``பேசுகையில் நா நுனியிலும், எழுதுகையில் நகக் கண்களிலும் தமிழைக் கசியவிடுபவர், பாலகுமாரன்!’’ - எழுத்தாளர்கள் சுபா

பாலகுமாரனின் மறைவால் அதிர்ச்சியடைந்திருந்த அவருடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ், பாலா), அவருடனான தங்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். 

``பேசுகையில் நா நுனியிலும், எழுதுகையில் நகக் கண்களிலும் தமிழைக் கசியவிடுபவர், பாலகுமாரன்!’’ - எழுத்தாளர்கள் சுபா

ழுத்துச் சித்தர் பாலகுமாரன் சென்னைக் காவேரி மருத்துமனையில் தன் இருப்பை நிறுத்திக் கொண்டார். கலைஞர்கள், எழுத்தாளர்கள் இம்மண்ணைவிட்டுப் பிரியும் போது, அது அவர்களின் குடும்பத்துக்கு மட்டுமான இழப்பாக இருப்பதில்லை. தங்களது படைப்புகளின் மூலம் அவர்கள் சேர்த்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு அது பேரிழப்பாக அமைந்து விடுகிறது. எழுத்தாளர் பாலகுமாரன் தனது நாவல்களின் வழியாகவும், தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதிய தொடர்கள் மூலமும் மக்கள் மனதில் என்றும் வாழ்வார். அவரது கதைகளில் இழையோடும் மனித மனம் சார்ந்த குறுக்கு விசாரணைகள் வாசகர்களை கட்டிப்போட்டது. `மெர்க்குரி பூக்கள்’, `இரும்புக் குதிரை’, `உடையார்’ போன்ற நாவல்கள் அவரது சீரிய எழுத்துப்பணியைத் தாங்கி நிற்கும் சில ரத்தினங்கள்.

``ஆசைப்பட்ட பொருள், ஆசைப்பட்ட நேரத்தில், ஆசைப்பட்ட விதத்தில் கிடைக்காமல் போவதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்!’’ -  மனித மனம் வாழ்வு குறித்து என்ன அசைபோடுகிறதோ, அதை தன் எழுத்தில் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவர் பாலகுமாரன்.

பாலகுமாரன்

பாலகுமாரன் திரைத்துறையிலும் தன் எழுத்தின் வழியே பல திரைப்படங்களுக்குப் பக்கபலமாய் இருந்துள்ளார். தமிழில் வெளிவந்த மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படும் `நாயகன்’ திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன். வணிக ரீதியாக பெரிய அளவில் சாதனைகள் செய்த ரஜினிகாந்தின் `பாட்ஷா’ படத்தின் வசனம் அவர் எழுதியது. `ஜென்டில்மேன்’, `காதலன்’, `ஜீன்ஸ்’, `முகவரி’, `சிட்டிசன்’, `புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவரின் பங்களிப்பு உள்ளது. 

பாலகுமாரனைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர்கள் சுபா-விடம் பேசினோம். பாலகுமாரனின் மறைவால் அதிர்ச்சியடைந்திருந்த அவர்கள், அவருடனான தங்களின் நினைவைப் பகிர்ந்துகொண்டனர். 

``நாங்கள் எழுத ஆரம்பித்திருந்த காலம். ஒருமுறை `சாவி’ பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது அவருக்கு தாடி கிடையாது. நரை கிடையாது. மீசையும், இளமையும் ததும்பும் முகம். கண்களில் தீர்மானமான ஒரு தீர்க்கம். உரையாடுகையில் மூத்த எழுத்தாளராயிற்றே என்ற மரியாதை எங்களுக்கு. அவரோ எழுத்தாளனுக்கு எழுத்தாளன் என்று வெகு சகஜமாகப் பேசினார்.

பாலகுமாரன்

பாலகுமாரனின் மாபெரும் பலம் அவருடைய சிறுகதைகள். ஒவ்வொன்றும் நறுக்குத் தெறித்தாற்போல் இருக்கும். வார்த்தைகளில் உளி விழுந்து செதுக்கியிருக்கும். காதலை அதன் சாகசத்தை, அவரைப் போல் தித்திக்கத் தித்திக்க, வலிக்காமல் தோலுரித்துக் காட்ட எல்லோருக்கும் சாத்தியப் படாது. அவருடைய எழுத்தில் பெண்களின் மனதை ஆழப் படித்த ஒரு சாகசம் இருக்கும். பெண்களிடம் பொதுவாக ஆண்கள் கவனிக்கத் தவறும் சில அம்சங்களை, குணாதிசயங்களை அவர் கவனித்திருப்பார். ஒரு பெண் மனம் திறந்து எழுதினால், இப்படித்தான் எழுதுவாள் என்று அடித்துச் சொல்லக்கூடிய விதமாக அவர் எழுத்து பரிமளிக்கும். உறவுகள், மனித உணர்வுகள், சிறு அத்துமீறல்கள், அவற்றின் நியாயங்கள் எல்லாவற்றையும் பாலகுமாரன் அலசும் விதமே தனி.

அவருடைய எழுத்தின் தீவிர ரசிகர்களாக இருந்த காரணத்தினாலேயே நாங்கள், பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து பதிப்பித்த `உங்கள் ஜூனியர்’ இதழில் அவருக்கான மேய்ச்சல் மைதானத்தை அமைத்துத் தந்து, தமிழில் அசைபோட வைத்தோம். பத்திரிகைத் துறையில் மட்டுமல்லாமல், திரைத் துறையிலும் தன் முத்திரையைப் பதித்தவர் பாலகுமாரன். அந்த விஷயத்தில் எங்களுக்கெல்லாம் முன்னோடி. `ஜென்டில்மேன்’, ‘நாயகன்’, ‘ராஜ பார்வை’, எல்லாவற்றிலும் பாலகுமாரனுக்குப் பெரும் பங்கு உண்டு.

சுரேஷ்-பாலா: சுபா

பேசுகையில் நா நுனியிலும், எழுதுகையில் நகக் கண்களிலும் வைத்திருந்து தமிழைக் கசிய விடுபவர், பாலகுமாரன். அழுத்தமான, ஆழமான, வெகுஜன எழுத்துக்குச் சொந்தக்காரர். ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகத்தின் ருசியையும் காணும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவ்வாய்ப்பை நல்கிய தன் குருவான யோகிராம் சுரத் குமாரின் மீது மாறா பக்திகொண்டவர் அவர் .
நாட்காட்டியில் தேதிகளைக் கிழிப்பதுபோல், காலன் ஒவ்வோர் உயிராகக் கிழித்துக்கொண்டிருக்கிறான். அப்படிக் கிழிக்கப்பட்டது, பாலகுமாரனின் உடம்புதான். அடித்துச் சொல்வோம், அவருடைய எழுத்துகளுக்கு ஒருபோதும் மரணம் கிடையாது’’ என்றனர் வேதனையுடன். 

`யுத்தம் தீர்மானித்தவர்கள் அழுவதில்லை. போர்க்களம் வந்துவிட்டவர்கள் புலம்புவதில்லை. துக்கத்தை அழுகையாய் மாற்றிக் கரைப்பதை விட உறைய வைத்து நெஞ்சில் நிறுத்திக் கொள்வது உத்தமம்’  என்ற பாலகுமாரனின் சொற்களைப் போன்று துயரை அடக்க முடியுமா என்ன? போய் வாருங்கள் எழுத்துச் சித்தரே! எழுத்துக்கு ஏது மரணம்?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!