Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"10 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு சூரியன் இப்படித்தான் அழியும்!” - கணிக்கும் விஞ்ஞானிகள்

னிதனுக்குப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதைப்போலவே அதன் அழிவு பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் உண்டு. பல்வேறு மதங்களும் கூட உலகம் தோன்றியதைப் பற்றி மட்டுமன்றி அதன் அழிவு எப்படி இருக்கும் என்றும் கூறுகின்றன. விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூட தொடக்கத்தையும் முடிவையும் அறிந்து கொள்வதற்கு பல காலமாக முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளும்போதும் புதுப்புது விஷயங்களைக்  கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். 

இப்படித்தான் அழியப்போகிறது நமது சூரியன்

 சூரியன்

உயிர்ப்போடு இருக்கும் சூரியன் அதனுள்ளே இருக்கும் எரிபொருள் தீர்ந்த பிறகு இறக்கப்போகிறது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் எப்படி அழியப்போகிறது என்பதில்தான் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சூரியனின் இறுதிக்காலம் எப்படி இருக்கக்கூடும் என்பதை விஞ்ஞானிகள் முன்னரே கணித்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் முன்பு இருந்ததை விடவும் தற்பொழுது தெளிவான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சூரியனுக்கு 4.5 பில்லியன் வயதாகிறது, நடுத்தர வயதை அடைந்திருக்கும் சூரியன் இன்னும் பத்து பில்லியன் வருடங்களில் அதன் இறுதிக்காலத்தை நெருங்கி விடும். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன்தான் அதை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அதுதான் உயர் வெப்பநிலையில் ஹீலியமாக மாறி ஆற்றலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. மொத்த ஹைட்ரஜனும் தீர்ந்துபோகும் போது சூரியன் ரெட் ஜெயன்டாக (அப்ப படம் எடுக்குமான்னு கேட்காதீங்க பாஸ்) மாற்றமடையும். அப்பொழுது சூரியன் விரிவடையத் தொடங்கும், அதன் பருமனும், சுற்றளவும் தற்போழுது இருப்பதை விடவும் 250 மடங்கு பெரியதாகும். அப்பொழுதே புதன், வெள்ளி ஆகிய கிரகங்களை சூரியன் விழுங்கியிருக்கும். அதே வேளையில் ரெட் ஜெயன்ட் பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் நெருங்கலாம் அல்லது பூமியையும் சேர்த்தே விழுங்கிவிடும் என்றும் இரண்டு வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த இரண்டில் எது நடந்தாலும் அது பூமியின் அழிவு என்பது உறுதி செய்யப்பட்டுவிடும்.

கருந்துளை

ஒரு நட்சத்திரம் அதன் இறுதிக்காலத்தில் பல்வேறு பரிணாமங்களாக மாற்றமடையும். உதாரணமாக சூப்பர் நோவாவாகவோ, கருந்துளையாகவோ, நியூட்ரான் ஸ்டாராகவோ மாறலாம். ஆனால் அது நட்சத்திரத்தின் நிறையைப்பொறுத்து மாறுபடும். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா (Albert Zijlstra) மற்றும் சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு சூரியன் அதன் இறுதிக்காலத்தில் எப்படிமாறக்கூடும் எனப் புதிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள். வேறுவேறு நிறைகளைக் கொண்ட பல்வேறு வாழ்க்கைச் சுழற்சி இருக்கும் நட்சத்திரத்தின் மாதிரிகளைப் புதிதாக கணினியில் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு கிடைத்த தகவல்களை ஒப்பிட்டுப்  பார்த்ததன் மூலமாகவும்  தாங்கள் உருவாக்கிய மாதிரியை ஆராய்ந்ததன் மூலமாகவும் இதை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதன்படி நமது சூரியன் அதன் இறுதிக்காலத்தில்  ரெட் ஜெயன்டாக மாறப்போவது உறுதியானது என்றும் ஆனால் அது அப்படியே இருந்து விடப்போவதில்லை என்றும் சொல்கிறார் ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா.

நெபுலா

ரெட் ஜெயன்ட் நிலைக்குப் பிறகு சூரியன் அதன் உட்பொருட்களை நொடிக்கு இருபது கிலோமீட்டர் வேகத்தில் வெளியே தள்ளும், அப்படி அதன் நிறையில் பாதியளவிற்கு வாயு மற்றும் தூசியை வெளியே தள்ளப்பட்டுவிடும். எஞ்சியிருக்கும் நடுப்பகுதி புற ஊதா கதிர்களையும், எக்ஸ்-ரே கதிரையும் வெளிப்படுத்தும். அதன் காரணமாக மாபெரும் ஒளிரக்கூடிய வாயு மற்றும் தூசுக்கள் அடங்கிய விண்மீன் நெபுலாவாக மாறும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒருவேளை மனிதர்கள் 2 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஆண்ட்ரோமேடா கேலக்ஸியில் வாழ்ந்தால் அங்கிருந்து கூட நமது சூரியனின் விண்மீன் நெபுலாவைப் பார்க்க முடியும் என்று ஆல்பர்ட் ஜீல்ஸ்ட்ரா கூறுகிறார். எஞ்சியிருக்கும் நட்சத்திரத்தின் உட்பகுதி அடுத்த பத்தாயிரம் வருடங்களுக்கு அதைச் சுற்றி இருப்பவற்றை ஒளிரச் செய்யும். சூரியனை விட 1.1 மடங்கு குறைவான நிறையுள்ள நட்சத்திரம் மங்கலான நெபுலாவாக உருமாறுகிறது. சூரியனை விட 3 மடங்கு நிறை அதிகமுள்ள நட்சத்திரம் பிரகாசமான நெபுலாவாக உருமாறுகிறது  என்பதையும் தங்களது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

விண்வெளி

இது போன்ற ஆய்வுகள் எப்போது நடந்தாலும் அதன் குறிக்கோள் இரண்டாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். ஒன்று நமது தோற்றத்தை பற்றி அறிந்துகொள்ளவது மற்றொன்று இந்தப் பூமி அழிந்துவிடும் முன்பு வேறு கிரகத்தில் குடியேறிவிட வேண்டும் என்பது. ஆனால் இந்த இரண்டு இலக்குகளையும் மனிதர்களால் எளிதில் அடைந்துவிட முடியாது என்பது உறுதி. இயற்கையில் சூரியனின் அழிவும் கூட அழகாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால், அதைக்  காண்பதற்கு மனிதர்கள்தாம் யாரும் இருக்கப்போவதில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement