Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத உயிரினம்... நிலநடுக்கத்துக்கான அறிவிப்பா? #Globster

இப்போதெல்லாம் கடலில் சென்று மீன் பிடிப்பதை விடக் கரையிலேயே திமிங்கலங்களையும் டால்பின்களையும் பிடித்து விடலாம். சமீப காலங்களில் பல்வேறு கடல் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவது என்பது வாடிக்கையாக நிகழ்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. இதற்கான காரணங்களாகப் பலவற்றைச் சொன்னாலும் கடலில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருகிறோம் என்பதே உண்மை. கடந்த வெள்ளிக்கிழமை மாலைப் பொழுது பிலிப்பைன்ஸின் சன் ஆண்டோனியோ (San Antonio) நகரக் கடற்கரை துர்நாற்றத்தில் நிரம்பியது. இரவு 7 மணிக்கு கடற்கரையின் ஓரத்தில் திமிலங்கலம் அளவுக்குகுப் பெரிய ஆனால், அடையாளம் தெரியாத ஏதோ ஒன்று கரை ஒதுங்கியதைப் பார்த்துள்ளனர் மக்கள். 

மர்மமான முறையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலம் ஆழ்கடலில் வாழும் உயிரினத்தின் உடலாக இருக்கலாம் என யூகங்களின்  அடிப்படையில் சொல்கின்றனர். பார்ப்பதற்கு பல்வேறுக் கழிவுப்பொருள்கள் ஒன்றாக இணைந்து கரை ஒதுங்கியதுபோல காணப்படும் இவற்றின் மேல்பகுதி முழுவதும் முடி போன்றவற்றால் நிறைந்துள்ளது. 20 அடி வரை நீளம் உடையது. ஏறக்குறைய 5000 பவுண்ட் எடைக்கும் மேல் இருக்கலாம். பொதுமக்களும் சரி அறிவியலாளர்களும் சரி இவற்றை க்ளோப்ஸ்டர்(Globster) என்று அழைக்கின்றனர். க்ளோப்ஸ்டர் என்பது அடையாளம் காணமுடியாத இறந்த உயிரினத்தின் சிதைந்த பகுதி. இவற்றைக் கண், காது, தலை, எலும்பு எனப் பிரித்தறிய முடியாது. ஏதோ ஓர் உயிரினம் கடலுக்குள்ளேயே இறந்து சிதைந்து மக்கி இந்த நிலைக்கு மாற்றமடைந்து கரைக்கு வருகின்றன க்ளோப்ஸ்டர். இதுபோன்று பல்வேறு க்ளோப்ஸ்டர்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கரை ஒதுங்கியுள்ளன. 1960-ம் ஆண்டு தாஸ்மானியா கடற்கரையில் க்ளோப்ஸ்டர் ஒதுங்கிய பின்னர்தான் இதனைப் பற்றிய ஆய்வுகள் அதிகளவில் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தை ஒட்டி 1962-ம் ஆண்டு இவன் டி சன்டெர்சன் (Ivan T. Sanderson) என்பவர்தான் க்ளோப்ஸ்டர் எனும் வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார். 

க்ளோப்ஸ்டர் உயிரினம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியன்டல் மின்டோரோ மண்டலத்தில் இருக்கிறது சன் ஆண்டோனியோ நகரம். க்ளோப்ஸ்டர் ஒதுங்கியவுடன் மக்கள் அலை அலையாகக் கடற்கரையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான உயிரினங்கள் கடற்கரையில் ஒதுங்கியது எல்லோருக்குள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டோக்களும் செல்பிக்களுமாக க்ளோப்ஸ்டரை தங்களின் போனில் எடுத்துச் சென்று விட்டனர் பலர். இதையெல்லாம்விட க்ளோப்ஸ்டரை சாபமாக, கெட்ட விஷயங்களின் அறிகுறியாகப் பார்க்கின்றனர் மக்கள். ஆழ்கடலில் இருந்து ஏதாவது ஓர் உயிரினம் கடற்கரைக்கு இறந்து வந்தால் அதன்பிறகு அங்கு நிலநடுக்கம் நிகழலாம் எனவும் அஞ்சுகின்றனர். அப்பகுதி மக்கள் சிலர் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கை ஜப்பானின் புராணங்களில் இருந்து வந்தவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. 

இறந்த அரக்கன், கெட்டதை முன்கூட்டியே சொல்லும் சாபம் என்றெல்லாம் நம்பப்படும் க்ளோப்ஸ்டர் இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தினகட் தீவின் (Dinagat Island) கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அதுவும் இதுபோன்றே முடிகளால் நிறைந்த தோற்றத்தை கொண்டிருந்தது. சுமார் 4000 பவுண்ட் எடையும் 20 அடி நீளமும் உடையது. க்ளோப்ஸ்டரில் காணப்படும் முடி போன்ற பகுதி, உயிரினத்தின் உடலில் இருக்கும் தசை நார்கள். அந்த உயிரினம் இறந்தபின் அவை சிதைந்து மக்கி முடிபோன்றவையாக உருபெறுகின்றன. சன் ஆண்டோனியோவின் மீனவளத் துறை அதிகாரிகள், க்ளோப்ஸ்டரின் திசு மாதிரிகளை சேமித்துச் சென்றுள்ளனர். அதை வைத்து செய்யப்படும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் இது என்ன உயிரினம் என்பதை அடையாளம் காணலாம் என்கின்றனர். ஆனாலும் பரிசோதனைக்கு முன்பே இவை பெரும்பாலும் திமிங்கலங்களாகத்தான் இருக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. 

க்ளோப்ஸ்டர்

படங்கள் : Viral Press

க்ளோப்ஸ்டரிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் பயங்கரமானது. அவை கடலுக்குள்ளேயே இறந்து மக்கிச் சிதைந்த நிலையில் கரை ஒதுங்குவதால் இந்தத் துர்நாற்றம் வீசுவது இயல்புதான் என்கின்றனர். ஆனால், மற்ற எந்த இறந்த உயிரினங்களையும் விடவும் இதன் துர்நாற்றம் குடலைப் புடுங்குகிறதாம். ஆழ்கடலுக்குள்ளே வாழும் பல்வேறு உயிரினங்களில் சிலவற்றை மட்டும்தான் கண்டுபிடித்துள்ளோம். அதைத் தாண்டி ஆழ்கடலின் அடியாழத்தில்கூட பெயர் தெரியாத உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் எதாவது ஒன்றாகக் கூட இந்த க்ளோப்ஸ்டர் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இப்படி க்ளோப்ஸ்டர்கள் கரை ஒதுங்குவதற்கான காரணங்களைக் கூட உறுதியாக கண்டறிய முடியவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இயற்கையில் உள்ள பல புரியாத புதிர்களைப் போன்று க்ளோப்ஸ்டரும் ஒரு புரியாத புதிர்தான். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement