மரணத்தைத் தடுத்த டாக்டருக்கு `கேலி’ பரிசு! - உண்மைக் கதை #FeelGoodStory | This article explains about the value of new thinking

வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (21/05/2018)

கடைசி தொடர்பு:09:04 (21/05/2018)

மரணத்தைத் தடுத்த டாக்டருக்கு `கேலி’ பரிசு! - உண்மைக் கதை #FeelGoodStory

தொடர்ச்சியாக நிகழ்ந்த தாய்மார்களின் இறப்பை எப்படித் தடுத்தார் மருத்துவர் செம்மல்வீய்ஸ்

மரணத்தைத் தடுத்த டாக்டருக்கு `கேலி’ பரிசு! - உண்மைக் கதை #FeelGoodStory

கதை

ளனம் செய்வது என்பது, ஒரு முட்டாளின் முதலும் கடைசியுமான வாதம்’ - கொஞ்சம் கடுமையாகவே குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் சார்லஸ் சிம்மன்ஸ் (Charles Simmons). அவரின் ஆதங்கத்துக்குக் காரணமும் இருக்கிறது. வரலாற்றில் மேதைகளும் அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த விஞ்ஞானிகளும் ஆரம்பத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இன்றைக்கும் அது நடக்கத்தான் செய்கிறது. அங்கீகாரம் கிடைக்காததால், எங்கேயோ முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது ஒரு புது முயற்சி. பாராட்டுக்கு பதிலாக ஏளனம் பரிசாகக் கிடைத்ததால், நசுக்கப்படுகிறது யாரோ ஒருவரின் கனவு. இருக்கும்போது யாராலும் சீண்டப்படாத, ஏளனத்துக்கு ஆளான ஒரு மேதைக்கு, இறந்த பிறகு சிலை வைத்து கௌரவிக்கும் பழக்கம் உலகம் முழுக்க இருக்கத்தான் செய்கிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், ஹங்கேரிய மருத்துவரும் விஞ்ஞானியுமான இக்னேஸ் செம்மல்வீய்ஸ் (Ignaz Semmelweis). மருத்துவமனைகளில் சுத்தமும் சுகாதாரமும் கடைப்பிடிக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்திய முதல் குரல் அவருடையது. இக்னேஸ் செம்மல்வீய்ஸின் வாழ்க்கைக் கதை மருத்துவர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பாடம்!

ஹங்கேரி, புதாபெஸ்ட் (Budapest)-ன் தபான் (Tabán) பகுதியில், 1818-ம் ஆண்டு பிறந்தார் செம்மல்வீய்ஸ். அப்பா மளிகைக்கடை வைத்திருந்தார். செல்வத்துக்குக் குறைச்சலில்லை. வீட்டில் மொத்தம் 10 குழந்தைகள். ஐந்தாவதாகப் பிறந்தவர் இக்னேஸ். முதலில் வியன்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் படிப்பதற்காகச் சேர்ந்தார். என்ன காரணமோ, ஒரே வருடத்தில் மருத்துவப் படிப்புக்கு மாறினார். 1844-ம் ஆண்டு தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்தார். மகப்பேறு மருத்துவத்தில் அவருக்கு ஈடுபாடு இருந்தது. ஆஸ்திரியாவிலிருந்த, வியன்னா பொது மருத்துவமனையில் 1846-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார்.

செம்மல்வீய்ஸ்

அந்த மருத்துவமனையில்தான் செம்மல்வீய்ஸ், காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த சில மருத்துவப் பழக்கங்களைத் தகர்த்தெறிந்தார். அவை மருத்துவ வரலாற்றில் முக்கியமான விஷயங்களாக இன்றைக்கும் கருதப்படுகின்றன, கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனாலும், அந்த நேரத்தில் அவர் கேலிக்கு ஆளானார்; அவருடைய யோசனைகளுக்காக சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.

அது 1847-ம் ஆண்டு. வியன்னா பொது மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு அதிர்ந்துபோனார் செம்மல்வீய்ஸ். பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் கும்பல் கும்பலாக இறந்துபோனார்கள். அந்த மர்மமான நோய்க்கு `ப்யூர்பெரல் காய்ச்சல்’ (Puerperal fever) அல்லது `சைல்டுபெட் காய்ச்சல்’ (Childbed Fever) என்று பெயர் சொன்னார்கள். ஒரு பெண் அப்போதுதான் குழந்தை பெற்றிருப்பார். முதல் குழந்தையைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியில் அந்தப் பெண்ணும் கணவரும் குடும்பமும் திளைத்துக்கொண்டிருப்பார்கள். அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்துக்குள்ளாக அந்தப் பெண்ணுக்குக் காய்ச்சல் வரும். சில மணி நேரங்களில் இறந்துபோவார். `பிறக்கும்போதே அம்மாவைப் பலிவாங்கியது’ என்கிற பட்டத்தோடு அப்போதுதான் பிறந்த குழந்தை கதறிக்கொண்டிருக்கும். இப்படி ஒன்று, இரண்டல்ல... இரண்டு வருடங்களில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இறந்துபோனதைத் தன் கண்ணால் பார்த்தார் இக்னேஸ் செம்மல்வீய்ஸ்.

பிரசவித்த பெண்கள் இறப்போடு, இன்னொரு மரணமும் அவரை அதிரவைத்தது. அவருடைய நெருங்கிய நண்பர் அவர்... டாக்டர். இருவரும் இணைந்துதான் ஓர் அறுவைசிகிச்சையைச் செய்தார்கள். ஆபரேஷனின்போது ஒரு சிறு கத்தி, நண்பரின் கையில்பட்டு ஒரு கீறலை ஏற்படுத்திவிட்டது. அடுத்தநாளே அந்த நண்பருக்கு காய்ச்சல் வந்து இறந்துவிட்டார். காரணம், அவர் கையில் ஏற்பட்ட சின்னஞ்சிறு கீறல்தான் என்றார்கள். இடிந்துபோனார் செம்மல்வீய்ஸ். `கையில் பட்ட சிறு காயம் உயிரை பலி வாங்குமா என்ன? இந்த மரணங்களுக்கு எப்படியாவது முடிவுகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு முதலில் காரணத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும்’ என்று தோன்றியது அவருக்கு.

உபகரணங்கள்

ஒருநாள் மருத்துவமனை காரிடாரில், ஏதோ யோசனையில் நடந்துகொண்டிருந்தார். ஓர் அறையிலிருந்து வந்த இன்னொரு டாக்டர், இவருக்கு வணக்கம் சொன்னார். இவரின் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, எதிரே இருந்த இன்னோர் அறைக்குப் போனார். அவர் போனதும் ஏதோ நினைவு வந்தவராக, அந்த டாக்டர் வெளியே வந்த அறையைப் பார்த்தார். அது, `பிணவறை.’ அவர் நுழைந்த அறையைப் பார்த்தார்... அது, பிரசவ அறை. இவருக்குச் சட்டென்று ஏதோ உறைத்தது. `பிணவறைக்கு அந்த டாக்டர் எதற்காகப் போயிருப்பார்?’ அவரே பதில் சொல்லிக்கொண்டார். `பிரேத பரிசோதனை (Autopsy) செய்வதற்காகத்தான் இருக்கும். சரி... பிரசவ அறைக்குள் நுழைவதற்கு முன்னர் அவர் கைகழுவியிருப்பாரா? நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை. சுத்தமாக இல்லாத கைகளால் பிரசவம் பார்த்தால் என்ன ஆகும்? பிரவித்த பெண்ணுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பிறகு..? காய்ச்சல் வரும். பிறகு..? பிறகென்ன... மரணம்தான்.’ ஆடிப்போனார் செம்மல்வீய்ஸ். இது தொடர்பாக மேலும் சில ஆய்வுகளைச் செய்தார்.

