Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''பாலைவனத்துல நடந்துட்டு பச்சை புல்லுக்கு ஆசைப்பட்டா கிடைக்குமா?!'' - விக்கியம்மாவின் நெகிழ்ச்சிக் கதை

விக்கியம்மா... வடபழனி கோயிலை ஒட்டிய பகுதிகளில் அருணாவை எல்லோரும் இப்படித்தான் அழைக்கிறார்கள். தன் மகனுடன் அருணா வடபழனி கோயிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி தென்படுவதே இதற்குக் காரணம். அருணாவுக்கு அடையாளமே அவருடைய பிள்ளைதான். விக்கி என்கிற விக்னேஷ், 5 வயது குழந்தைக்கான செயல்பாடுகொண்ட 29 வயது தெய்வக்குழந்தை. இதுபோன்ற தெய்வக்குழந்தைகளின் அம்மாக்கள், சமூகக் கருவறையில் இருக்கும் தெய்வங்களே. அப்படிப்பட்ட அருணா, கவலைகளை தன் சிரிப்பில் புதைத்தவராக பேச ஆரம்பித்தார்.

விக்கியம்மா

''எனக்கு 18 வயசிலேயே கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. சொந்த அத்தை பையன்தான் அவர். கல்யாணமானதும் கர்ப்பமாயிட்டேன். சென்னையில் பிறந்து வளர்ந்தவளா இருந்தாலும், கர்ப்பமானால் ஸ்கேன் எடுக்கணும்னு எங்களுக்குத் தெரியலை. வயித்துல பிள்ளை முட்டறான், உதைக்கிறான்னு ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஒன்பதாவது மாசமே பிரசவ வலி வந்திருச்சு. நார்மல் டெலிவரிதான். மயக்கம் தெளிஞ்சு பிள்ளையைப் பார்க்கணும்னு கேட்டேன். தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் காட்டினாங்க. முதல்ல ஒண்ணுமே புரியலை. நான் பார்க்கிறது கனவா, நிஜமான்னே தெரியலை. குழந்தையின் உடம்பு நல்லா இருந்துச்சு. ஆனால், தலை...'' என அந்த நாளின் ஞாபகத்தில் சிறிது நேரம் கண்ணீரில் கரைகிறார் அருணா.

'' 'மூளை வளர்ச்சி இல்லாததால், தலை சின்னதா இருக்கு. சொந்தத்துல கல்யாணம் பண்ணினா இப்படி ஆகலாம்னு டாக்டர் சொன்னார். எப்பவும் படுத்தே கிடப்பான். குப்புற விழறது, உட்கார்றது, தவழ்றது எதுவுமே பண்ணலை என் பிள்ளை. அவனால் அதெல்லாம் முடியாதுன்னு எங்க புத்திக்குத் தெரிஞ்சாலும், பெத்த வயிற்றுக்குப் புரியலை. ஒரு வயசு வரைக்கும் பிள்ளையைப் பார்த்துப் பார்த்து அழுதுட்டே இருந்தோம். ரெண்டாவது வருஷம் கொஞ்சம் கொஞ்சமா மனசை தேத்திக்க ஆரம்பிச்சோம். மறுபடியும் இடி எங்க தலையில் விழுந்துச்சு.

அம்மா'விக்கியை வெயில்ல கூட்டிட்டுப் போகக் கூடாது. அவனுக்கு வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்யலை'னு டாக்டர்கள் சொன்னாங்க. நோய் எதிர்ப்பு சக்தியும் ரொம்பக் குறைச்சல். ஊர்ல எந்த விஷக் காய்ச்சல் வந்தாலும் பயமா இருக்கும். அப்போ எனக்கு 19 வயசு. கைக்குழந்தையை வெச்சுட்டு நான் பட்டப் பாட்டைப் பார்த்த மாமியார், 'பேரனை ஊருக்குத் தூக்கிட்டுப் போறேன். அழுகையை நிறுத்திட்டு கொஞ்ச நாள் நிம்மதியா இரு'னு சொல்லிட்டு தூக்கிட்டுப் போயிட்டாங்க.

ஒரு வருஷத்துல மறுபடியும் கர்ப்பமானேன். இந்தத் தடவை உடனே ஸ்கேன் பண்ணிப் பார்த்துட்டோம். 'குழந்தை நார்மலா இருக்கு'னு சொன்னாங்க. நமக்கும் எல்லாரையும் மாதிரி அழகான குழந்தைப் பிறக்கப்போகுதுனு மனசுக்குள்ளே ஆயிரம் கோட்டைகள் கட்டினேன். இந்த தடவையும் ஒன்பதாவது மாசத்துலேயே வலி வந்துருச்சு. ஆஸ்பத்திரிக்குப் போனோம். என் நெஞ்சே வெடிச்சுப்போற மாதிரியான விஷயத்தை என் காதுல கேட்டேன். என் வயித்துல ஜனிச்ச பொண்ணுக்கு கபாலமே இல்லையாம். இறந்தே பிறந்தா என் பொண்ணு. அழுது அழுது மயக்கமானதுதான் மிச்சம். இனியொரு பிள்ளை கிடையாது. எனக்கு விக்கி மட்டும் போதும்னு முடிவெடுத்து, கருத்தடை பண்ணிக்கிட்டேன். ஊரிலிருந்து என் விக்கியை வரவெச்சுட்டேன். அவனை ஸ்பெஷல் ஸ்கூல்ல படிக்கவெச்சேன். பிள்ளையோடு இருக்கணும்னு அந்த ஸ்கூலேயே அசிஸ்டென்ட் வேலைக்குச் சேர்ந்துட்டேன். 

ஆரம்பத்துல பிள்ளையை வெளியே கூட்டிட்டுப் போக வெட்கப்பட்ட என் கணவரும், ஒரு கட்டத்துக்கு மேலே 'யாரு கேலி பண்ணாலும் அவன் என் பிள்ளை'னு வெளியுலகத்தை விக்கிக்கு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சார். இப்போ, விக்கிக்கு 29 வயசு. அவன் வயசுப் பிள்ளைங்கள் எல்லாம் கல்யாணம், குழந்தைகள் என இருக்கிறதைப் பார்க்கிறப்போ மனசைப் போட்டுப் பிசையும். பாலைவனத்துல நடந்துக்கிட்டு பச்சைப்புல்லுக்கு ஆசைப்பட்டா கிடைக்குமா? அவனுக்குச் சொத்து, சுகம் எல்லாம் சேர்த்துவெச்சுட்டோம். ஆனால், எங்களுக்குப் பின்னாடி அவனை யார் பார்த்துப்பாங்க என்கிற கேள்விக்கு மட்டும் பதில் தெரியலைங்க'' எனக் கலங்கி நிற்கும் விக்கியம்மாவுக்கு ஆறுதலைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement