வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (10/05/2018)

கடைசி தொடர்பு:19:49 (14/05/2018)

மலைப்பாம்பு, புதைமணல், 70 அடி அகழி... நாகலாபுரம் அருவிக்குப் போக தில் இருக்கா? #Nagalapuram

மலைப்பாம்பு... புதைமணல்.. 70 அடி அகழி... இந்த அருவிக்குப் போக உங்களுக்கு தில் இருக்கா?

மலைப்பாம்பு, புதைமணல், 70 அடி அகழி... நாகலாபுரம் அருவிக்குப் போக தில் இருக்கா? #Nagalapuram

 

coorg

உலகத்தில் ஒளியைவிட வேகமாகப் போகும் ஒரு விஷயம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை! சூரியனே டயர்டானதுக்கு அப்புறம் எழுந்து, பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்லோபிரேக்காக முடித்து, லன்ச்சை டின்னராக்கும்போது சண்டே முடிந்தேபோயிருக்கும். அந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ட்ரிப் அடித்தால், கொஞ்சம் மெமரிஸாவது டைரியில் மிஞ்சும். சென்னையில் இருக்கும் பேச்சுலர்களுக்கு இந்த விதி நிச்சயம் பொருந்தும். இந்த ஒரு நாளை வேஸ்ட் பண்ணாமல், இரவுக்குள் வீடு திரும்ப வேண்டும்; மதியம் கெயில் மாதிரி அடி பின்னியெடுக்கும் வெயிலுக்கு ஜில்லெனக் குளியலும் போட வேண்டும்; மெமரிகார்டையும் ஃபில் பண்ண வேண்டும். அப்படிப்பட்ட இடத்தை சீரியஸாக நெட்டில் தேடியபோது, வகையாகச் சிக்கியது நாகலாபுரம். #Nagalapuram

மலைப்பாம்பு

சென்னையிலிருந்து 90 கி.மீ தூரத்தில் ஆந்திர எல்லையில் இருக்கிறது நாகலாபுரம். ஆந்திர மாநிலம் என்றால் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியில்லை என்பது நாகலாபுரத்தில் குளித்தபோதுதான் தெரிந்தது. தெலுங்கர்கள்கூட தமிழில்தான் பேசுகிறார்கள். செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாகத்தான் நாகலாபுரம் போக வேண்டும். பைக்கில்கூடப் போய்விட்டு வரலாம். பத்துப் பேருக்குமேல் என்றால், வாடகை வேன் பிடிப்பது உங்கள் சாய்ஸ். தடா ஆர்டிஓ அலுவலகத்தில் பர்மிட் வாங்க வேண்டும். 

பைக்கில்தான் கிளம்பினேன். பெரியபாளையம் திரும்பும் வழியில் பிங்க் நிறத்தில் அறுத்துவைத்திருந்த கொய்யாப்பழங்களை பார்சல் வாங்கிக்கொண்டு, காலை டிபனெல்லாம் முடித்தபோது 8 மணி. நாகலாபுரம் அருவிக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்து காலை 5 மணிக்கே கிளம்பினால், சுட்டெரிக்கும் வெயிலில் ட்ரெக்கிங் போகும் வாய்ப்பைத் தடுக்கலாம். அதாவது, 7:30 மணிக்கு பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தால், ஒன்றரை மணி நேரத்தில் முதல் அருவிக்குப் போய்விடலாம். 

மலைப்பாம்பு

மலைப்பிரதேசம் என்பதால், நாகலாபுரத்தில் எக்கச்சக்க அருவிகள் உண்டு. சத்திகூடு மடுகு, கைலாசகோனா... இப்படி அருவிகள் மைண்டை டைவர்ட் பண்ணும். மற்ற அருவிகளுக்கு இப்போது சீஸன் இல்லை. நீங்கள் போகவேண்டியது `அர்ரே’ எனும் இடம். திருப்பதி சாலை வழியாக பிச்சாட்டூர் தாண்டித்தான் அர்ரே அருவிக்குப் போக வேண்டும். நாகலாபுரத்தில் மதிய உணவெல்லாம் சான்ஸே இல்லை. பிச்சாட்டூரில்தான் மதிய உணவு பார்சல் வாங்கிக்கொண்டேன். எல்லாமே செம சீப்! லெக் பீஸ் - 25 ரூபாய், மீன் வறுவல் - 15 ரூபாய், சிக்கன் 65 - 35 ரூபாய், பிரியாணி - 40 ரூபாய், சாப்பாடு - 40 ரூபாய், இட்லி -  3 ரூபாய் என, பார்லிமென்ட் கேன்டீனைவிட உணவு மலிவு. 

நாகலாபுரம்அர்ரே அருவிக்குப் பிச்சாட்டூரிலிருந்து வலதுபுறம் திரும்ப மறந்துவிடாதீர்கள். பைபாஸ் மாதிரி தெரிந்தது சாலை. சுற்றிலும் பச்சைப்பசேல் என பைக் ஓட்டுவதற்கே ஜாலியாக இருந்தது. அர்ரே அருவிக்கு அடையாளம், ஒரு பெரிய அரசமரம். அதைத் தாண்டியதும் 1 கி.மீ தூரத்தில் வலதுபுறம் திரும்ப வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், எந்த இடத்திலும் அர்ரே அருவிக்கான போர்டு இருக்காது என்பதை நினைவில்கொள்க.

30 ரூபாய் கொடுத்து  டோக்கன் போட்டு, பைக்கை பார்க் செய்துவிட்டுக் கிளம்பினால்... சுடுமணல், சிற்றோடைகள், கூழாங்கற்கள், செடிகொடிகள், திடும்மென முளைத்த மேடுகள், தடாலென இறங்கிய பள்ளங்கள் எனக் கிட்டத்தட்ட 3.5 கி.மீ., வைகோ போல் நடநட என நடந்தேன். `என்னடா வெயில் இப்படிப் பின்னியெடுக்குது, தண்ணி கிடைக்குமா!' என்று கவலைப்பட்டுக்கொண்டேதான் வந்தேன். முதல் அருவியைப் பார்த்ததும்தான் தெரிந்தது, நாகலாபுரத்துக்கு சீஸனெல்லாம் கிடையாது என்பது. இந்த அருவிக்கு ரெஸ்ட்டே கிடையாது. சொல்லப்போனால் வெயில் காலத்தில்தான் அருவி நீர் அதிகமாகிறது. இந்த வரியை அண்டர்லைன் பண்ணிக்கொள்ளுங்கள்.

முதல் சிற்றோடையைத் தாண்டியதும் பாதை வழியாகவே நடந்து போய், ஒரு கி.மீ தாண்டி இடதுபுறத்தில் திரும்ப வேண்டும். நேராகவே போனால் 8 கி.மீ நடக்கவைத்துவிடும் பாதை. மலை உச்சி வரை போய்த் திரும்பியவர்கள், ``ஒரு சொட்டுத் தண்ணிகூட இல்லைங்க... தண்ணி வருதுன்னு சொன்னாங்க. ஏமாந்து நாகலாபுரம் வந்துட்டோம்’’ என்று கீழிறிங்கிக்கொண்டிருந்தார்கள். மலைப்பாதையில் கொஞ்சூண்டு பாதை மாறினாலும், ட்ரிப்பே நாஸ்தியாகிவிடும்.

சிற்றோடை வரைதான் வெயில். அதுக்கப்புறம் எவ்வளவு வெயில் அடித்தாலும், `வானத்தைப்போல’ விஜயகாந்த் மாதிரி மரங்களால் குடை பிடிக்கிறது நாகலாபுரம் மலைத்தொடர். ஒரு இன்ச்கூட வெயில் தெரியவில்லை. வித்தியாசமாக இருந்தது. முதல் அருவியில் பெண்கள், குழந்தைகள் முதல் பெருசுகள் வரை எல்லோரும் ஜாலி பண்ணிக்கொண்டிருந்தார்கள். அருவி விழும் இடத்தில் அகழிபோல் குளம் கிடக்கும். இதுதான் குளியல் ஸ்பாட். நாகலாபுரத்தில் மொத்தம் ஐந்து அருவிகள் உண்டு. 4-வது அருவியைத் தவிர எல்லாமே இந்த டைப்தான். அகழியின் ஆழம் 20 அடியிலிருந்து 70 அடி வரை என்றார்கள். அதனால் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் அகழிக்குள் இறங்குவது பெஸ்ட். அரைகுறை நீச்சல் தெரிந்தவர்கள் முதல் அருவியோடு வீடு திரும்புவது நலம். சில உஷார் பார்ட்டிகள் லைஃப் ஜாக்கெட் போட்டுக் கும்மியடித்துக்கொண்டிருந்தார்கள். 

நாகலாபுரம்

மலை வழியாகப் பயணிப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். எப்போதுமே தண்ணீரை ஃபாலோசெய்து போனால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அருவி வழியாக வலதுபுறம் மேலேறிப் போனால், 25 நிமிடத்தில் 2-வது அருவி வந்தது. இங்கே எந்த அருவிக்கும் பெயர் இல்லை. 1-வது அருவி, 2-வது அருவி, 3-வது அருவி என நம்பரில்தான் அழைக்கிறார்கள். அடுத்து வருவதுதான் ரியல் டிரக்கிங். சும்மா நடந்தெல்லாம் போக முடியவில்லை. பாறை பாறையாகத் தவ்வித்தான் போகவேண்டியிருந்தது. சில இடங்களில் பாறை இடுக்குகளிலெல்லாம் நுழைந்து `பேராண்மை' ஜெயம் ரவி போல் ஃபீல் ஆனேன். இந்த நேரத்தில் `குரங்கிலிருந்து மனிதனாய் மாறாமல், குரங்காகவே இருந்திருக்கலாம்!' எனத் தோன்றியது. குரங்குகளைப் பார்த்துப் பொறாமையாக இருந்தது. கொஞ்சம் வெயிட் பார்ட்டிகள், பாறைக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த கதையெல்லாம் நடந்துகொண்டிருந்தது. ஃபிட்னஸின் அருமை, இந்த மாதிரி நேரங்களில்தாம் புரிந்தது. 

நாகலாபுரம்

இரண்டாவது அருவி செம ஜில்னெஸ். வெயிலுக்கு அவ்வளவு இதம். இங்கே வழுக்கும் பாறைகள் கவனம். சிலர் தண்ணீரில் மூழ்கிவிட்டு 'தண்ணீரில்' லயித்துக்கொண்டிருந்தார்கள். ``அதுக்குத்தான் பாஸ் இங்கே வர்றதே’’ என்பதாகவும் சிலரது ஸ்டேட்மென்ட்கள் உள்ளன. எல்லாம் ஓகே! குடித்துவிட்டு பாட்டில்களை சில்லு சில்லாக உடைக்க வேண்டாம் என்று சிலரிடம் கேட்டுக்கொண்டேன். எனவே, செருப்பு அல்லது ஷூ இல்லாமல் நாகலாபுரம் டிரெக்கிங் வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். முங்குநீச்சல் தெரியும் என்பதால், நீருக்கு அடியில்கூட சில பீர்பாட்டில்களைப் பார்த்தது ஷாக்கிங்காக இருந்தது. 

நாகலாபுரம்

``நீச்சல் பார்ட்டிகளுக்கு 2-வது அருவி அற்புதமான சாய்ஸ். 30 அடி ஆழம்'' என்றார்கள். மரத்தின் மீதேறிக் குதிக்கலாம்; பாறைகளின் மீதிருந்து டைவ் அடிக்கலாம். குளித்து முடித்தால், கபகபவென பசித்து முடிக்கும். சிலர் பாறாங்கற்களை அடுப்பாக்கி கறி சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கொண்டுவந்த பார்சலைப் பிரித்து, குரங்குகளுக்குத் தண்ணி காட்டிவிட்டுச் சாப்பிடுவதும் த்ரில்லிங்காக இருந்தது. 

மூன்றாவது அருவிக்கு எப்படிச் செல்ல வேண்டும் என விசாரித்தேன். பாதையே இல்லாத ஒரு பாதையைக் காட்டினார்கள். மேலேறினால், சொர்க்கம்போல் இரண்டாம் உலகமாய் விரிந்தது இடம். `இந்த அருவியிலா குளிச்சோம்!’ என்று அருவியை டாப் ஆங்கிளில் பார்த்தபோதுதான் அதன் பிரமாண்டம் தெரிந்தது. உடம்பைச் சில்லிடவைத்தது வியூ. கால்கள் கொஞ்சம் பிசகினாலும், அருவிக்குப் போகவேண்டியதுதான். சொல்ல மறந்துவிட்டேன். நாகலாபுரம் என கூகுளில் வீடியோ சர்ச் பண்ணினால், மலைப்பாம்பு வீடியோதான் முதலில் வந்தது. ஆம்! விசாரித்ததில் நாகலாபுரத்தில் மலைப்பாம்புகள் அதிகம் என்றார்கள். தண்ணீருக்குள் பயந்து பயந்துதான் குளித்தேன். மனிதர்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் மலைப்பாம்புகள் தங்காது என்று ஆறுதல்படுத்தினார்கள் சில எக்ஸ்பெர்ட்டுகள்.

நாகலாபுரம்மலைப்பாம்பைத் தேடிக்கொண்டேதான் பயணித்தேன். சுருண்டு கிடந்த எதைப் பார்த்தாலும் மலைப்பாம்பு மாதிரியே இருந்தது. (வீட்டுக்குப் போகும்போது, வளைந்து நெளிந்து சாலை முழுவதும் அடைத்தபடி க்ராஸ் செய்த மலைப்பாம்பு பார்த்ததுதான் ஹைலைட்!) கிட்டத்தட்ட 1.5 கி.மீ தவ்வித் தவ்வி இறங்கி, ஏறி, ஓடைகளைக் கடந்து போனால்... வேற லெவலில் இருந்தது. ஜேம்ஸ்கேமரூன் பார்த்தால், `அவதார்' அடுத்த பாகத்துக்கான லொக்கேஷனாக ஃபிக்ஸ் பண்ணிவிடுவார். பண்டோரா கிரகம்போல் இருந்தது ஏரியா. இதுதான் மூன்றாம் அருவி என்றார்கள். இது முழுக்க முழுக்க நீச்சல் பார்ட்டிகளுக்கு மட்டும்தான். அருவி கீழே விழும் இடமே 50 அடி ஆழம் என்றார்கள். இங்கே கரையே கிடையாது. நேராகப் பாறையிலிருந்து டைவ்தான். அப்படியே தண்ணீருக்குள் மல்லாந்தோ, அருவிக்குத் தலையைக் குடுத்தபடியோ, பாறைகளின் மீது அமர்ந்தோ இயற்கையை ரசித்தால்... அடடா... ஜென் நிலை நிச்சயம்! 


இதையும் கொஞ்சம் கவனிங்க!

* நாகலாபுரத்தில் `அர்ரே’ அருவிக்கு எப்போதுமே சீஸன்தான். வருடத்தின் 365 நாள்களும் தண்ணீர் கொட்டும். இங்கே மொத்தம் ஐந்து அருவிகள் உண்டு. 5-வது அருவி வரை ஏறிவிட்டு, ஒரு நாளில் கீழே இறங்குவது ரொம்பக் கஷ்டம். 

* காலை 7:30 மணி முதல் அனுமதி. மாலை 4 மணிக்கு மூன்றாவது அருவியிலிருந்து இறங்க ஆரம்பித்தால்தான் மாலை 6 மணிக்குள் வெளியே வர முடியும். இருட்டில் பாதை தெரியாமல் சிக்கி, மறுநாள் வரை காட்டில் தங்கிக் கிளம்பியவர்களெல்லாம் இங்கே உண்டு. 

* கைடுகள் உதவியுடன் கேம்ப் ஃபயர் போட்டு இரவு ஸ்டேவும் பண்ணலாம் நாகலாபுரத்தில். சரியான கைடுகள் அவசியம். 

* சாப்பாடு கிடைக்காது என்பதால், முன்கூட்டியே பார்சல் வாங்கிச் செல்லவும். குரங்குகள் தொல்லை அதிகம் என்பதால், கவனம். சாப்பாட்டுப் பையில் பைக் சாவி, கார் சாவி, மொபைல் போன் வைப்பது பேராபத்து.

நாகலாபுரம்

* மலைப்பாம்புகள்தாம் நாகலாபுரத்தில் ஃபேவரைட். சாதாரண தண்ணீர்ப் பாம்புகள், அட்டைப்பூச்சிகள், மரவட்டைகள் கவனம். பாறைகளில் நடக்கும்போது கால் தவறினால், சடுதியில் மலைச் சரிவில் உருளவேண்டியதுதான். நாங்கள் பிச்சாட்டூர் தாண்டி மெயின் ரோட்டில்கூட ஒரு மலைப்பாம்பு க்ராஸ் ஆவதைப் பார்த்தோம்.

* மலைப் பயணத்தில் பாதை மிகவும் முக்கியம். கொஞ்சம் பாதை மாறினாலும், மலை உச்சி வரை போய் ஒரு சொட்டு தண்ணீர்கூட பார்க்காமல் திரும்பவேண்டியதுதான். முதல் சிற்றோடை தாண்டி 1 கி.மீ-ல் இடதுபுறம் திரும்ப வேண்டும்.

* புதைமணல், கூழாங்கற்கள், சிற்றோடைகள், பள்ளங்கள், பாறைகள் எல்லாவற்றையும் கடந்தால்தான் சுகமான அருவிக் குளியல் கிடைக்கும். அடிபட்டால் முதலுதவி செய்யக்கூட முடியாது என்பதால், டிரெக்கிங்கில் கவனம்.

ஜில்லென்ற குளியலுக்கு வாழ்த்துகள்!

மற்ற பாகங்கள்

வாகமன்

 சைலன்ட் வேலி 

கொல்லிமலை 

அவலாஞ்சி

பரம்பிக்குளம் 

அதிரப்பள்ளி

பச்சைமலை, புளியஞ்சோலை

மேகமலை

பெருந்தேனருவி

ஜவ்வாது மலை

முத்துப்பேட்டை

நெல்லியம்பதி

அகும்பே

கூர்க்

ஏலகிரி ஜலகம்பாறை

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்