வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (21/05/2018)

கடைசி தொடர்பு:11:02 (21/05/2018)

800 ஆண்டுகளுக்கு முன்பே ‘மேட் இன் சைனா’ லேபிள்... கடலில் மூழ்கிய கப்பல் சொல்லும் வரலாறு!

அந்த மர்மக் கப்பலில் விலையுயர்ந்த பொருட்களில் இருந்து மண்பாண்டங்கள் வரை அளவிடற்கரிய சரக்குகள் புதையல்களாக இருந்தன.

800 ஆண்டுகளுக்கு முன்பே ‘மேட் இன் சைனா’ லேபிள்... கடலில் மூழ்கிய கப்பல் சொல்லும் வரலாறு!

"மேட் இன் சீனா" - மக்களால் வாங்கப்படும் மின்னணுப் பொருட்களின் பின்னால் பெரும்பாலும் இருக்கும் இந்த லேபிளை அறியாதவர்கள் மிகச்சொற்பம். ஆனால் இந்த லேபிளுக்கு 800 ஆண்டுக்கால வரலாறு உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

கப்பல்

Photo Courtesy: Field Museum

இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் 1980ஆம் ஆண்டு, பல ஆண்டுகளுக்கு முன்னால் மூழ்கிய கப்பலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன்மூலம் அந்தக் கப்பலைப் பற்றி கண்டறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள். அதன் கயிறுகளும், பாகங்களும் பெரும்பாலும் அழுகி அழிந்துவிட்டிருந்தன. அதில் இருந்த வணிகச் சரக்குகள் மட்டுமே அடையாளங்களாக நின்றிருந்ததால் அது ஒரு வணிகக் கப்பல் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அதுபோகக் குறைந்தது 700 வருடங்கள் பழமையான கப்பல் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்ததே தவிர எந்த நாட்டினுடையது, எங்கே சென்றுகொண்டிருந்தது போன்ற கேள்விகளுக்கு விடை காணமுடியாமல் தவித்தனர்.

தந்தம்

Photo Courtesy: Field Museum

அந்த மர்மக் கப்பலில் விலையுயர்ந்த பொருட்களிலிருந்து மண்பாண்டங்கள் வரை புதையல்களாக இருந்தன. அவற்றோடு யானைத் தந்தங்களும், நறுமணப் பிசின்களும் கிடைத்துள்ளன. அந்தச் சரக்குப் பெட்டியில் சில குறியீடுகளும் இருந்தன. அந்தக் கப்பலில் கிடைத்த தொல்பொருள்களைப் பல ஆண்டுகளாக ஆய்வுசெய்து கொண்டிருந்தனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். 1990களில் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் அந்தக் கப்பல் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றே நினைத்திருந்தனர். ஆனால் தற்போதைய ஆய்வு இது அதற்கும் நூறு வருடங்கள் முந்தையது என்பதைப் புரிய வைத்துள்ளது. அது மட்டுமின்றி அதில் இருந்த குறியீடுகளின் அர்த்தமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தம்

Photo Courtesy: Field Museum

பிசின்களும், தந்தந்தங்களும் உயிர் வாழ்ந்தவற்றில் இருந்து கிடைப்பன. அவற்றில் சி-14 என்ற ஒருவகைக் கார்பன் இருக்கும். அவற்றில் அழுகிக் கொண்டிருக்கும் கார்பன்களின் எண்ணிக்கையை வைத்துத் தோராயமான முடிவிற்கு அவர்களால் வரமுடிந்தது. அதன் மூலம் தான் அது 700 ஆண்டுகள் பழமையான பொருட்கள் என்று ஆய்வாளர்கள் அறிந்தனர். அதன்பிறகு முன்னேற்றமடைந்த தொழில்நுட்பங்கள் அவர்களின் ஆய்வுக்குப் பேருதவி புரிந்ததால், அந்தக் கப்பல் மேலும் 100 வருடங்கள் பழமையானது என்பதைக் கண்டறிந்தனர். அவற்றோடு, அந்தத் தொல்பொருள்களில் இருந்த குறியீடுகளைச் சில நாட்களுக்கு முன் அந்த ஆய்வுக்குழு கண்டறிந்தது. அதன்மூலம் அந்தக் கப்பல் சீன தேசத்துடையது என்பதையும், அதன்மூலம் சீனாவின் மத்திய கால வரலாற்றின் ஒரு பகுதியைக் கண்டறியவும் முடிந்துள்ளது.

பிசின் மற்றும் தந்தங்களை மேலும் ஆழமாகப் பரிசோதித்ததில் ஆரம்பத்தில் அவர்கள் கணித்த காலத்தைவிட மிகவும் பழமை வாய்ந்தது என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

 

குறியீடு

Photo Courtesy: Field Museum

"இது ஜியான்னிங் ஃபூ-வில் தயாரிக்கப்பட்டது" என்பதே அந்தக் குறியீட்டின் அர்த்தம். அது சீன அரசாங்கத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு மாவட்ட ஆட்சிப் பகுதியாகும்.

1277 வரை ஆட்சி செய்த ஷாங் ராஜவம்சத்தின் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட மண்பாண்டங்கள் பல்வேறு தேசங்களில் பிரத்யேகமாக வாங்கப்படும் அளவிற்குப் புகழ்பெற்று விளங்கியது. அந்தக் காலகட்டத்தில் இந்த "ஜியான்னிங் ஃபூ ( Jianning Fu)" மண்பாண்டங்கள் தயாரிப்பதில் பெயர்பெற்ற நகரமாக இருந்துள்ளது.

இது 1278ஆம் ஆண்டில் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்ட பிறகு "ஜியான்னிங் லூ ( Jianning Lu)" என்று பெயர் மாற்றப்பட்டது. ஆகவே அதற்கும் முன்னரே இந்தக் கப்பல் மூழ்கியிருக்க வேண்டும் என்று கணித்தார் மர்மக் கப்பல் பற்றிய ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்திய முனைவர். நிசியோலெக். ஆகவே இது 1200இன் தொடக்க காலத்திலே நிகழ்ந்திருக்க வேண்டும். அதில் ஆயிரக்கணக்கான மண்பாண்டங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன்மூலம் அதைக் கொண்டுசென்ற வணிகன் நீண்ட பயணத்திற்காக அதைத் தயார் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடிகிறது.

மண்பாண்டம்

Photo Courtesy: Field Museum

இந்தக் காலகட்டத்தில் தான் சீனப் பெரும் வணிகர்கள் தரைவழிப்பாதையை விடுத்து கடல்வழிப் பாதை மூலமாக வணிகத்தைப் பெருக்குவதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகையதொரு முக்கியமான பரிமாற்றத்தின் போதுதான் இந்தப் பெரிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

சீனர்களின் வரலாற்றில் பட்டுப் பாதைக்கு இருந்த முக்கியத்துவம் குறையத் தொடங்கிய காலகட்டம் அது. உலகம் முழுவதிலும் இருந்த தேசங்கள் அனைத்துமே தங்கள் வணிகத்தைக் கடல் மார்க்கமாகப் பெருக்கிக்கொள்ள முனைந்திருந்த காலகட்டம். அத்தகையதொரு காலகட்டத்தில் சீனா பட்டு மட்டுமே வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பி இருக்காமல் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்கள். அவர்களின் பெரும் படைப்புகளான ஆளுயரப் பானைகளையும், மண்ணில் செய்யப்பட்ட பல்வேறு பொருட்களையும் அவர்கள் மண்ணில் கிடைத்த மற்ற அரியப் பொருள்களையும் வணிகத்தில் மற்ற தேசங்களுக்குக் கொண்டு சென்று அதன் மூலம் பெரும்பொருள் ஈட்டி வந்தபடியே இருந்தனர். தங்களால் உருவாக்கப்படும் பொருட்கள் மற்றவற்றோடு கலந்துவிடாமல் தனித்துவத்தோடு இருக்கவேண்டுமென்று தங்கள் தயாரிப்புகளில் தயாரிக்கப்பட்ட பகுதியின் பெயரைப் பொறிக்கத் தொடங்கினர். அதுவே தற்போது அவர்களின் வரலாற்றை அறியப் பேருதவி புரிந்துள்ளது.

Luxury goods

Photo Courtesy: Field Museum

சுமத்ரா தீவுப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த ஶ்ரீ விஜய சாம்ராஜ்ஜியம் சரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் அந்த வணிகக் கப்பல் ஜாவா கடல் பகுதியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் கடலோரச் சிற்றரசுகள் ஶ்ரீ விஜய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துக்கொண்டு இருந்த காலமாதலால் அவர்கள் அந்த சாம்ராஜ்ஜியத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட சரக்குகளை அழிக்கக் கப்பலை அழித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சீனாவின் மத்திய கால வரலாற்றில் வணிகத்தின் பங்கை வெளிக்கொண்டு வர உதவும் இந்தக் கப்பல் மற்றும் சரக்குகளின் தொல்பொருள்கள் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை தற்போது சிக்காகோவின் ஃபீல்டு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.


டிரெண்டிங் @ விகடன்