வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (13/05/2018)

கடைசி தொடர்பு:18:40 (13/05/2018)

மாருதி சுஸூகி ஆல்ட்டோ அதிகம் விற்பனையாவது ஏன்?

டாடா நானோ/டியாகோ, ஹூண்டாய் இயான், ரெனோ க்விட், டட்ஸன் ரெடி-கோ என மாடர்ன் கார்கள் இருந்தாலும், ஆல்ட்டோ தொடர்ச்சியாக ஹிட்டடிப்பது எப்படி சாத்தியம்?

ஆல்ட்டோ... மாருதி 800 கார் தனது மூச்சை நிறுத்திக் கொண்ட பிறகு, அந்த இடத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டது. அதாவது பட்ஜெட் ஃபேமிலிகளின் முதல் கார் என்கிற கிரீடத்தைக் கொண்டிருப்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. இத்தனைக்கும் இதே செக்மென்ட்டில் டாடா நானோ/ டியாகோ, ஹூண்டாய் இயான், ரெனோ க்விட், டட்ஸன் ரெடி-கோ என மாடர்ன் கார்கள் இருந்தாலும், ஆல்ட்டோ தொடர்ச்சியாக ஹிட் அடிப்பது எப்படி?

ஆல்ட்டோ 800

நீண்ட நாள்களாக ஒவ்வொரு மாதமும் 'இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்' என்ற புகழைத் தன்வசம் வைத்திருந்த இந்தக் கார், தன் அண்ணன்களான ஸ்விஃப்ட் மற்றும் டிசையரிடம் அந்த இடத்தை அவ்வப்போது பறிகொடுத்துவிடுகிறது. இதற்கு மக்களின் வாங்கும் திறன் மற்றும் முதல் கார் மீதான எதிர்பார்ப்புகள் மாறிவருவதே காரணம். என்றாலும், ஒரு மாதத்துக்கு சராசரியாக 20 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் ஆல்ட்டோவில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஃப்ளாஷ்பேக்

2000-ம் ஆண்டின் இறுதிகட்டத்தில் அறிமுகமான F8D 800சிசி ஆல்ட்டோ, 2012-ம் ஆண்டு வரை சின்னச் சின்ன மாற்றங்களுடனேயே விற்பனையாகி வந்தது. 2.99 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் வெளிவந்த இந்தக் கார், முதல் 4 ஆண்டுகளில் விற்பனையில் பெரிதாக சாதிக்கவில்லை. இடையே கூடுதல் பவர் வேண்டும் என்பவர்களுக்காக, F10D 1.1 லிட்டர்  இன்ஜினுடனும் வெளிவந்தது. ஆனால், போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தால், அந்த மாடலின் உற்பத்தியை நிறுத்திவிட்டது மாருதி சுஸூகி.

மாருதி சுஸூகி

பின்னர் சுதாரித்துக் கொண்ட மாருதி சுஸூகி, விலைக்குறைப்பு மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய ஆயுதங்களைக் கையில் எடுத்தது. இதன் வெளிப்பாடாக 2005 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், 'இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்' என்ற பட்டத்தைத் தன்வசம் வைத்திருந்தது! 2012-ம் ஆண்டில் களமிறங்கிய இரண்டாம் தலைமுறை ஆல்ட்டோ, விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டது எனலாம். பின்னர் புதிய BS-IV K-சீரிஸ் இன்ஜின்களின் வரவால், ஆல்ட்டோவின் 1000சிசி மாடலை மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த கார், காம்பேக்ட்டான ஆட்டோமேட்டிக் கார் வேண்டும் என்பவர்களது சாய்ஸாக இருந்துவருகிறது. 

டிசைன்

maruti suzuki

தலைமுறை மாறினாலும், ஆல்ட்டோவின் டிசைன் பெரிய வித்தியாசத்தைக் காணவில்லை என்பதே நிதர்சனம். அதற்கேற்ப உயரத்தில் இருக்கும் ஹெட்லைட், தடிமனான சி-பில்லர், சற்றே அகலமான வீல் ஆர்ச், குட்டியான டெயில் லைட், வேலைப்பாடுகளுடன் கூடிய டெயில் கேட் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டில் வெளிவந்த இரண்டாம் தலைமுறை ஆல்ட்டோவின் பேஸ்லிஃப்ட் மாடலின் முன்பக்கத்தில், அதிக மாற்றங்களைச் செய்திருந்தது மாருதி சுஸூகி. ஹெட்லைட், பம்பர், கிரில் ஆகியவை இதற்கான உதாரணம். 

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

பட்ஜெட் கார் என்பதால், ஆல்ட்டோவின் டேஷ்போர்டு சிம்பிளான வடிவமைப்பிலேயே இருந்து வந்திருக்கிறது. மேலும் இடவசதி என்றுமே, இந்த காரின் ப்ளஸ்ஸாக இருந்ததில்லை. தவிர வசதிகளிலும் இதுவரை மாருதி சுஸூகி கஞ்சத்தனம் காட்டியே இருந்திருந்தாலும், ஆல்ட்டோ K10 இந்த இரு விஷயங்களில் கொஞ்சம் முன்னேற்றத்தைக் காட்டியது என்னவோ உண்மைதான்.

 

alto 800

 

அதற்காக இடதுபுற ரியர் வியூ மிரர், சைல்டு லாக், பின்பக்க இருக்கைகளுக்கான ஹெட் ரெஸ்ட், ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பவர் ஸ்டீயரிங் மற்றும் பவர் பிரேக்ஸ் போன்ற அடிப்படை வசதிகளை, அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக வழங்காதது நெருடல். டாப் வேரியன்ட்டான VXi-ல் முன்பக்க பவர் விண்டோஸ், வீல் கேப், சென்ட்ரல் லாக்கிங், கிலெஸ் என்ட்ரி, பேப்ரிக் சீட் கவர் மற்றும் டோர் பேடு ஆகிய வசதிகள்தான் உள்ளன. என்னதான் பட்ஜெட் காராக இருந்தாலும், பனி விளக்குகள் - மியூசிக் சிஸ்டம் - டிரைவர் காற்றுப்பை ஆகியவை ஆப்ஷனல் என்பது டூமச் மாருதி! 

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

அறிமுகமான நாள்முதலே, ஆல்ட்டோவில் இருப்பது 48 bhp பவர் மற்றும் 6.9 kgm டார்க்கை வெளிப்படுத்தும் 796 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. மாருதி 800 காரில் இருந்த அதே இன்ஜின்தான் என்றாலும், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை இதில் செய்துவந்திருக்கிறது மாருதி சுஸூகி.

 

alto 800 engine

 

எனவே, அடிப்படையில் 35 வருட இன்ஜினாக இருந்தாலும், 800 சிசி பிரிவின் சிறந்த இன்ஜினாக இருக்கிறது. ஆல்ட்டோவின் எடை குறைவு (695 கிலோ - 727 கிலோ) என்பதால், காரின் பர்ஃபாமென்ஸ் மனநிறைவைத் தரும்படி அமைந்திருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.7கிமீ தூரம் (அராய் மைலேஜ்) செல்லக்கூடிய ஆல்ட்டோ 800, நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற காராக இருக்கிறது.

ஓட்டுதல் அனுபவம்

காம்பேக்ட் காராக இருப்பினும், நம் ஊர் சாலைகளில் மிதமான வேகத்தில் செல்லும்போது ஆல்ட்டோவின் ஓட்டுதல் தரம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், இதை நம்பி கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது காரின் வேகத்தை அதிகரித்தால், ஆல்ட்டோவின் பின்பக்கம் ஆட்டம்போடுகிறது.

 

alto 800 ride and handling

 

சிறிய 12 இன்ச் வீல்கள் மற்றும் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், நகரப் பயன்பாட்டுக்கு ஓகே ரகம். ஆனால், நெடுஞ்சாலைகளில் இதன் ஃபீட்பேக் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்கலாம். தவிர, ஏபிஎஸ் கிடையாது என்பதும் பெரிய மைனஸ். தவிர லைட் வெயிட் கார் என்பதால், க்ராஷ் டெஸ்ட்டிலும் பின்தங்கிவிடுகிறது. 

தீர்ப்பு

மார்ச் மாதத் துவக்கம் வரை, மொத்தம் 3.5 மில்லியன் ஆல்ட்டோ வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது மாருதி சுஸூகி! இதில் 55 சதவிகிதத்தினர் முதன்முறையாகக் கார் வாங்குபவர்கள்; 25 சதவிகிதத்தினர் இரண்டாவது காராக ஆல்ட்டோவைத் தேர்வு செய்பவர்கள்; 18 சதவிகிதத்தினர் ஆட்டோமேட்டிக் கார் வாங்குபவர்கள் (ஆல்ட்டோ K10); இதற்கு இந்நிறுவனத்தின் பரந்து விரந்த டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வோர்க் - குறைவான பராமரிப்புச் செலவுகள் - அசத்தலான ரீசேல் மதிப்பு - போதுமான பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் ஆகியவைதான் பிரதான காரணம்.

next gen alto 800

ஆனால், டிசையர் முதலிடத்தை ஆல்ட்டோவிடமிருந்து தட்டிப் பறித்ததற்கு பாதுகாப்பு வசதிகள், சிறப்பம்சங்கள், இன்ஜின் திறன், ஓட்டுதல் அனுபவம் ஆகியவையே துணை நிற்கின்றன. எனவே இடவசதி, பாதுகாப்பு, சிறப்பம்சங்கள் ஆகிய ஏரியாக்களில், அடுத்த 2 ஆண்டுகளில் வெளிவரப்போகும் மூன்றாம் தலைமுறை ஆல்ட்டோ எகிறியடித்தால், இந்த காரின் விற்பனையைத் தடுத்து நிறுத்தும் சக்தி எந்த காருக்கும் இல்லை!

படங்கள் நன்றி - Autocar India

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்