வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (16/05/2018)

கடைசி தொடர்பு:09:29 (17/05/2018)

ஃப்ரிட்ஜில் இந்தந்த விஷயங்களிலெல்லாம் கவனம் அவசியம்..!

ஃப்ரிட்ஜ் கன்டென்சர் காயிலில்(  condenser coil ) கை வைத்த சென்னையைச் சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஃப்ரிட்ஜை கையாள்வது எப்படி என்பது குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஃப்ரிட்ஜ் டெக்னீஷியன் முத்து கிருஷ்ணனிடம் பேசினோம்.

ஃபிரிட்ஜ்

 

வீட்டில் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய சாதனம் ஃப்ரிட்ஜ் என்றாகிவிட்டது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஃப்ரிட்ஜ் அவர்களுக்கு ஒரு குளிர்சாதன பெட்டி. அடிக்கடி ஃப்ரிட்ஜ் கதவைத் திறந்து அதன் குளிர்ச்சியை அனுபவிப்பதில் குழந்தைகளுக்கு அலாதி குஷிதான்.

ஏசியைப் பொறுத்தவரைக்கும், வீட்டின் உயர்ந்த பகுதியில் இருப்பதால் குழந்தைகள் அதைத் தொட நினைப்பதில்லை. ஆனால், நடை பழகும் குழந்தைகள் தொடும் உயரத்தில்தான் இருக்கிறது ஃப்ரிட்ஜ். குழந்தைகள் மட்டுமல்ல... ஃப்ரிட்ஜை க்ளீன் செய்கிறேன் என்று நினைத்து பெரியர்வர்களும் ஃப்ரிட்ஜ் பின் கைவைத்தால் நிலைமை மோசமாகிவிடும்.

ஃப்ரிட்ஜை பொறுத்தவரைக்கும் சரியான கிரவுண்ட் எர்த் முக்கியம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஃப்ரிட்ஜின் பிளக் பாய்ன்டை எலக்ட்ரீஷியனை வைத்துப் பரிசோதிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஏதேனும் வயர்கள் அறுபட்டுக் கிடக்கின்றனவா, முறையான கிரவுண்ட் எர்த் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா போன்றவற்றை அவர்கள் பரிசோதனை செய்துவிடுவார்கள். 

 Earth-leakage circuit breaker (ELCB) என்கிற கருவியை நம்முடைய மெயின் பிளக்பாய்ன்டிலோ அல்லது ப்ரிட்ஜிலோ பொருத்திக் கொள்வது நலம். இந்த வகை கருவிகள் அதிக அளவில் எர்த் வெளியேறுவதைத் தடுக்கும். மேலும், ஒருவேளை எர்த் லெவல் அதிகரித்தால் தானாகவே மின்சாரத்தை நிறுத்திவிடக்கூடிய ஆற்றல் கொண்ட இந்தக் கருவிகளை ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்த வேண்டும்.  தற்போது வீடு கட்டும் பலர் இந்தக் கருவியைப் பொருத்தி விடுகிறார்கள்.

 

ஃப்ரிட்ஜ்

 

ஃப்ரிட்ஜ் அருகில் எப்போது ஒரு ரப்பர் மேட்டைப் போட்டு அதன் மீது நின்று ஃப்ரிட்ஜ் கதவைத் திறக்க வேண்டும். ஆனால், நாம் தரையில் நின்று கொண்டே அதன் கதவைத் திறக்கிறோம். ஒருவேளை எர்த்தின் வீரியம் காரணமாக ஃப்ரிட்ஜ் முழுவதும் அது பாய்ந்திருந்தால், ஃப்ரிட்ஜை பிடிக்கும் போது மரணத்தைத் தொட்டுவிடுவோம். எனவே, எப்போதும் ரப்பர் மேட்டில் நின்று கொண்டு அதன் கதவைத் திறக்க வேண்டும்.

ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் தண்ணீரை எப்படி நீக்குவது என்பதை எலக்ட்ரீஷியனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். மூன்று நாள்களுக்கு ஒரு முறை தண்ணீரை வெளியேற்றுவதை வழக்கமாக்க வேண்டும். அங்கிருக்கும் தண்ணீர் மூலமாக மின்சாரம் பாய்வதற்கும் வாய்ப்பு அதிகம்.

ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயு சில நேரங்களில் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, அடிக்கடி அதைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம். .

கன்டென்சர் காயிலிலிருந்து வெளிப்படக்கூடிய வாயு வெளியேற்றுவதற்காகச் சிறிது இடம் இருக்க வேண்டும். சுவரை ஒட்டியபடி ஃப்ரிட்ஜை வைக்கக் கூடாது. அதிக அளவில் வெப்ப வாயு வெளியேறாமல் இருப்பதால் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

பெரும்பாலானோர் வீடுகளில் எலி தொந்தரவு இருப்பதைப் பார்க்க முடிகின்றது. எலி தொந்தரவு இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜ் கன்டன்சரை வலையினால் கவர் செய்வது நலம்.

ஃப்ரிட்ஜை பராமரிக்கும் முறைகள் :

 சமையலறையில் வைக்கக் கூடாது. ஏனெனில், புகையினால் ஃப்ரிட்ஜின் நிறம் எளிதில் மாறிவிடும்.

அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

இதைத் துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும். 

மாதத்திற்கு இரண்டு நாள்கள் இதைப் பயன்படுத்தாமல் அணைத்து வைக்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்