast என இன்னும் சில பெட்டிங் முறைகளும் உள்ளன. ஆனால், பெரும்பாலானவர்கள் பணம் கட்டுவது `வின்' மற்றும் 'பிளேஸில்'தான்.

டிக்கெட் வாங்கிக்கொண்டு நாங்கள் உள்ளே நுழைந்தபோது, புராதனத் திரையரங்கு ஒன்றுக்குள் நுழைந்த உணர்வு. வட்டவடிவில் கூடாரமாக இருந்த பெரிய அறையைச் சுற்றி இரும்புக்கம்பியால் செய்யப்பட்ட கூண்டுகள் இருந்தன. ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் ஆட்கள் அமர்ந்துகொண்டிருக்க, அவர்களை நோக்கி ஒயின் ஷாப்பில் சரக்கு வாங்குவதுபோல கூட்டம் மொய்க்கிறது. என்ன ஏதென்று ஆர்வம் மேலிட, நாங்கள் கவனித்ததைப் பார்த்தவர் ``இதாங்க புக்கிங் கவுன்ட்டர். கூண்டு உள்ளே உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறவங்க புக்கிஸ். என்ன, ரேஸ் ஆடப்போறீங்களா?” என்றார்.

கிண்டி ரேஸ் கோர்ஸ்

``இல்லண்ணா, சும்மா சுற்றிப்பார்க்கலாம்னு வந்தோம்” என்றதும் ``இது என்னா பீச்சா, பார்க்கா? இங்கெல்லாம் வர ஆரம்பிச்சீங்கன்னா, கல்யாண வீட்டுல நுழையுற மாதிரிதான் வருவீங்க. வெளியே போவும்போது குழியில மண் அள்ளிப்போட்டுட்டு சுடுகாட்டுல இருந்து நடந்துபோற மாதிரிதான் போவீங்க. என்ன... பரவால்லியா?” என்றார். நாங்கள் அவரிடம் எதுவுமே பேசவில்லை. மேலும் எங்களை பொருட்படுத்துவது நேர விரயம் என்றெண்ணி, அவரும் எங்களைக் கடந்து போனார். நாங்கள் அந்தப் பரபரப்பான சூழலைக் கவனித்துக்கொண்டிருந்தோம். இளைஞர்கள், நடுத்தரவயது மனிதர்கள், தள்ளாடும் முதியவர்கள் என எல்லா வயதுக்குட்பட்டவர்களும் அங்கே விரவியிருந்தனர். தாங்கள் பந்தயம் கட்டிய குதிரை ஜெயிக்கிறதா... இல்லையா என்று அங்கே உள்ள தொலைக்காட்சிப் பெட்டியை அன்னாந்து பார்த்தபடி அல்லது தலைகுனிந்து சீட்டில் எதையோ எழுதியபடி இருக்கின்றனர். தான் பந்தயம் கட்டிய குதிரை தோற்றுவிட்டதென்று கண்கலங்கிய இளைஞரைப் பார்த்தோம். அவரின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும்போது எங்களுக்கும் கண் கலங்கியது. இன்னொரு பக்கம் அனுபவஸ்தர் ஒருவரின் வெற்றிக்கூச்சல். அங்கு இருந்த கலவையான மனநிலையில் மேற்கொண்டு இருக்க முடியவில்லை. 

கிண்டி ரேஸ் கோர்ஸ்

இத்தனை குதிரைகளையும் எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்பது பற்றி தெரிந்துகொள்ள குதிரைப் பயிற்சியாளர் ரஹமத்துல்லாவிடம் பேசினோம்.

``ஒரு நல்ல ரேஸ் குதிரை வாங்கணும்னா, பத்து லட்சம் ரூபாயில இருந்து ஐம்பது லட்சம் ரூபாய் வரை ஆகும். அவ்வளவு விலை கொடுத்து வாங்குற குதிரைகளை, நாங்க எப்படிப் பார்த்துப்போம்னு யோசிங்க. குதிரைங்க ஓய்வெடுக்க ஏசி ஹால், தனியா நீச்சல்குளம், மருத்துவமனை இருக்கு. எங்க குழந்தைகளைப் பார்த்துகிற மாதிரிதான் அதுங்களைப் பார்த்துக்கிறோம்.'' 

கிண்டி ரேஸ் கோர்ஸ்

குதிரைப்பந்தயம் நடக்கும் மைதானத்தை நோக்கி நடந்தோம். மதியம் 2 மணியிலிருந்து 6 மணி வரை அரைமணிக்கு ஒரு தரம் என மொத்தம் எட்டு பந்தயங்கள் நடக்கின்றன. குதிரைப்பந்தயத்துக்குச் செல்லும் புற்கள் நிரம்பிய பூங்கா போன்ற இடத்தில், குதிரை மற்றும் அதன் ஜாக்கிகளின் அணிவகுப்பு நடக்கிறது. அது முடிந்ததும், மிலிட்டரி பேண்டு குழுமம் வாத்தியங்கள் இசைக்க, ஒய்யார நடையில் குதிரைகள் ஓட்டத்துக்காக மைதானத்துக்குள் நுழைகின்றன.

பார்வையாளர்களோடு பார்வையாளராக நாங்களும் கேலரியில் உட்கார்ந்தோம். திரைப்படங்களில் மட்டுமே பார்த்த காட்சியில் நேரடியாகப் பங்குகொள்ளும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், எங்களுடன் உட்கார்ந்திருந்தவர்கள் தங்கள் குதிரை ஜெயிக்குமா... போட்ட பணம் கிடைக்குமா என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததைப் பார்க்கக் கவலையாக இருந்தது. ``இது மூணாவது ரேஸ் தம்பி, இது இல்லாம இன்னும் அஞ்சு ரேஸ் இருக்கு” என்றவரிடம் ``நீங்க எப்படிண்ணா... சும்மா பார்க்க வந்தீங்களா, இல்லாட்டி பெட்டிங் கட்டியிருக்கிங்களா?” என்றேன்.

கிண்டி ரேஸ் கோர்ஸ்

``வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு இங்கே சும்மா உட்காந்துட்டு இருக்கிறது என்ன பைத்தியாமாப்பா? பெட்டிங் கட்டியிருக்கேன். போன ரெண்டு ரேஸ்ல மட்டும் 4,500 ரூபாய் விட்டேன். தோ வர்ற ரேஸ்ல புடிச்சிருவேன் பாத்துக்கங்க. ஏன்னா, நாலாம் நம்பர் மேல கட்டியிருக்கேன். போன வாரம் மும்பை ரேஸ்ல இந்த ஜாக்கிதான்பா கப் அடிச்சான். ஆளு குள்ளம், வெயிட் வேற கம்மி. குதிரையைத் தீயா பறக்கவிட்டான் பாருங்க!” என்றார்.

`பந்தயம் ஆரம்பாகிவிட்டது' என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். குதிரைகள் தூரத்திலிருந்து ஓடிவருவதை அங்கு உள்ள பெரிய திரையில் எல்லோரும் பார்க்கிறார்கள். குதிரைகள் வெற்றி இலக்கை நெருங்க நெருங்க, உட்கார்ந்து இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றார்கள். சிலர் ஆர்வமிகுதியில் இருக்கையைவிட்டு கீழே இறங்கி வேலிக் கம்பியைப் பிடித்தபடி பார்வையை ஓட்டத் தடத்தில் செலுத்தினார்கள். குதிரைகள் ஓடிவரும் வேகத்துக்கு இணையாக ஒலிபெருக்கியில் அறிவிப்பரும் பேச, அந்தச் சூழலில் இன்னும் பரபரப்பு கூடியது. குதிரைகள் வெற்றி இலக்கை நெருங்க, சிலர் ஆர்ப்பரித்தார்கள்; சிலர் தலையில் அடித்துக்கொண்டார்கள்; சிலர் தலையைப் பிடித்துக்கொண்டு குனிந்து அப்படியே கீழே உட்கார்ந்தார்கள். எல்லோரையும் முந்திக்கொண்டு ஒரு குதிரை இலக்கைத் தொட்டதும் ஒலிபெருக்கியாளர் உச்சஸ்தாயியில் அலறி பேச்சை நிறுத்தியதும் அடைமழை விட்டோய்ந்ததுபோல் இருந்தது. இவை எல்லாவற்றையும் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையில் அமர்ந்துகொண்டு கோட்சூட் பார்வையாளர்கள் கவனித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த காட்சி, நவீன இந்தியாவின் எளிய சித்திரமாக கண்முன் தோன்றியது. 

கிண்டி ரேஸ் கோர்ஸ்

இந்தப் பந்தயம் குறித்து கிண்டி ரேஸ் கோர்சின் சேர்மேன் திரு. ராமகிருஷ்ணனிடம் பேசினோம். 

``1777-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது இந்த ரேஸ் கோர்ஸ். இந்தியாவிலேயே பழைமைவாய்ந்த மிகவும் முக்கியமான ரேஸ் கோர்ஸ் இது. பரப்பளவிலும் இதுதான் பெரியது. மொத்தம் 225 ஏக்கராக இருந்து அங்கே இங்கே எனக் கொடுத்து, இப்போது நூற்றி சொச்சம் ஏக்கர் இருக்கிறது. நிறைய மகாராஜாக்கள் இங்கு ரேஸ் ஆடியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பெரும்புள்ளிகள் இங்கே தொடர்ந்து வருவார்கள். ஆனால், எங்களுக்கு எப்போதும் ஆதரவு தருவது பாமர மக்கள்தான்.  இங்கே நிகழும் சில தில்லுமுல்லுகளால் ஏழைகள் பாதிக்கப்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால், இப்போது அவற்றையெல்லாம் தடுக்கும்விதமாக நிறைய விஷயங்கள் செய்துவருகிறோம். ஆங்காங்கே வீடியோ கேமராஸ் செட் பண்ணியிருக்கிறோம். ஜாக்கிகள் குதிரை ஓட்டும்போது ஏதாவது முறைகேடு செய்கிறார்களா என கவனிக்க ஆட்கள் போட்டிருக்கிறோம். 

1974-ம் ஆண்டில் கலைஞர் இதைத் தடைசெய்தார். 1985-ம் ஆண்டில் கமிட்டி உறுப்பினர்களிடையே நடந்த குளறுபடியால், எம்.ஜி. ஆர் ஆட்சியில் மேலும் ஒருமுறை தடை செய்தனர். இது சூதாட்டம் அல்ல... ஸ்போர்ட்ஸ்தான் என 1995-ம் ஆண்டில்தான் இதற்கான தடை நீக்கப்பட்டது. பல இன்னல்கள் அல்லல்கள் நடுவே இதைத் தொடர்ந்து இயக்கிவருகிறோம். முதலில், இன்றைய இளைஞர்கள்  இதை ஒரு விளையாட்டாக நினைத்து இங்கே வந்து பார்க்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!''

கிண்டி ரேஸ் கோர்ஸ்

மாலை 6 மணிக்கு ரேஸெல்லாம் முடிந்து ஓடிய, சீறிய, தவறி விழுந்த எல்லா குதிரைகளும் தொழுவம் சென்று சேர்ந்தன. தீபாவளிப் பண்டிகை முடிந்த மறு தினத்தில் தெருக்களில் வெடித்து சிதறிய பட்டாசு பேப்பர்களைப்போல ரேஸ் புத்தகங்களும் தாள்களும் அங்கு சிதறிக் கிடந்தன. பட்டாசு வெடித்த குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் பட்டாசு வெடிக்காத குழந்தைகள் ஏக்கத்துடனும் அந்தப் பட்டாசுத் தாள்களைப் பார்ப்பதுபோல இங்கும் இரண்டு தரப்பினர் கேட்டை நோக்கி நடந்து வெளியேறினர்.


டிரெண்டிங் @ விகடன்