விக்ராந்த் போர்க் கப்பலின் இரும்பைக்கொண்ட பஜாஜ் V12 பைக் எப்படி இருக்கிறது?

தனது மற்ற தயாரிப்புகளைப் போலவே, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக V12 இருக்கும் என்கிறது பஜாஜ்.

V12... இது பர்ஃபாமென்ஸ் கார் ஆர்வலர்களுக்குப் பிடித்த சொல்லாக இருப்பினும், பஜாஜ் இதை வேறு மாதிரி பயன்படுத்தியிருக்கிறது. ஆம், இந்தப் பெயரில் ஒரு கம்யூட்டர் பைக்கை, கடந்த ஆண்டு இந்த நிறுவனம் களமிறக்கியது நினைவிருக்கலாம்.

பஜாஜ் V12

`V15 எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், அதன் விலை எனது பட்ஜெட்டில் இல்லை' என்பவர்களுக்கான தீர்வாக வெளிவந்திருக்கும் இந்த பைக், தனது மற்ற தயாரிப்புகளைப்போலவே, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக இருக்கும் என்கிறது பஜாஜ். விக்ராந்த் போர்க் கப்பலின் இரும்பு இடம்பெற்றிருக்கும் V12, எப்படி இருக்கிறது?

டிசைன்

Bajaj V12

தூரத்திலிருந்து பார்க்கும்போது V15 பைக்கையே நினைவுபடுத்தியது V12. ஆனால், அருகே வந்து பார்க்கும்போது பைக்கில் இருக்கும் மாற்றங்கள் தெளிவாகத் தெரிகின்றன. மெலிதான 30 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டியூப் டயர்கள், ட்ரிப் மீட்டர் இல்லாத அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அலுமினிய பாகங்களுக்குப் பதிலாக ஸ்டீல் பாகங்கள், V12 பேட்ஜிங், புதிய கலர் மற்றும் கிராஃபிக்ஸ் ஆப்ஷன்கள் ஆகியவை இதற்கான உதாரணங்கள். முன்னே சொன்ன மாற்றங்களால், V15 பைக்கைவிட 4 கிலோ எடை குறைவாக இருக்கிறது V12 (133 கிலோ).

V12 Speedometer

மற்றபடி பட்டாம்பூச்சியை நினைவுபடுத்தும் ஹெட்லைட், கட்டுமஸ்தான 13 லிட்டர் பெட்ரோல் டேங்க், அகலமான சீட், LED டெயில் லைட் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. V15 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், V12 பைக்கும் அதே பெரிய பைக்கை ஓட்டுவது போன்ற உணர்வைத் தருகிறது. ஃபிட் அண்டு ஃப்னிஷ், பாகங்களின் தரம் மற்றும் கட்டுமானத் தரமும் நன்று. 

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

V12 Engine

டிஸ்கவர் 125 பைக்கில் இருக்கும் ஏர் கூல்டு 125சிசி இன்ஜினை அடிப்படையாகக்கொண்டு, V12 பைக்கின் 124.5சிசி DTS-i இன்ஜினைத் தயாரித்துள்ளது பஜாஜ். Bore அதே அளவில் இருந்தாலும், Stroke அளவில் மாற்றம் தெரிகிறது. எனவே, எளிதான ஓட்டுதல் மற்றும் நல்ல மைலேஜைத் தரக்கூடிய Long Stroke இன்ஜினாக உருப்பெற்றிருக்கும் இது, போட்டியாளர்களைவிட அதிக டார்க்கை வெளிப்படுத்தும் என்கிறது பஜாஜ். இந்த சிங்கிள் சிலிண்டர், 2 வால்வ் இன்ஜின் வெளிப்படுத்தும் 10.7bhp பவர் மற்றும் 1.1kgm டார்க் இதை உறுதிப்படுத்துகிறது.

V12 Exhaust

5,500 ஆர்பிஎம்மிலேயே மொத்த டார்க்கும் வெளிப்படுவதால், விருட்டென வேகம் பிடிக்கிறது V12. பவர் டெலிவரி சீராக இருப்பதால், 80 - 100கிமீ வேகத்தை எட்டிப்பிடிப்பதும் சுலபமாக இருக்கிறது. அதிகபட்சமாக 105 கிமீ வேகம் வரை (ஸ்பீடோமீட்டரில்) செல்லும் V12, 80கிமீ வேகம் வரை ஸ்மூத்தாகவே செல்கிறது. அதன் பிறகு சீட் மற்றும் ஃபுட் பெக்ஸ் ஆகியவற்றில் அதிர்வுகள் தென்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, இந்த பைக் 50-55கிமீ தூரம் செல்லும் என்கிறது பஜாஜ். 

ஓட்டுதல் அனுபவம்

V12 Ride Quality

கைக்கு எட்டும் தூரத்தில் ஹேண்டில்பார், சொகுசான சீட் குஷனிங், 780 மிமீ உயரத்தில் இருக்கும் சீட் ஆகியவை, V15 பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ளன. V15 பைக்குடன் ஒப்பிடும்போது மெலிதான டயர்களைக் (முன் - 2.75-18; பின் - 100/90-16) கொண்டிருக்கும் V12 பைக்கை, நெரிசல்மிக்க நம் ஊர்ச் சாலைகளில் வளைத்து நெளித்து ஓட்டுவது சுலபமாக இருக்கிறது. இந்த நேரத்தில் பைக்கின் சேஸி, ரைடருக்குக் கைகொடுக்கிறது. போட்டியாளர்களிடம் இல்லாத 5-வது கியர், V12 பைக்கில் இருப்பது பெரிய ப்ளஸ். இதனால் 80கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்வது  ஈஸியாக உள்ளதுடன், நெடுஞ்சாலைகளில் கூடுதல் மைலேஜைத் தரவும் உதவுகிறது.

V12 Seat

எடை குறைவான க்ளட்ச்சைப் பிடித்து, கியர்களை மாற்றுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. முன்பக்கத்தில் ஆப்ஷனலாக வழங்கப்படும் 200 மிமீ டிஸ்க் பிரேக்கொண்ட மாடலைத் தேர்வுசெய்வது நலம். ஏனெனில், 130 மிமீ டிரம் பிரேக்கின் செயல்பாடு சுமார் ரகம்தான். டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் Nitrox கேஸ் சஸ்பென்ஷன் அமைப்பு, கொஞ்சம் இறுக்கமான செட்டப்பைக்கொண்டிருக்கிறது. இதனால் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை நம்மால் கொஞ்சம் உணர முடிகிறது. ஆனால், இதே செட்டப், நெடுஞ்சாலைகளில் V12 பைக்குக்கு அசத்தலான நிலைத்தன்மையை வழங்குகிறது. 

தீர்ப்பு

Vikranth Warship

125சிசி கம்யூட்டர் பைக்குகளில் சிறப்பான டிசைன், பர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம், மைலேஜ், கட்டுமானத் தரம், ப்ரீமியம் உணர்வு, பாகங்களின் தரம் ஆகியவற்றைத் தன்னகத்தேகொண்டிருக்கிறது V12. V15 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், ஒரு Big Bike Feel தானாகவே வந்துவிடுகிறது. இந்த ஆல்ரவுண்டர் காம்பினேஷன், இந்த வகை பைக்குகளில் கிடைக்காத ஒன்று என்பதே உண்மை.

LED Taillight

டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் கிடைக்கும் V12 பைக்கின் சென்னை ஆன்ரோடு விலைகள், முறையே 67,571 ரூபாய் மற்றும் 69,548 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது டிஸ்க் பிரேக் உடன் மட்டும் கிடைக்கும் V15 பைக்கைவிடச் சுமார் 6 ஆயிரம் ரூபாய் குறைவு என்பதை இங்கே நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். விக்ராந்த் போர்க் கப்பலின் இரும்பு என்பது கூடுதல் போனஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!