வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (11/05/2018)

கடைசி தொடர்பு:15:37 (14/05/2018)

சுஜய் யானை தந்தத்தைப் பிடுங்கிய காட்டு யானை! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 12

12.30 மணிக்கு முதல் மயக்க ஊசியைத் துப்பாக்கி மூலம் யானைக்குச் செலுத்துகிறார்கள். ஊசியை வாங்கிய யானை தன்னுடைய உடலை மொத்தமாகச் சிலுப்புகிறது.

சுஜய் யானை தந்தத்தைப் பிடுங்கிய காட்டு யானை! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 12

சம்பவம் நடந்த பிறகு சுஜய் மீண்டும் சாடிவயலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பல யானைகளைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறைக்கு உதவியது.  2017 ஜனவரி மாதம் 17-ம் தேதி எப்போதும் போல சாடிவயல் முகாமில் சுஜய் மற்றும் பாரி யானைகள் இரண்டும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அன்றைய இரவு இரண்டு யானைகளுக்கும் உணவு கொடுக்கப்பட்டது. மாவூத்துகள் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு யானைகளுக்குச் செடி கொடிகளைப் போட்டுவிட்டு தூங்கச் சென்றனர். அன்றைய காலை 4 மணி வரை எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அதன்பிறகு நடந்த அந்த ஒரு சம்பவம் சுஜய்யின் வாழ்க்கையைத் திருப்பி போட்டுவிட்டுப் போனது. 

கும்கி

முந்தைய அத்தியாயம் 

அதிகாலை நான்கு மணி. முகாம் எப்போதும் போல அமைதியாய் இருக்கிறது. பாரியும் சுஜய்யும் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மாவூத்துகள் மட்டும் வன ஊழியர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் காட்டுக்குள் இருந்து மதம் பிடித்த காட்டு யானை ஒன்று முகாமிற்குள் நுழைகிறது. அதன் சத்தம் வனத்தையே மிரட்டுமளவிற்கு இருந்தது. முகாமிற்குள் புகுந்த யானை நேராகக் கும்கி யானைகள் இருக்கிற இடத்திற்கு வருகிறது. காட்டு யானையின் சத்தத்தில் சுஜய்யும் பாரியும் சுதாரித்துக் கொள்கின்றன. முகாமிற்குள் புகுந்திருப்பது மதம் பிடித்த யானை என்பதால் என்ன நடக்குமென்பதை யூகிக்க முடியாமல் போகிறது. 

சுஜய் யானை காட்டு யானையை முழுமையாகக்  கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அதைச்  சமாளிக்கும் திறன் பெற்றது. அதற்கான பயிற்சிகளை முதுமலையில் பெற்றிருக்கிறது. இப்போது இருக்கிற பெரிய பிரச்சனையே சுஜய்யின் கால்கள் கட்டப்பட்டிருப்பதுதான்.    கட்டி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகளைப் பார்க்கிற காட்டு யானை மேலும் மூர்க்கமாகிறது. சுஜய்யை நோக்கிக் காட்டு யானை வேகமாக ஓடுகிறது. சுதாரித்துக் கொண்ட சுஜய்யும் காட்டு யானையை எதிர்த்து நிற்கிறது. காட்டு யானை சுஜய்யின் முகத்திற்கு நேராக தன்னுடைய தந்ததால் குத்துகிறது. பல காட்டு யானைகளைப் பிடித்து பழக்கப்பட்ட சுஜய் பதிலுக்கு காட்டு யானையைத் தாக்குகிறது.பல இக்கட்டான நேரங்களில் தனக்கு தோள் கொடுத்த சுஜய்க்கு உதவ முடியாமல் போனதை நினைத்துப் பாரி யானை  கோபத்தில் பிளிறுகிறது. 

சுஜய்யின் கால்கள் கட்டிப் போட்டிருப்பதால் அதன் முழு பலத்தையும் பயன்படுத்திக் காட்டு யானையைத் தாக்க முடியவில்லை. இரண்டு யானைகளின் சத்தமும் முகாம் முழுமைக்கும் எதிரொலிக்கிறது. மாவூத்துகள், மற்றும் வன ஊழியர்கள் பதறி எழுந்து வருகிறார்கள். இரண்டு யானைக்கும் உச்சக்கட்ட மோதல் நடக்கிறது. வன ஊழியர்கள் பட்டாசுகளை கொளுத்திப் போடுகிறார்கள். ஆனால்  காட்டு யானைக்கு மதம் பிடித்திருப்பதால் எதையும் சட்டை செய்யாமல் மூர்க்கமாக சுஜய்யை தாக்குகிறது. பாரி யானையின் கால்களும் கட்டப்பட்டிருப்பதால் அதனாலும் சுஜய்க்கு உதவியாக வர முடியவில்லை.  சுமார் இருபது நிமிடங்கள் இரண்டு யானைக்கும் சண்டை நடக்கிறது. எவ்வளவோ போராடியும் சுஜய்யால் காட்டு யானையைச் சமாளிக்க முடியாமல் போகிறது.மொத்த பலத்தையும் தந்தத்தில் கொண்டு வந்த காட்டு யானை சுஜய்யை பலமாக தாக்குகிறது. முடிவில் காட்டு யானை சுஜய்யின் வலது பக்க தந்தத்தை வேரோடு பிடுங்கி போட்டு விடுகிறது. ஆனாலும் சண்டை நின்றபாடில்லை, ஒரு தந்தத்தை இழந்தாலும் சுஜய் காட்டு யானையை எதிர் கொள்கிறது.  வன ஊழியர்கள் நெருப்பு மற்றும் பட்டாசுகளை கொளுத்திக் காட்டு யானையின் பக்கமாக வீசுகிறார்கள். காட்டு யானை மீண்டும் காட்டுக்குள் ஓடிவிடுகிறது. 

சுஜய்

தந்தம் பிடுங்கப்பட்டு கீழே கிடக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட சுஜய் யானை கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தையே சுற்றி வருகிறது. அதன் மாவூத்து கண்ணீர் விடுகிறார். சுஜய்யின் நிலை எல்லோரையும் கவலைக்குள்ளாக்குகிறது. தனக்கென தனி பெரும் கதைகளை கொண்ட சுஜய் தன்னுடைய ஒரு தந்தத்தை இழந்து நின்றது.  பொதுவாக யானைகளின் தந்தம் உடைந்து விட்டால் வளர்ந்துவிடும். ஆனால் தந்தம் முழுவதுமாக வெளியே வந்துவிட்டதால் இனி சுஜய்க்கு இன்னொரு தந்தம் என்பது வாய்ப்பில்லாமல் போகிறது. சுஜய் ரத்தம் சொட்ட சொட்ட வேதனையில் துடிக்கிறது. சுய நினைவோடு இருக்கையில் சாதாரணமாக ஒரு பல்லை கூட நம்மால் பிடுங்கி விட முடியாது.ஆனால் ஒரு தந்தமே பிடுங்கப்பட்டிருக்கிறது. 5 டன் கொண்ட யானையைக் காலம் 30 நிமிடங்களில் மொத்தமாக  நிலை குலையச் செய்கிறது. உடனடியாக வனத்துறை கால்நடை  மருத்துவர் வரவழைக்கப்படுகிறார். சுஜய்க்கு மருத்துவ சிகிச்சை தொடங்குகிறது. மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பையும் சுஜய் கொடுக்கிறது. வனத்துறை மருத்துவர் தனி கவனமெடுத்து சுஜய்க்கு சிகிச்சையளிக்கிறார்.  ஒரு மாதத்தில் சுஜய்யின் காயம் கொஞ்சம் கொஞ்சமாக ஆற ஆரம்பிக்கிறது. முகாமில் சின்ன சின்ன வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். தந்தம் இழந்ததை மறந்து கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்ய ஆரம்பிக்கிறது. 

கும்கி யானைகளுக்குத் தந்தம் மிக முக்கியமான ஒன்று. தந்தத்தைக் கொண்டே காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் முடியும். இப்போது சுஜய் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா, கும்கியாகப் பயன்படுத்த முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு சுஜய் நல்ல ஆரோக்கிய நிலைக்குத் திரும்புகிறது. சுஜய் இயல்பு நிலைக்குத் திரும்பிய காலகட்டத்தில் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வர ஆரம்பித்தன. முகாமில் இப்போதைக்குக் காட்டு யானைகளை விரட்ட முழு பலத்தோடு இருப்பது பாரி மட்டும்தான். சுஜய்யை வைத்து இனி காட்டு யானைகளை விரட்ட முடியாது என்கிற முடிவுக்கு வருகிற வனத்துறை வேறு ஒரு கும்கி தேவை என அரசுக்குத் தகவல் கொடுக்கிறது. இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் ஒரு கும்கி மட்டுமே இருந்த நேரத்தில் வெள்ளலூர் அருகே ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதி விடியற்காலை 3 மணிக்கு ஊருக்குள் புகுந்த காட்டு யானை கணேசபுரம் என்கிற கிராமத்தில் தூங்கிக்கொண்டிருந்த 12 வயது காயத்ரி என்கிற சிறுமியை மிதித்துக் கொன்றது. அதோடு நிற்காமல் அதே பகுதியில் மேலும் 3 பேரைக் கொன்றது. வெள்ளலூர் கிராமம் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. 

காட்டு யானை

தகவல் தெரிந்து முதலில் 20-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகிறார்கள். 4 பேர் இறந்திருப்பதால் மேலும் பிரச்னை ஏற்படாமல் இருக்கக் காவல்துறையும் வனத்துறையோடு கை கோக்கிறது. சுமார் 70 காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகிறார்கள். ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள். யானை அங்கிருந்த ஒரு தோட்டத்தில் பதுங்கி இருப்பதை உறுதி செய்கிறார்கள். காலை 7 மணிக்கு யானையைப் பிடிக்கும் வேலையைத் தொடங்குகிறார்கள். சாடிவயலிலிருந்து பாரி யானை சம்பவ இடத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. கோவையின் ஏழு வனச்சரக அதிகாரிகளும் யானையைப் பிடிக்கிற பணியில் இணைந்து கொள்கிறார்கள். 30க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்களும் வனத்துறையோடு இணைகிறார்கள். யானை பதுங்கி இருந்த இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர்கள் வரை இருக்கிற இடங்கள் காவல் துறையின்  கட்டுப்பாட்டில் வருகிறது. பொதுமக்கள் வீட்டின் மேற் கூரையில் இருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். யானை பதுங்கி இருந்த இடம் மேடும் பள்ளமுமாக இருந்ததால் 3 ஜேசிபிகள்  கொண்டுவரப்பட்டு மண்ணை அள்ளிப்  போட்டு மேடு பள்ளங்களை சரி செய்கிறார்கள். ஏற்கெனவே மதுக்கரை மகாராஜா யானை விஷயத்தில் பல விமர்சனங்களை வனத்துறை சந்தித்திருப்பதால் இப்போது  மிகுந்த கவனமுடன் செயல்படுகிறார்கள். 

காட்டு யானை பதுங்கி இருந்த இடத்தைச் சுற்றி வளைக்கிறார்கள். யானை மூர்க்கத்தனமாக இருப்பதை உணர்கிற வனத்துறை அமைதி காக்கிறார்கள். யானை கோபத்தில் மண்ணை அள்ளி தன்மீது போட்டுக் கோபத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறது. நேரம் பார்த்து காத்திருந்த வனத்துறை சரியாக 12.30 மணிக்கு முதல் மயக்க ஊசியைத் துப்பாக்கி மூலம் யானைக்குச் செலுத்துகிறார்கள். ஊசியை வாங்கிய யானை தன்னுடைய உடலை மொத்தமாகச் சிலுப்புகிறது. மயக்க ஊசி வேலை செய்ய வேண்டும் என்பதால் யானையைப் பயமுறுத்துகிறார்கள். யானை மயக்கமடைந்து கீழே விழுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிற வனத்துறை யானையின் நான்கு கால்களிலும் கயிற்றைக் கட்டுகிறார்கள். ஒவ்வொரு கயிறும் அங்கிருந்த ஜேசிபி வாகனங்களில் இணைக்கப்பட்டிருக்கிறது. யானை மயக்கம் தெளிந்து எழுவதற்காக யானையின் மீது தண்ணீரை பாய்ச்சுகிறார்கள். காட்டு யானை மயக்கம் தெளிந்து எழுந்ததும் அதைக் கயிறு மூலமாக லாரியில் ஏற்ற வனத்துறை முயல்கிறது. ஆனால், மயக்கம் தெளிந்து எழுந்த காட்டு யானை யாருக்கும் கட்டுப்படாமல் தப்பித்துப் போக முயல்கிறது. ஜேசிபி இயந்திரங்கள் யானையின் காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கிறார்கள். யானை தடுமாறுகிறது. யானையை லாரியில் ஏற்றுவதில் தாமதம் ஏற்படவே 1.30 மணியளவில் மேலும் ஒரு மயக்க ஊசியை வனத்துறை யானைக்குச் செலுத்துகிறது. மூன்று பக்கமும் ஜேசிபி வாகனங்கள் யானையை இழுத்துக் கொண்டிருப்பதால் பாரி யானை லாரிக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறது.

