`கேன்ஸ்' திரைப்பட விழாவில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி! #Cannes2018

`கேன்ஸ்' திரைப்பட விழாவில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி! #Cannes2018

திரைத்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் மே மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். அதுவும், ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஃபிரான்ஸ் செல்வதற்குப் பிரபலங்கள் தயாராகிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கும் பரபரப்புக்கும் காரணம், 'கேன்ஸ் திரைப்பட விழா'. இதில், உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணப் படங்கள், முழு நீள திரைப்படங்களின் பிரிவியூ காட்சிகள் அரங்கேற்றப்படும். அதுமட்டுமல்லாது, இந்த நிகழ்வின் தனிச் சிறப்பே பிரபலங்களின் சிவப்புக் கம்பள விரிப்பு வருகைதான். அந்த வகையில், 71-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா மே 8-ம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழா பார்ப்பதற்கு வண்ணமயமாகத் தெரிந்தாலும், சொல்லப்படாத விஷயங்கள் ஏராளம். 

கேன்ஸ்


கேன்ஸ் போட்டி:
இந்த விழாவில் உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திரைப்படங்கள் போட்டியில் பங்குபெறும். திறமையான ஜூரிகளால், சிறந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படும். இதில் வெற்றிபெற்ற பெரும்பாலான படங்கள் ஆஸ்கர் விருதுகளையும் தட்டிச் சென்ற வரலாறும் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக கேன்ஸில் அரங்கேற்றப்பட்ட படம், நந்திதா தாஸ் இயக்கத்தில் நவாஸுதீன் சித்திக், ரசிகா துகள் நடிப்பில் உருவான 'மான்டோ'. இப்படக் குழுவினருடன் நந்திதா தாஸ் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார்.

Nandhitha Das and team


யாருக்கெல்லாம் அனுமதி?
இது திரைத்துறை கலைஞர்களுக்கான தனிப்பட்ட விழா என்பதால், பொதுமக்களுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அதிலும் அவர்களின் விண்ணப்பப் படிவங்களை ஜூரிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே 'கேட் ஓபன்'. அப்படி இந்த ஆண்டின் அனுமதிபெற்ற இந்திய பிரபலங்கள் ஐஸ்வர்யா ராய், 'பத்மாவத்' படத்தில் நடித்த தீபிகா படுகோனே, 'அம்பிகாபதி' படத்தில் நடித்த சோனம் கபூர், 'காலா' பட நாயகி ஹுமா குரேஷி, 'தாம் தூம்' பட நாயகி கங்கனா ரனாவத், 'கலாசலா' பாடலில் கலக்கிய மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் உடுத்தியிருந்த உடைகள் அனைத்தும் 'ஃபர்ஸ்ட் கிளாஸ்'. அவற்றின் அணிவகுப்பு இதோ...

சோனம் கபூர்:
வித்தியாசமான உடைகள் அணிந்துகொள்ள விரும்புவோருக்கு இன்றைய 'ஃபேஷன் ஐகான்' சோனம் கபூர்தான். அவர் நடிக்கும் படங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி எப்போதுமே தனக்கென்று வடிவமைத்த ஸ்டைலிஷ் ஆடைகளில்தான் இருப்பார். கேன்ஸ் அவரின் ஃபேஷன் சென்ஸுக்கு சவாலாகவே இருந்தது. காரணம், அவரின் திருமணமும் இந்த மாதம்தான் நடைபெற்றது. தன் திருமண நிகழ்வுகளில் பிசியாக இருந்த சோனம், கேன்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கும் தவறவில்லை.

L’Oréal பிராண்டின் அம்பாஸடராக கேன்ஸில் கலந்துகொண்ட சோனம், முக்கிய நிகழ்வன்று அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த க்ரீம் நிற லெஹெங்கா சோலியில் மிளிர்ந்தார். பின்னலிட்ட கூந்தலில் பொருத்தப்பட்ட 'செயற்கை பூக்கள் மற்றும் கற்கள்' இந்திய பெண்ணுக்கே உரித்தான தோற்றமாய் இருந்தது. சோனம் கபூரின் கேன்ஸ் வருகையை ரசித்த அவரது கணவர் ஆனந்த் அஹூஜா தன் இன்ஸ்ட்டாகிராமில் #ProudHusband என்று ஸ்டேட்டஸ் தட்டினார். அதைத் தொடர்ந்து அவரின் 'டின்னர்' காஸ்ட்யூம், மின்ட் மற்றும் multicolor-களில் tulle ஸ்லீவ்ஸ் கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய சர்குலர் ட்ரெஸ். கையில் சிவப்பு 'Clutch' உடன் தன் ஃபேஷன் அடையாளத்தை மேலும் மெருகேற்றினார் சோனம்.

Sonam Kapoor


தீபிகா படுகோனே:
இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் 'ஃபேஷன் ராணியாக' திகழ்ந்தவர் தீபிகா படுகோனே. பல அடுக்குகளைக் கொண்ட ஹாட் பிங்க் நிறத்தில் 'Origami' டிரஸ், அதனை மேட்ச் செய்யும் விதமாக பர்புல் நிறத்தில் ஹீல்ஸ், பெரிய மோதிரம், உச்சிக்கொண்டை என்று அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். மேலும், mid-riff ஓபன் கோல்ட் டிரஸ், வானவில் வண்ணங்களில் உருவான, இணைந்த கோடுகளுடைய 'பாடிகான்' ட்ரெஸ், Closed நெக் ட்ரெஸ் என இந்த ஆண்டு சோனம் கபூருக்கு டஃப் கொடுத்திருக்கிறார் 'பத்மாவத்' நாயகி.

Deepika Padukone


ஐஸ்வர்யா ராய்:
மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு தன் உடைகள் மீதும், ஒப்பனைகள் மீதும் அதிகம் கவனம் செலுத்தி கவனம் ஈர்த்தார். மினுமினுக்கும் கற்கள் மற்றும் பீட்ஸ் பொருந்திய sweeping train (நிலத்தில் படர்ந்திருக்கும் உடை), வெள்ளை சட்டை மற்றும் ராப் ஸ்கர்ட்டுடன் சீக்வென்ஸ் வேலைப்பாடுகள் நிறைந்த ஜாக்கெட் அதற்கேற்ற ஒப்பனைகள், சிகையலங்காரம் என அசத்தினார். இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டுக்கு அழகிய தேவதையைபோல் வந்து இறங்கினார் ஐஸ்வர்யா. நீல நிற ஷேடுகளில் ரோஜாப் பூக்கள் எம்ப்ராய்டரி நிறைந்த ஆடை அதில் பதிக்கப்பட்ட 'ஸ்வரோவ்ஸ்கி' கிரிஸ்டல்ஸ் பொருத்திய பட்டாம்பூச்சி வடிவ உடையில் இளவரசிபோல காட்சியளித்தார் ஐஸ்.

Aishwarya Rai


கங்கனா ரனாவத்:
கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதுபோல, தன் முதல் கேன்ஸ் விழாவில் வித்தியாசமான உடைகளைத் தேர்வுசெய்து கலக்கினார் கங்கனா ரனாவத். கடுஞ்சிக்கலான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த 'Cat suit' அணிந்து அதற்கேற்ற வகையில், தன் அழகான சுருண்ட முடியை, ரெட்ரோ காலத்து ஹேர்ஸ்டைலாக மாற்றியமைத்தார் கங்கனா. மேலும், கற்கள் பதித்த கறுப்பு நிற புடவை, மேட்ச்சாக நெக்லஸ், ரெட்ரோ ஹேர்ஸ்டைல் என இந்திய பாரம்பர்ய உடையிலும் ஜொலித்தார்.

Kangana Ranaut


மல்லிகா ஷெராவத்: 
'லாக் மீ அப் (Lock Me Up)' எனும் பிரசாரத்தின்மூலம் கேன்ஸுக்கு வருகை தந்தார் மல்லிகா ஷெராவத். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை எதிர்த்துப் போராடும் அரசு சாரா அமைப்புடன் இணைந்து, சாதாரண உடையில் ஒரு கூண்டுக்குள் அடைபட்டிருப்பதுபோல் தோன்றினார் மல்லிகா. பிறகு லைட் ஷேடுகளில் Off-Shoulder ட்ரெஸ் மற்றும் Closed நெக் ட்ரெஸ் உடைகள் அணிந்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

Mallika Sherawat


ஹுமா குரேஷி:
மெட்டல் பீட்ஸ் (Beads) பதித்த பேன்ட் சூட், பேன்ட் சூட்டுடன் கேப் போன்ற வித்தியாச உடைகளைத் தேர்வு செய்து, நல்ல வரவேற்பையும் பெற்றார் ஹுமா குரேஷி. அதோடு, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண கோடுகளாலான பேன்ட் சூட், ஃபேஷன் ராம்பிற்காக கட் உடைகள் என இந்த வருட ஃபேஷன் ஐகானாக திகழ்ந்தார் ஹுமா.

Huma Quereshi


மேலும், ஃபேஷன் ஷோ, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரம், 82 திரைத்துறை கலைஞர்கள் ஒன்றிணைந்து பாலின சமத்துவமின்மையை எதிர்த்து நடத்திய போராட்டம் என பல நிகழ்வுகளும் அரங்கேறின.

Campaign


கேன்ஸுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்புன்னு இப்ப புரியுதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!