வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (11/05/2018)

கடைசி தொடர்பு:16:25 (11/05/2018)

இப்படியே போனால் இந்த எலிகளுக்கு நடந்ததுதான் நமக்கும் நடக்கும்..!

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையம் ஒன்று காற்று மாசு மனிதர்கள் மீது மேலும் எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை அறிய எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். ஏன் எலிகள்?

இப்படியே போனால் இந்த எலிகளுக்கு நடந்ததுதான் நமக்கும் நடக்கும்..!

நகரமயமாக்கலால் காற்றில் இருக்கவேண்டிய நைட்ரஜன், ஆக்ஸிஜன் மூலக்கூறுகளைவிடக் கரிம வாயு, நிக்கல், சல்ஃபர், அமோனியா போன்ற வாயுக்களை எல்லாம் சேர்த்தே இன்று சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம். உலகில் மனிதர்களில் 90% பேர் மாசடைந்த காற்றையே சுவாசிக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது. மனிதர்கள் சுவாசிக்கிறார்கள் என்று கூறுகிறோம். இந்தப் பூவுலகில் சுவாசிப்பது மனிதன் மட்டும் தானா? இல்லை. நாம் அக்கறை கொண்டது நம்மைப் பற்றி மட்டுமே. லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையம் ஒன்று காற்று மாசு மனிதர்கள் மீது மேலும் எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை அறிய எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். ஏன் எலிகள்?

Mice

வழக்கமாக மனிதர்களுக்கான ஆராய்ச்சிகள் முதலில் பரிசோதிக்கப்படுவது எலிகளின் மீது தான். ஏனென்றால், எலிகளின் உடல் செயற்பாடுகள் மனிதர்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது. அவை மிகவும் சிறியவை. சமாளிப்பது எளிது. அவற்றின் மரபணுக்கள் மனிதர்களோடு 90% ஒத்துப்போகிறது. அதனால்தான் எலிகளை நாம் பலகிடாவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

மொத்தம் நூறு எலிகளை 6 முதல் 10 என்று குழுக்களாகப் பிரித்து அவற்றை கலிஃபோர்னியாவின் காற்றில் கலந்திருக்கும் மாசு ஏற்படுத்தும் மூலக்கூறுகளைச் சுவாசிக்க வைத்தார்கள். துகள்கள் முதல் மிகச்சிறிய துகள்கள் வரை நிக்கல், கோபால்ட், துத்தநாகம் போன்ற அனைத்துமே கலந்திருந்த காற்றை நாளொன்றுக்கு 5 மணிநேரம் என்ற விகிதத்தில் வாரத்துக்கு நான்கு நாள்கள், மாதத்திற்கு இரண்டு வாரங்கள் என்று பன்னிரண்டு மாதங்களுக்குப் பரிசோதனை செய்துள்ளனர்.

அவை சுவாசிக்கும் காற்றில் ஒவ்வொரு மூலக்கூறும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நிறப்பிரிகை மூலமாகக் கணக்கு வைத்துக்கொண்டனர். சில குழுக்களைச் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வைத்தும், சில குழுக்களை இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தியும் பார்த்ததில் மாசுக் காற்றைச் சுவாசித்த எலிகளின் உடல் ஆரோக்கியத்தில் வித்தியாசங்கள் தெரியத்தொடங்கியுள்ளன.
இதைக் கவனித்த மருத்துவர்கள் அந்த எலிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

Cancer

அவற்றின் மூளையில் மாசுக்கூறுகள் எந்த அளவுக்குப் படிந்துள்ளது என்பதைக் கண்டறிய முனைந்தனர். மூளையில் கலந்திருந்த நிக்கல் அவற்றுக்கு அடிக்கடி அழற்சியை ஏற்படுத்துவது தெரியவந்தது. அத்தோடு ஆர்.என்.ஏவில் கலந்திருந்த மாசுகள் மூளையின் செயல்பாட்டு வேகத்தைக் குறைத்துள்ளது. கேன்சரை உருவாக்கும்  RAC1 என்ற செல்கள் அவற்றில் காணப்பட்டது. சில எலிகள் அவற்றால் பாதிப்படைந்தும் இருந்தன. இவை அனைத்துமே அவை சுவாசித்த காற்றில் கலந்திருந்த மாசுகளால்தான் என்று சொல்கிறது ஆராய்ச்சிக் குழு. மாசுகள் எப்படி மூளை வரை செல்கின்றன?

Lab rat

நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரல் வரை செல்லும். அங்கிருந்து ரத்த நாளங்களில் கலந்து அதன் பாதையில் பயணித்து மூளைக்குப் பாயும் ரத்தத்தின் வழியாக மூளையை அடைகிறது. இவ்வாறு செல்லும் மாசுகள் அங்கேயே படிந்து வேதிம வினைபுரிந்து மூளையின் செயற்பாட்டினை மட்டுப்படுத்துகிறது. இத்தோடு மாசுக் கூறுகள் மூளையை அடைய மற்றுமொரு எளிதான வழியும் உண்டு. நமது மூக்குத் தசைகளில் இருக்கும் சளி மூளையின் பாதை வரை படர்ந்திருக்கும். அதில் படிவதன் மூலமும் எளிதாகவும் விரைவாகவும் மூளையைச் சென்றடைந்துவிடுகிறது.

இந்தப் பரிசோதனையில் முக்கியமான விஷயம் என்னவெனில் இது விலங்குகளிடம் செய்த பரிசோதனை. அவற்றுக்கு ஏற்படும் அதே அளவிலான பாதிப்புகள் நமக்கும் ஏற்படும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இது முதற்கட்டம் முடிவு மட்டுமே என்கிறார் இந்த ஆராய்ச்சிக் குழுவில் ஒருவரான லௌபிமோவா.

காற்று மாசு

"மனிதர்கள் உள்பட உயிரினங்கள் அனைத்துமே தற்போது சுகாதாரமற்ற காற்றையே சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இது தொழலமயமாக்கலின் விளைவு. தேவைக்கு மீறிய நுகர்வால் அனுபவிக்கும் அபாயங்கள். இதே ஆராய்ச்சியை மேற்கொண்டு செய்வதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ள முனைகிறோம். வளிமண்டலத்தில் சேரும் மாசுகளால் ஏற்படும் விளைவுகளை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை" என்கிறார் லௌபிமோவா.

மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றோடு நிற்காமல் மூளை வரைச் சென்று தாக்கக்கூடிய ஆபத்தான மாசுகள் நிறைந்த சுற்றுச்சூழலில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எலிகளின் மீது பரிசோதனை செய்ததன் மூலம் மனிதர்களுக்கான விளைவுகளைப் புரிய வைக்கச் செய்த பரிசோதனை மற்றொன்றையும் நமக்குப் புரிய வைக்கிறது. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது நாம் மட்டுமல்ல. நம்மோடு புவியில் வாழும் மற்ற உயிர்களும்தான். உடல் செயற்பாடுகளிலும் அதற்குத் தேவையான வேதிமங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தால் எந்த அளவுக்கு நம் உடல்நிலை பாதிக்குமோ அதே அளவுக்கு அவற்றுக்கும் பாதிக்கும். நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்ததன் விளைவு தற்போது நம் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கி வைத்துள்ளது. பூமி அனைவருக்குமானது. அதை அனைவரும் ஒன்றுகூடிக் காப்பாற்றுவோம். அனைத்து உயிர்களுக்கும் முக்கியமானதான காற்றைச் சுத்தமாக வைத்திட முனைவோம்.


டிரெண்டிங் @ விகடன்