பிடிபட்ட காட்டு யானை

 

பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு காட்டு யானையை மூன்று பக்கமும் ஜேசிபி உதவியுடன் லாரியில் ஏற்றுகிறார்கள். எப்போதும் காட்டு யானைகளைக் கும்கி யானைகளைக் கொண்டே பிடித்து பின்னர் லாரியில் ஏற்றுவார்கள். ஆனால், வெள்ளலூரில் ஜேசிபி உதவியுடன் காட்டு யானையைப் பிடித்து லாரியில் ஏற்றினார்கள். லாரியில் ஏற்றப்பட்ட காட்டு யானை பின்னர் டாப்சிலிப் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டது. சாடிவயல் முகாமில் பாரி மட்டுமே கும்கி பணிக்குப் பயன்படுத்தப்பட்டதால் வேறு இரண்டு கும்கி  யானைகள்  வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறார்கள். சுஜய் தந்தம் இழந்திருப்பதாலும், பாரி யானைக்கு வயதானதாலும்  இரண்டு யானைகளையும் ஓய்வுக்காக  முகாமுக்கு அனுப்ப வனத்துறை முயன்றது. இதற்கு இடையில் மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் வர ஆரம்பித்தன. பெரியநாயக்கன் பாளையம் சுற்றியுள்ள பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் அவற்றை விரட்ட கும்கி யானையைக் கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் போராடுகிறார்கள். டிசம்பர் மாதம் 14-ம் தேதி காட்டு யானைகளை விரட்ட தன்னுடைய வாழ்நாளில் கடைசியாக சுஜய் களத்துக்குச் சென்றது. கும்கி யானை இருப்பது தெரிந்தால் காட்டு யானைகள் வராது என்பதால் சுஜய் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டது. 

பாரி மற்றும் சுஜய் இரண்டு யானைகளுக்கும் கும்கி பணியிலிருந்து ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டு பாரி டாப்ஸ்லிப் முகாமுக்கும், சுஜய் தன்னுடைய தாய் வீடான முதுமலைக்கும் கொண்டு செல்ல முடிவு செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி காலை சுஜய் முதுமலைக்கு வந்து சேர்ந்தது. சுஜய்யை ஏற்றி வந்த லாரியில் ஜான் மற்றும் சேரன் என்ற இரு கும்கி யானைகள் அதன் மாவூத்துகளோடு  சாடிவயலுக்கு அனுப்பப்பட்டன. அதே லாரியில் கிருமாறனும் சாடிவயலுக்கு கிளம்பினார். சாடிவயலில் இரு கும்கிகளையும் இறக்கிவிட்ட லாரி அங்கிருந்து கிருமாறனோடு  சென்னை வண்டலூருக்கு கிளம்பியது.

கிருமாறனை வண்டலுருக்கு வரவைத்த யானை ‘கிரி’. அதற்கு எப்போது வேண்டுமென்றாலும் மதம் பிடிக்கலாம் என்பதால் அதை அழைத்துச் செல்ல வந்தார் கிருமாறன்.

தொடரும்….


 


டிரெண்டிங் @ விகடன்