Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வார்த்தைகளின் பலம் தெரியுமா உங்களுக்கு? - நம்பிக்கைக் கதை #MotivationStory

கதை

`ன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’ - பிரெஞ்ச் கணிதவியலாளரும் தத்துவவியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். வார்த்தைகளின் மகிமை அபாரமானது. அதனால்தான் நல்ல சொற்களைப் பேச வாய்ப்பிருக்கும்போது, கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதை `கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்கிறார் வள்ளுவர். மொபைல்போனில் சாட் செய்யும் நேரத்தில் பத்தில் ஒரு பங்குகூட நம்மில் பலர் பேசுவதற்கு செலவழிப்பதில்லை. உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவதற்கு சந்தர்ப்பங்களிருந்து, அதைப் பயன்படுத்தாமல் தவறவிடுகிறீர்களா..? இழப்பு மற்றவர்களுக்கு இல்லை. உங்களுக்குத்தான். `ரசத்துல வாசனைக்குக்கூட எதையும் போடலை. ஆனா, சூப்பரா இருக்குப்பா...’ என்கிற பாராட்டு மனைவிக்கு எவ்வளவு உற்சாகம் தரும் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. `உன்னால முடியும்டா...’ என்று ஆசிரியர் அளிக்கும் ஊக்கம் மலையளவு பலத்தை மாணவனுக்குத் தந்துவிடும். ஒருவருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும், எதையும் சாதிக்கும் நம்பிக்கையையும் வார்த்தைகளால் கொடுக்க முடியும் என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை.

அது இங்கிலாந்திலிருக்கிற கிராமம். அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. `பட்டீ’ (Buddy) என்று அதற்குப் பெயர்வைத்திருந்தார் அவர். அவருடைய சின்னஞ்சிறு நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான். அறுத்த கதிர்களை நிலத்திலிருந்து எடுத்துவருவது, விவசாயத்துக்கான பொருள்களை ஏற்றிச் செல்வது, அவ்வப்போது பக்கத்து ஊர்களுக்கு வண்டிகட்டிக் கொண்டு போக... எனப் பல வேலைகளுக்கு உறுதுணையாக இருந்தது பட்டீ.

ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். அவரை விவசாயி, அந்தச் சுற்றுவட்டாரத்தில் பார்த்ததில்லை. வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார்.

கார் விபத்து

விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், `சூடாக டீ குடிக்கிறீங்களா?’ என்று கேட்டார்.

வந்தவர், அவசரமாக `வேண்டாம்’ என்று சொன்னார். அவர் கொஞ்சம் பரபரப்பாக இருப்பதை விவசாயியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

`சொல்லுங்க... என்ன விஷயம்?’ விவசாயி கேட்டார்.

`ஒண்ணுமில்லை. நான் லண்டன்லருந்து வர்றேன். பக்கத்துல இருக்குற ஒரு ஊருக்குப் போகணும். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். அக்கம்பக்கத்துல விசாரிச்சேன். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம்னும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்னு...’

`ரொம்பப் பெரிய காரா?’ என்று கேட்டார் விவசாயி.

`இல்லை, இல்லை. சின்ன கார்தான்’ என்றார் வந்தவர்.

`வாங்க முதல்ல காரைப் பார்க்கலாம்’ என்ற விவசாயி, கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார். இருவரும் கார் பள்ளத்துக்குள் விழுந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார். வெளியூர்க்காரர் சொன்னதைப்போல கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்பட்டாலும் படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.

பட்டீ

`என்னங்கய்யா... காரை வெளியே எடுத்துடலாம்ல?’ என்ற வெளியூர்க்காரரின் கேள்விக்கு விவசாயி பதில் சொல்லவில்லை. வேலையில் இறங்கினார். ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார்.

பிறகு, `எங்கடா கேஸி (Casey)... இழு பார்ப்போம்!’ என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.

`ம்... பெய்லி (Bailey) இழுடா ராஜா!’ இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவேயில்லை.

`டேய் மேண்டி (Mandy) வேகமா இழு!’ மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.

`என் செல்லம்... பட்டீ... நீயும் சேர்ந்து இழுடா!’ என்றார். அவ்வளவுதான். குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார். விவசாயி குதிரையை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது கேட்டார்... `சரிங்கய்யா... நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க? அதுதான் எனக்குப் புரியலை.’

பார்வையின்மை

`அது ஒண்ணுமில்லை. என் பட்டீக்கு கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா? அதான்... அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்பவெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு!’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement