அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் சிற்பம்... சென்னை ஓவியக் கல்லூரியில் கண்காட்சி! | Government Fine Arts college refused to display some students Paintings

வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (10/05/2018)

கடைசி தொடர்பு:21:19 (10/05/2018)

அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் சிற்பம்... சென்னை ஓவியக் கல்லூரியில் கண்காட்சி!

இந்த உளவியல் பிரச்னை கல்லூரியால் எனக்கு ஏற்பட்டது என்றார் அந்த மாணவன்

அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் சிற்பம்... சென்னை ஓவியக் கல்லூரியில் கண்காட்சி!

இந்தியாவின் மிக முக்கியமான, வரலாற்றுப் பெருமைகொண்ட கல்லூரி சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரி. 1850-ம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஹன்ட்டர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் படித்த பலரும், இன்று பல்வேறு துறைகளில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கல்லூரி சமீபகாலமாக சர்ச்சைகளுக்குள்ளாகி வருகிறது. மே 9-ம் தேதி இக்கல்லூரியில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆனால், ஒரு கண்காட்சிக்கான, விழாவுக்கான எந்த ஏற்பாடுகளும் சரியாகச் செய்யவில்லை என அமைச்சர் வருத்தப்பட, கல்லூரி நிர்வாகம் குறித்துப் பல்வேறு புகார்களை மாணவர்களும் சொல்ல, கண்காட்சி களையிழந்தது.

ஓவியக் கண்காட்சி

முதலில் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்த அமைச்சர் ஒவ்வோர் ஓவியத்தையும், சிற்பங்களையும் மிகவும் கவனமாகப் பார்த்தபடி வந்தார். அப்போது ஒரு வித்தியாசமான சிற்பத்தைப் பார்த்த அமைச்சர், சிற்பத்தை வடித்த மாணவனை அருகில் அழைத்தார். `உளவியல்' என்ற தலைப்பில் அந்த மாணவன் பாதி சிதைந்த ஒரு மனித முகத்தை சிற்பமாக்கியிருந்தார். ``உங்கள் சிற்பம் நன்றாக உள்ளது'' என்று அமைச்சர் சொல்ல, உடனே அந்த மாணவர், ``இந்தக் கல்லூரியில் நான் படித்ததன் மூலம் அடைந்த மனவேதனைதான் சார், இந்தச் சிற்பம் செய்வதற்கான உந்துதல்'' எனச் சொல்ல அதிர்ந்துபோனார் அமைச்சர்.

கலைக் கல்லூரி

மாணவரிடம், ``என்ன பிரச்னை?'' என அமைச்சர் விசாரிக்க, ``கல்லூரியில் சிற்ப வேலைப்பாடுகள் செய்வதற்கு சரியான மூலப்பொருள்கள் தருவதில்லை'' என்றார் அந்த மாணவர். மேலும் ``கல்லூரியில் இன்னும் சில பாடப்பிரிவுகள் கொண்டுவரப்பட வேண்டும். கல்லூரியில் துறை சார்ந்த மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும்'' என அந்த மாணவர் சொல்ல, தொடர்ந்து மாணவர்கள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது. 

கண்காட்சி

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ``இந்தக் கண்காட்சிக்காக மாணவர்கள் மிகச் சிறப்பான முறையில் ஓவியங்களை வரைந்துள்ளனர்'' என்றார். ஆனால், அதன் பிறகுதான் அமைச்சருக்கே ஷாக். சிறப்பான படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்க தனியே எந்த ஒரு மேடையும் கல்லூரிக்குள் அமைக்கப்படவில்லை. ஏராளமான மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் குழுமியிருக்க, ``பரிசுகள் வழங்கும்போது எல்லோருக்கும் தெரியும்படி கொடுத்தால்தானே பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.  என்ன இது?'' என அமைச்சர் கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் கேட்க, முதல்வர் பதில் இல்லாமல் இருந்தார். அமைச்சரே பரிசுபெறும் மாணவர்களை அறைக்குள்ளிருந்து வெளியே அழைத்துவந்து பரிசுகளை வழங்கினார். 

 

 கண்காட்சி

அமைச்சர் சென்றபின் கல்லூரி மாணவர்கள் சிலரிடம் பேசினேன்.``சில மாணவர்களின் ஓவியங்களை வாங்கி கண்காட்சியில் வைக்காமல் அவற்றை ஒதுக்கி வைத்திருந்தனர்'' என மாணவர்கள் குற்றம்சாட்டினர். 

இந்தச் சர்ச்சைகள் குறித்து கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் பேசினோம். ``விழாவை நாங்கள் சிறப்பான முறையிலேயே ஏற்பாடு செய்திருந்தோம். மாணவர்கள் பலரும் பரிசு பெற்று உற்சாகமாகவே இருந்தனர். அமைச்சர் எங்களிடம் விழா ஏற்பாடு குறித்து அவரது கருத்துகள் சிலவற்றைக் கூறினார். அதற்கான விளக்கத்தை அவரிடம் நாங்கள் தெரிவித்திருந்தோம். வரைந்து கொடுத்த ஓவியங்களை எங்கள் ஆசிரியர் குழுவினர் தேர்வுசெய்தனர். அவற்றைத்தான் காட்சிக்கு வைத்திருந்தோம். ஆசிரியர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில்தான் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஓவியக் கண்காட்சி

தேர்வு முடிந்திருந்த காரணத்தால் மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். அவர்களுக்கு முறையாக அழைப்புவிடுத்தே விழாவை நடத்தினோம். மற்றபடி யாரையும் புண்படுத்தும் வகையில் விழாவை நடத்தவில்லை. கல்லூரியில் முதன்முறையாக இப்படி ஒரு கண்காட்சி நடக்கிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தவே இதுபோன்ற நிகழ்வை முன்னெடுக்கிறோம். கல்லூரி மாணவர்கள் சார்பாக அமைச்சரிடம் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம். அரசிடமிருந்தும் தேவையானவற்றை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுப்போம்" என்றார்.

ஓவியக் கண்காட்சி

சொல்லாதீங்க முதல்வரே.... செய்து காட்டுங்கள்!


டிரெண்டிங் @ விகடன்