அதில் ஓர் உண்மை தெரியவந்தது. பிரசவ அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், டாக்டரின் உதவி தேவைப்படாத பெண்களுக்கு சைல்டுபெட் காய்ச்சல் அதிகம் ஏற்படவில்லை. ஆனால், மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்த பெண்கள் மிக அதிகமாக சைல்டுபெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள். பிரேத பரிசோதனை உள்பட, வேறு அறுவைசிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள்தான் பிரசவ வார்டிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் பார்த்தார் செம்மல்வீய்ஸ். அந்த மருத்துவ உபகரணங்கள் முறையாகக் கழுவாமல் பயன்படுத்தப்பட்டதும் காய்ச்சல் வரக் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டார். இதைத் தடுத்தாலே பாதி மரணங்களைத் தவிர்த்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.

கை கழுவுதல்

நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க சிலவழிமுறைகளைக் கண்டுபிடித்தார். குளோரின் கெமிகல் கலந்த நீரில் எல்லா மருத்துவர்களும் சுத்தமாகக் கைகளைக் கழுவிவிட்டுத்தான் பிரசவ அறைக்குள் நுழைய வேண்டும். பிரசவ வார்டுக்குள் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களை சுத்தமாகக் கழுவிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இந்த எளிய சுகாதார வழிமுறைகளைத்தான் கடைப்பிடிக்கச் சொன்னார். அவ்வளவுதான்... பிரசவ வார்டில் பெண்கள் காய்ச்சலுக்கு பலியாவது மளமளவெனக் குறைந்தது.

ஆனால், இந்தப் புதிய விதிகள், வழிமுறைகள் பல டாக்டர்களை எரிச்சல்படுத்தின. `எங்க கை சுத்தமா இல்லையா என்ன... நாங்க ஏன் கை கழுவணும். எங்களை செம்மல்வீய்ஸ் அசிங்கப்படுத்துறார். மருத்துவ உபகரணங்களை கழுவிட்டு யூஸ் பண்ணினா சாவு குறைஞ்சுடுமா... பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?’ என்றெல்லாம் பேசினார்கள். கைகழுவச் சொன்னது பல டாக்டர்களின் ஈகோவை பாதிப்பதாக இருந்தது. பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேலி பேசினார்கள். மருத்துவ நிர்வாகத்திடம் அவரைக் குறித்துப் புகார் கொடுத்தார்கள். ஒருகட்டத்தில், நிர்வாகமே செம்மல்வீய்ஸை ராஜினாமாக் கடிதம் கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டது. அவரும் ராஜினாமா செய்தார்.

ஆனாலும் அவர் மனம் தளர்வில்லை. தன் கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக (Etiology, Concept and Prophylaxis of Childbed Fever) எழுதி, பல நாட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தார். அவற்றில் பல பிரிக்கப்படாமலேயே திரும்பி வந்தன. மருத்துவமனைகளை விட்டுவிட்டு, மக்களிடமே போய் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அவரை யாரும் மதிக்கவேயில்லை. அவரிடமிருந்து விலகி ஓடினார்கள். விமர்சனம், கிண்டல், கேலி... ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் செம்மல்வீய்ஸ்.

தாய்மார்கள் காப்பாற்றப்பட்ட கதை

இன்றைக்கு மருத்துவமனைகளில் ஊசி முதற்கொண்டு பல மருத்துவ உபகரணங்கள் சுத்தமாகக் கழுவப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. கையுறைகளை மருத்துவர்கள் அணிகிறார்கள். மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் சுத்தமாகக் கைகளைக் கழுவுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் இக்னேஸ் செம்மல்வீய்ஸ்.

மனநலக் காப்பகத்தில், 1865-ம் ஆண்டு செம்மல்வீய்ஸ் இறந்துபோனார். இதில் ஒரு முரண்சுவை என்னவென்றால், `எந்தக் காய்ச்சலை விரட்ட அவர் பெருமுயற்சி எடுத்தாரோ, அதேபோல ஒரு காய்ச்சலால்தான் அவர் இறந்துபோனார்’ என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்