வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (14/05/2018)

கடைசி தொடர்பு:10:38 (15/05/2018)

BMW G310R மற்றும் G310GS பைக்கின் முன்பதிவுகள் அடுத்தமாதம் தொடங்கவுள்ளது!

வெகுநாள்களாகக் காத்திருக்கும் பிஎம்டபிள்யூ G310R மற்றும் G310GS விற்பனைக்கு வரப்போகிறது. தமிழ்நாட்டில் அடுத்தமாதம் முன்பதிவுகள் தொடங்குகின்றன.

பிஎம்டபிள்யூ  G310GS மற்றும்  G310 பைக்குகளின் புக்கிங் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ சேர்க்கையின் முதல் பைக்காக வந்த  G310R வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால்,  தமிழ்நாட்டில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் தயாராகும் இந்த பைக் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. 

பிஎம்டபிள்யூ G310GS

பிஎம்டபிள்யூ தொழில்நுட்பங்களும், தரமும் மட்டுமல்ல பிஎம்டபிள்யூ லோகோவோடு 5 லட்ச ரூபாய்க்குக் குறைவான முழு பிஎம்டபிள்யூ பைக்காக வெளிவரவிருக்கும் இந்த பைக்குக்காகப் பலர் காத்திருக்கிறார்கள். ஸ்ட்ரீட் பைக்கான G310R தனியாக வரவில்லை. அதன் அட்வென்சர் மாடலான G310GS பைக்கும் உடன் வருகிறது. பிஎம்டபிள்யூ அட்வென்சருக்குப் பெயர்போன நிறுவனம். இந்த இரண்டு பைக்குகளும், கேடிஎம் நிறுவனத்தின் ஸ்போர்ட்டியான டியூக்/ RC பைக்குகளைவிட சொகுசு மற்றும் ஓட்டுதல் தரத்தில் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது

பிஎம்டபிள்யூ

310 R பைக் தமிழ்நாட்டில் டெஸ்ட் செய்வதுபோல ஸ்பை படங்கள் இணையத்தில் வளம் வந்துகொண்டிருந்தன. சமீபத்தில் G310GS பைக்கை லாரியில் ஏற்றுவதுபோல xbhp இணையதளத்தில் ஒரு ஸ்பை படம் வந்தது. டீலர்களிடம் இதை பற்றி விசாரிக்கையில் இந்த பைக்குகளுக்கான விற்பனையாளர் பயிற்சி தற்போது நடந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்கள். பைக்கின் முன்பதிவுகள் அதிகாரபூர்வமாக அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. பைக்கின் விலை ஜூலை மாதம் வெளிவரும் என்று கூறியுள்ளார்கள்.

BMW

Photo Credit: xBhp

மும்பை மற்றும் டெல்லியில் சில டீலர்கள் ரகசியமாக முன்பதிவு செய்கிறார்கள். ஆனால், இன்னும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அனுமதி வரவில்லை. இந்த பைக்குகளின் விலை 2.5 முதல் 3.5 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பைக்குகளிலும் 313 cc சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. லிக்விட் கூலிங் உடன் வரும் இந்த இன்ஜின் 34 bhp பவரையும், 28 Nm டார்க்கையும் தரக்கூடியது. இந்த பைக்கில் டூயல் சேனல் ABS ஸ்டான்டர்டாக வருகிறது. USD ஃபோர்க், அட்ஜஸ்டபிள் மோனோஷாக், 11 லிட்டர் பெட்ரோல் டேங்குடன் வரும் இந்த பைக்குகளின் எடை வெறும் 158.5(R) மற்றும் 169.5 (GS) கிலோதான்.