ஆனந்தவிகடனுக்கு பாலகுமாரனின் கடைசி பேட்டி! #RIPBalakumaran

ஜனங்களோட விருப்பம் என்னவோ அது சினிமா, அதுதான் பத்திரிகை, அதுதான் நாடகம். ஆனா இலக்கியம் மட்டுந்தான் நான் சொல்றத கேளுன்னு மக்கள்கிட்ட சொல்லும். அதுக்கு அந்தச் சக்தியும் இருக்கு. அந்த சக்தியில ஒருபகுதியாக நான் இருந்திருக்கிறேன்.

ஆனந்தவிகடனுக்கு பாலகுமாரனின் கடைசி பேட்டி! #RIPBalakumaran

 

தமிழின் மிக முக்கியமான தொடர்கதை எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி பேட்டி எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தது விகடன் டீம். சீனியர் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரான பாலகுமாரன் வருவாரா, வரமாட்டாரா, அவர் வந்தால்தானே நிறைவாக இருக்கும் என டீமுக்குள் நிறைய உரையாடல்கள். "எத்தனை மணிக்கு வரணும், எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க. " என சர்ப்ரைஸ் கொடுத்தார் பாலகுமாரன்.  ஆனால் ஆனந்த விகடனுக்கு அவர் தரும் கடைசிப்பேட்டி அதுவாகத்தான் இருக்கும் என்று அப்போது தெரியாது... நெகிழ்ச்சியான அந்த கடைசி சந்திப்பில் நடந்தவை இங்கே!

 

`விகடனில் நீங்கள் எழுதி வெளிவந்த முதல் கதை எது’ எனக் கேட்டபோது, கண்களை மூடி நீண்ட தாடியைத் தடவிக்கொடுத்தபடியே யோசித்தவர்,  ``இப்போல்லாம் ஞாபகம் மறதி அதிமாய்ட்டு வருது" என்று அமைதியுடன் இருந்தார். அருகிலிருந்த மனைவியைப் பார்த்து ``சாந்தா... விகடன்ல..." என அவர் கேட்க ஆரம்பிக்கும்போதே ``தாயுமானவன் தொடர்தான் விகடன்ல மொதல்ல வந்தது" என மனைவி சாந்தா ஞாபகப்படுத்த `சபாஷ்’ என்று சிரித்தார் பாலகுமாரன்.

பாலகுமாரன்

`ஒரே நேரத்தில் நீங்கள் பல தொடர்கள் எழுதினீர்களே அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்’ எனக் கேட்டதும் குழந்தையின் உற்சாகத்துடன்.. ``அப்படிக் கேளுங்க" என்றவர், ``நான், ஒரே நேரத்தில் ஏழு தொடர்கள் எழுதினேன். தொடர்கதை படிச்ச வாசகர்களெல்லாம் இப்ப சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க... வாசகர்கள் மேல அந்த வருத்தம் மட்டும் எனக்கு உண்டு. ஆனாலும், அவங்களைச் சொல்லி என்ன இருக்கு. இது விஷ்வல்ஸுக்கான காலம். நான் அந்த ஏழு தொடர்கள் எழுதின சமயம், எனக்கான வாசகப்பரப்பு உச்சத்தில இருந்த சமயம். நானும் என்னை ரொம்பவும் தயார்ப்படுத்திட்டு எழுதினேன். அந்தந்த தொடர்களுக்கான குறிப்பை, கதாபாத்திரத்தின் பெயர்களை வீட்ல இருந்த மர பீரோவுல, செல்ப்ல, ஏன் பாத்ரூம்ல கூட எழுதி ஒட்டி வெச்சுருப்பேன். பல்லு தேய்க்கிறபோது, தலையைத் துவட்டுறபோதுன்னு எல்லா நேரத்திலயும் என் கண்ணு அங்கயேதான் இருக்கும். எந்தத் தொடர் எழுத உட்கார்றனோ அதை எழுதும்போது ஒரு கிளான்ஸ் அவ்ளோதான்" என்றார்.

பாலகுமாரன்

`இப்பவும் எழுதுறீங்களா சார்’ எனக் கேட்டதுதான் தாமதம், ``என்ன இப்படிக் கேட்டுடீங்க? எழுதலன்னா, எழுத முடியலைன்னா செத்துப் போயிடுவேன். பழைய மாதிரி ஒரே சமயத்துல பல பத்திரிகைகளுக்குத் தொடர்கள் எழுத முடியலையே தவிர, எழுதாம ஒருபோதும் என்னால இருக்க முடியாது" என்று ஆவேசப்பட்டார்.

``ஜனங்களோட விருப்பம் என்னவோ அதுதான் சினிமா, அதுதான் பத்திரிகை, அதுதான் நாடகம். ஆனா, இலக்கியம் மட்டும்தான் நான் சொல்றத கேளுன்னு மக்கள்கிட்ட சொல்லும். அதுக்கு அந்தச் சக்தியும் இருக்கு. அந்தச் சக்தியில ஒருபகுதியாக நான் இருந்திருக்கிறேன், இருப்பேன்னு என்னாலே பெருமையா சொல்லிக்க முடியும்." என்றவரின் குரலில் இருந்த உறுதியைக் கேட்டு கூடியிருந்த மற்ற எழுத்தாளர்கள் அனைவரும் கைதட்டினர்.

பாலகுமாரன்

சந்திப்பு முடிந்ததும், இரண்டு கட்டைப் பை நிறைய கொண்டு வந்த புத்தகங்களை அங்கு வந்த எழுத்தாளர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ``நம்ம எல்லாம் அப்பப்போ சந்திச்சு உறவை வலுப்படுத்திக்கணும். அதுக்கு விகடன் ஒரு வாய்ப்பைக் கொடுத்து இருக்கு" என்றவர் அங்கு தேநீர் பரிமாறிய தம்பி உட்பட கூடியிருந்த அனைவரையும் அழைத்து ``வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்" என்றார். போட்டோ எடுத்து முடிந்ததும், அனைவரிடமும் சொல்லிக் கிளம்புகையில் ``இந்தச் சந்திப்பு விகடன்ல எப்போ வரும்னு சொல்லுங்க ஆவலா இருக்கேன்" என்றவர் பிரம்பைப் பிடித்து மனைவியின் கைத்தாங்கலாக நடந்தபடியே காரில் ஏறிச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!