பெட்ரோல் கார், டீசல் கார்... இரண்டில் எதை வாங்கலாம்... ஓர் அலசல்!

மேலோட்டமாகப் பார்க்கும்போதே, தினசரி காரைக் குறைவாகப் பயன்படுத்துபவர் என்றால் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்; தினமும் அதிகமாகக் காரைப் பயன்படுத்துபவர் என்றால் டீசல் இன்ஜின் கொண்ட கார் என்ற தெளிவு கிடைத்துவிடுகிறது!

மே மாதம் 17-ம் தேதி.... பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்ட தினம். ஆம், ஏறக்குறைய இரண்டரை வாரங்களுக்குப் பிறகு, அதாவது கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் முடிந்தபிறகு, விலை உயர்வு மீண்டும் அமலுக்கு வந்திருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 78.16 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 70.49 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசம் வெறும் 7.67 ரூபாய்தான்! இதுவே ஒரு வருடத்துக்கு முன்பு (மே 16, 2017), ஒரு லிட்டர் பெட்ரோல் 68.26 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 58.07 ரூபாய்க்கும் விற்பனையானது; அப்போது  பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசம் 10.19 ரூபாய் மக்களே!

பெட்ரோல்

பெட்ரோல் காரைவிட, டீசல் காரின் விலை அதிகமாக இருக்கிறது என்றாலும், டீசலின் விலை பெட்ரோலைவிடக் குறைவாக இருக்கிறதே! இதனாலேயே பெட்ரோல் கார் வாங்கலாமா, டீசல் கார் வாங்கலாமா என்பதில் பலர் குழப்பமடைவதைப் பார்க்க முடியும். எனவே, முதன்முறையாகக் கார் வாங்குபவர்களின் மனதில் இருக்கும் முக்கியக் கேள்விகளுக்கு இதோ விடை...

ஏன் பெட்ரோல் கார் ? எதற்கு டீசல் கார் ?

இன்ஜின் ஸ்மூத்னெஸ் மற்றும் டீசல் காரின் அதிக விலைதான், பெட்ரோல் காரை ஒருவர் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக இருக்கமுடியும். அதேபோல ஒருவர் டீசல் கார் வாங்குவதற்கு, பெட்ரோலைவிடக் குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ் ஆகியவைதான் பிரதான காரணி. இப்படி மேலோட்டமாகப் பார்க்கும்போதே, தினசரி காரைக் குறைவாகப் பயன்படுத்துபவர் என்றால் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்; தினமும் அதிகமாகக் காரைப் பயன்படுத்துபவர் என்றால் டீசல் இன்ஜின் கொண்ட கார் என்ற தெளிவு கிடைத்துவிடுகிறது. 

 

PetrolDiesel

 

முந்தைய காலத்தில்தான், அதிக பராமரிப்புச் செலவுகளுக்கு டீசல் கார்கள் பெயர்பெற்றிருந்தன. இதற்கு அப்போது புழக்கத்தில் இருந்த தரம்குறைவான டீசலே, இன்ஜின்களுக்குப் பிரச்னை தந்தன. இதனால் இன்ஜினில் இருக்குல் ஃப்யூல் ஃபில்டரில் அடைப்பு உண்டானதுடன், அவை இன்ஜினின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால், கால மாற்றத்துக்கு ஏற்ப, டீசல் இன்ஜின் தொழில்நுட்பம் மற்றும் டீசலின் தரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு பொருட்டே அல்ல. 

காரின் மைலேஜ் மற்றும் விலையில் என்ன வித்தியாசம்?

ஒரு காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு இன்ஜின் ஆப்ஷன்கள் இருந்தால், அதில் டீசல் மாடலே அதிக மைலேஜ் தருவதைப் பார்க்கலாம். ஒப்பீட்டுக்காக, மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இதன் பெட்ரோல் மாடல் 22 கிமீ (அராய்) மைலேஜைக் கொண்டிருந்தால், டீசல் மாடல் தருவதோ 28.4 கிமீ (அராய்) மைலேஜ்! எனவே, ஒரு லிட்டர் எரிபொருளிலேயே, (அராய்) மைலேஜில் 6.4 கிமீ வித்தியாசம் இருக்கிறது.  ஆன் ரோடு மைலேஜை கணக்கில் எடுத்துக்கொண்டால், பெட்ரோல் ஸ்விஃப்ட் (நகரம்: 12.6 கிமீ - நெடுஞ்சாலை: 19.3 கிமீ; சராசரி - 15.95 கிமீ) மற்றும் டீசல் ஸ்விஃப்ட் (நகரம்: 16.5 கிமீ - நெடுஞ்சாலை: 22.1 கிமீ; சராசரி - 19.3 கிமீ) என காரின் மைலேஜில் சுமார் 30% குறைந்துவிடுகிறது. என்றாலும், டீசல் இன்ஜின் அதிக மைலேஜ் தருகிறது என்பது, மறுக்கமுடியாத உண்மை.  

 

டீசல்

 

1.2 லிட்டர், 4 சிலிண்டர், K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ஸ்விஃப்ட் ZXi+ (டாப் வேரியன்ட்) காரின் சென்னை ஆன்ரோடுவிலை 8.51 லட்ச ரூபாய்; இதுவே 1.3 லிட்டர், 4 சிலிண்டர், DDiS டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட ஸ்விஃப்ட் ZDi + (டாப் வேரியன்ட்) காரின் சென்னை ஆன்ரோடுவிலை 9.69 லட்ச ரூபாய். இரண்டுக்கும் இடையே விலையில் 1.18 லட்ச ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. எனவே, டீசலின் விலை குறைவாக இருந்தாலும், டீசல் காரின் விலை அதிகமாக இருக்கிறது என்பதால், புதிதாகக் கார் வாங்குபவர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய இடம் இது. ஆம், ஒரு மாதத்துக்கு நீங்கள் தோராயமாக 1,500 கிமீ தூரம் காரை பயன்படுத்துவீர்கள் என்பதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அதாவது, ஒரு வருடத்துக்கு 18,000 கிமீ!

ரன்னிங் காஸ்ட் - கணக்கிடுவது எப்படி? 

1.2 ஸ்விஃப்ட் ZXi+ பெட்ரோல் காரின் ரன்னிங் காஸ்ட்: 18000 / 15.95 * 78.16 = 88,206 ரூபாய்
1.3 ஸ்விஃப்ட் ZDi+ டீசல் காரின் ரன்னிங் காஸ்ட்: 18000 / 19.3 * 70.49 = 65,742 ரூபாய்
ஸ்விஃப்ட் (பெட்ரோல் - டீசல்) ரன்னிங் காஸ்ட்டில் வித்தியாசம்: 22,464 ரூபாய்

 

புதிய கார்

 

இதன்படி பார்த்தால், பெட்ரோல் காரின் ரன்னிங் காஸ்ட் அதிகமாக தெரிந்தாலும், இதன் விலை டீசல் காரைவிட 1.18 லட்ச ரூபாய் குறைவு; எனவே அதிக மைலேஜுக்காக, நீங்கள் டீசல் காரையே வாங்கிவிட்டீர்கள் என எடுத்துக் கொள்வோம். பெட்ரோல் காருடன் ஒப்பிடும்போது. நீங்கள்  கூடுதலாகச் செலவழித்த 1.18 லட்ச ரூபாயை மீட்டெடுப்பதற்கு, 5 வருடம் தேவைப்படும்; அதுவும் நீங்கள் காரை மாதத்துக்கு 1,500 கிமீக்கும் அதிகமாகப் பயன்படுத்தினால் மட்டுமே அது சாத்தியப்படும்! தவிர காரை லோனில் எடுத்திருந்தால், இந்த கணக்கு முழுவதும் மாறுபடும். 

 

Petrol Car Or Diesel Car?

 

ஆகவே, உங்கள் புதிய காரை, வருடத்திற்கு 18,000 கிமீக்கும் குறைவாகவே நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்றால் பெட்ரோல் காரே போதும்; உங்கள் காரின் வருடாந்திர பயன்பாடு 18 ஆயிரம் கிமீக்கும் அதிகமாக இருந்தால், டீசல் கார் வாங்குவதே நல்ல சாய்ஸ்! ஏனென்றால் முன்னே சொன்ன உதாரணத்தின்படி, பெட்ரோல் ஸ்விஃப்ட்டை வாங்குபவர் சேமிக்கப்போகும் 1.18 லட்ச ரூபாயை Recurring Deposit அல்லது Fixed Deposit வங்கி சேமிப்புத் திட்டத்தில் போட்டால், 5 ஆண்டுகளில் அவருக்குக் கிடைக்கும் வட்டி அதிகமாக இருக்கும்; டீசல் ஸ்விஃப்ட்டை வாங்குபவர் அதிகமாகச் செலவழித்திருந்தாலும், அதை அவர் தனது காரின் வருடாந்திரப் பயன்பாட்டின் மூலம் மீட்டெடுத்துவிடுவார். ஆக எதைப் பண்ணினாலும், ப்ளான் பண்ணிப் பண்ணனும் மக்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!