Published:Updated:

ஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்!

ஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்!
ஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்!

"காலேஜ் முடிஞ்சு ஃப்ரெண்ட்ஸோடு வீட்டுக்குப் போய்க்கிட்டிருந்தேன். அப்போ, ரோட்டோரத்துல தாத்தா ஒருத்தர் சுருண்டு படுத்துக்கிடந்தார். பார்க்கவே ரொம்பப் பரிதாபமா இருந்தது. அவர், ஏதோ கேட்கிற மாதிரி தெரிஞ்சது. பக்கத்துல போய் கேட்டப்போ, `குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும்'னு சைகையில் சொன்னார். நாங்க, உடனே ஓடிப்போய் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்து பார்த்தா..."  என  அதற்குமேல் பேச முடியாமல் தவித்தார், காலித் அகமத். அந்த முதியவரின் மூடியிருந்த இமைகளுக்குள், கருவிழிகள் இரண்டு முறை அசைந்து தன் உயிரை நிறுத்திக்கொண்டன. சைகை காட்டித் தண்ணீர் கேட்டு இறைஞ்சிய அந்த முதியவரின் கைகள் லேசாகக் குளிர, அதிர்ந்துபோயிருக்கிறார்கள், காலித்தும் அவரது நண்பர்களும்.

என்ன செய்வது எனத் தெரியாமல், அருகில் இருந்த காவல் நிலையத்துக்குத் தகவல்கொடுத்திருக்கிறார்கள். காவல் துறையினர் விசாரித்ததில், அவர் ஆதரவற்றவர் எனத் தெரிந்துள்ளது. காவலர்களுடன் சேர்ந்து, அந்த முதியவரை காலித்தும் அவரது நண்பர்களும் அடக்கம் செய்திருக்கிறார்கள். அந்தச் சம்பவம் காலித்தை நிலைகுலையச் செய்யவே, தன் நண்பர்களுடன் இணைந்து மகத்தான பணி ஒன்றைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள்.

ஆதரவற்ற நிலையில் இறந்துபோகிறவர்களுக்கு, காலித்தும் அவரது நண்பர்களும் உறவினராகிறார்கள். ஆதரவற்று இறந்துபோகிறவர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்து வருகின்றனர். இவர்கள், தற்போது இறுதி ஆண்டு படித்துவருகிறார்கள். சென்னையில் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து வரும் அழைப்புகளையும் ஏற்று,  அந்த ஊரில் உள்ள தங்கள் நண்பர்கள்மூலம் உதவிவருகின்றனர்.

நண்பர்கள் இணைந்து, ஆரம்பித்திருக்கும் `உறவுகள் டிரஸ்ட்' மூலம், ஆதரவற்றோருக்கு உறவாகியிருக்கும் காலித், அவர்களுடைய பணிகுறித்து நம்மிடையே பேசினார்.

"ரொம்ப வருஷமாவே ஒரு டீமோட சேர்ந்து ரத்ததானம் பண்ணிக்கிட்டிருக்கேன். அந்த டீம்ல தமிழ்நாடு முழுக்க நிறையப் பேர் இணைஞ்சிருக்காங்க. அந்த டீம்ல இருக்கிற நண்பர்கள் சிலரும் இப்போ எனக்கு உதவுறாங்க. இறந்தவர்களை அடக்கம் பண்ண முடியாம கஷ்டப்படுறவங்களைப் பார்க்கிறவங்க, எங்களுக்கு கால் பண்ணுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்கும் நாங்க உதவி பண்ணியிருக்கோம்'' என்ற காலித், சென்னையில் சமீபத்தில் அவர்கள் உதவி செய்த இரண்டு குடும்பங்களைப் பற்றிச் சொன்னார்.

``வட மாநிலங்கள்ல இருந்து கட்டட வேலைக்கு, ஹோட்டல் வேலைக்குனு நிறையப் பேர் தமிழ்நாட்டுக்கு வர்றாங்க. அப்படி வந்த ஒருத்தர், இறந்துட்டார். அவரோட  மனைவி என்ன பண்றதுனு தெரியாம தவிச்சுட்டு இருந்தாங்க. நண்பர் ஒருத்தர் மூலமாதான் இந்தத் தகவல் தெரியவந்துச்சு. அங்கே போய் பார்த்தப்ப, பாஷை தெரியாம அந்த அக்கா தவிச்சுட்டு இருந்தாங்க. அடக்கம் பண்றதுக்குத் தேவையான எல்லா செலவுகளையும் செஞ்சோம்'' என்றவரிடம், ``உதவி செய்வதற்குப் பணம் எப்படிக் கிடைக்குது? இறந்துபோனவங்களோட உறவுக்காரங்க யாரும் வந்ததில்லையா?'' எனக் கேட்டோம். 

``எங்களுக்கு வர்ற தகவலை போலீஸ்கிட்ட சொல்லி, அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு சடலத்தை அனுப்பிடுவோம். காவல்துறை மூலமா எல்லா ஊர்கள்ல இருக்கிற ஸ்டேஷனுக்கும் தகவல் சொல்லிடுவாங்க. காணாமல்போனவங்க பட்டியல்ல அவங்க பேரு இருக்கான்னு செக் பண்ணிட்டு, முறையாதான் அடக்கம் பண்ணுவோம். 

போன மாசம் சேலத்துல இருந்த ஒரு குடும்பம், அவங்க பையனை கீழ்ப்பாக்கம் ஜி.ஹெச்ல அட்மிட் பண்ணியிருந்தாங்க. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். அந்தப் பையன், சிகிச்சை பலனளிக்காம இறந்துட்டான். அவங்க அப்பாவும் அம்மாவும் துடிச்சுப்போயிட்டாங்க. நாங்க, அவங்களுக்கு உதவி பண்றதுக்காகப் போயிருந்தோம். அந்த அம்மா அவங்க பையனுக்கு சவப்பெட்டி செஞ்சு அடக்கம் பண்ணணும்னு ஆசைப்பட்டாங்க. அதுக்குக்கூட  அவங்ககிட்ட காசு இல்லை. நாங்க டிரஸ்ட் மூலமா ஹெல்ப் பண்ணினோம். தன் பையனை இழந்து தவிக்கிற அந்த அம்மாவுக்கு அந்த நேரத்துல ஒரு சின்ன ஆறுதல் கிடைச்சிருக்கும்ல" என்றார் சன்னமான குரலில்.

"நண்பர்கள் பலர் செய்கிற சின்னச்சின்ன உதவி மூலமாதான் அடக்கம்பண்ற செலவுகளைச் சமாளிக்கிறோம். இப்பகூட ஒரு ஆம்புலன்ஸ் வாங்க ப்ளான் போட்டிருக்கோம். பணம் ரெடி பண்ணிட்டிருக்கோம். ஆம்புலன்ஸ் வாங்கிட்டா, இன்னும் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். இந்த உலகத்துல யாருமே அநாதை இல்லைங்க. அப்படி யாரோட ஆதரவும் இல்லாம யாராவது இருக்காங்கன்னா, அவங்களுக்கு உறவா நாங்க இருப்போம்'' எனத் தன்னம்பிக்கையுடன் பேசினார் காலித் அகமத்.

சக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டுபவர்களே பூமியெங்கும் மனிதத்தை விதைக்கிறார்கள்!