``புலிகளின் எண்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்!” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட் | these cows are the reason for the decrease of tigers

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (21/05/2018)

கடைசி தொடர்பு:13:44 (24/05/2018)

``புலிகளின் எண்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்!” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்

புலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் கிடை மாடுகள்.! – வன விலங்கு ஆர்வலர்கள் வேதனை.!

``புலிகளின் எண்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்!” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்

"ஒரு பட்டியில் ஐந்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மாடுகள் இருக்கும். அவை அனைத்தும் கிடை மாடுகள். பாலுக்கும், சாணத்திற்கும் அதன் பயன்பாடு மிகக் குறைவுதான். இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதே கிடை மாடுகள் வளர்ப்பின் பிரதான நோக்கம். மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் இந்தக் கிடை மாடுகளின் பட்டிகள் இருக்கும். ஒரே நேரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் லட்சக்கணக்கில் ஏறுவது மட்டுமல்லாமல், மலையின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, வன விலங்குகளையும் அச்சுறுத்திவருகிறது. ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் ஒரு பெரிய மணி கட்டப்பட்டிருக்கும். மொத்தமாக லட்சக்கணக்கான மணி ஓசை கேட்டால் எப்படி இருக்கும்?

கிடை மாடுகள்

கிடை மாடுகள் மலையில் ஏறுகிறது என்றால், அந்தப் பகுதியில் ஒரு காட்டு அணில் கூட இருக்காது. எல்லாம் ஓடிவிடும். இது ஒரு புறம் என்றால், மாடுகளை மேய்த்துச் செல்லும் நபர்களும் வன விலங்கு வேட்டையில் ஈடுபடுவதுதான் வேதனையானது. மலையடிவாரத்தில் வறட்சி என்றால் இந்தக் கிடை மாடுகள், வரையாடுகள் இருக்கும் மலை உச்சி வரை செல்லும். வரையாடுகள் போல மலை முகடுகளில் எளிமையாகச் செல்லும் திறன் கொண்டவை. இதனால், வரையாடுகளுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. மேலும், கிடை மேய்ப்பவர்களால் வரையாடு பெரும்பாலும் வேட்டையாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் விடக் கொடுமையானதும், வேதனையானதும் ஒன்று உள்ளது. அது, பார்த்தீனியமும், ஆந்த்ராக்ஸ் நோயும்தான். கீழிருந்து மலையில் ஏறும் கிடைகள், மேற்குத்தொடர்ச்சிமலையில் பார்த்தீனியத்தை தனது சாணம் மூலம் பரப்புகிறது. அது மட்டுமல்லாமல், அந்த்ராக்ஸ் போன்ற கொடிய நோய்களை வன விலங்குகளுக்குப் பரப்பி இயற்கை சமநிலையைக் கெடுக்கிறது. இவ்வளவு பிரச்னைகளை வைத்திருப்பதால்தான் பெரும்பாலான மாவட்டங்களில் இவற்றை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிப்பது குறைந்திருக்கிறது. பல இடங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைகள், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இருந்த போதும், பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்றும் மேற்குத்தொடர்ச்சிமலையைச் சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.!’’ என்று வேதனையோடு நம்மிடம் தெரிவித்தார் பெயர் வெளியிட விரும்பாத வன விலங்கு ஆர்வலர்.

"நாங்கள் கிடை மாடுகளுக்கு எதிரிகள் கிடையாது. ஆனால், அதனை முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கிடை மாடுகளால் ஏற்படும், ஏற்பட்டிருக்கும் விளைவுகள் ஏராளம். அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், நம் மேற்குத்தொடச்சிமலையில் புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு இந்தக் கிடை மாடுகளும் ஒரு காரணம். வேட்டையாடப்பட்டது முதல் காரணம் என்றால், கிடை மாடுகளை மேய்த்துச் செல்பவர்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது இரண்டாவது காரணம். மொத்தமாக ஆயிரக்கணக்கான மாடுகள் மேய்ச்சலுக்காக மேற்குத்தொடச்சிமலைக்குள் செல்லும். அப்போது ஒன்றிரண்டு மாடுகள் புலியால் வேட்டையாடப்படும். புலியானது, வேட்டையாடிய மாட்டை ஒரே நேரத்தில் சாப்பிடாது. இரண்டு நாள்கள் ஓரிடத்தில் பத்திரப்படுத்தும். அந்த இடத்தை மாடு மேய்ப்பவர்கள் கண்டுபிடித்து, இறந்த மாட்டில் விஷத்தை வைத்துவிடுவார்கள். புலிக்கு மட்டுமல்ல, சிறுத்தைக்கும் இதே நிலைதான். மலைகளில் இருக்கும் போதைப்புல்லை மாடுகள் சாப்பிட்டால் அதன் நாக்கு அறுபடும். இதனால் புற்களுக்கு தீ வைப்பார்கள். எரிந்த பின்னர் முளைக்கும் இளம் தளிர்களை மாடுகள் விரும்பிச் சாப்பிடும். இது போன்ற செயல்கள் பெரும் காட்டுத்தீக்கு வழி வகைக்கும். குரங்கணி சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம்! 

புலிகள்

கிடை மாடுகள் இப்போது வந்தவை இல்லை. காலம் காலமாக இருப்பவைதான். கொங்கு மண்டலத்தில் இருக்கும் மலையடிவார ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும், `பட்டி’ என்றுதான் முடியும். அனைத்தும் ஒரு காலத்தில் மாடுகளின் பட்டிகளாக இருந்தவை. இந்தக் கிடை மாடுகளுக்கு என மேய்ச்சல் நிலம் உள்ளது. அதனைப் பயன்படுத்தாமல், அனுமதியற்ற மேற்குத்தொடர்ச்சி மலையின் உள்பகுதிகளுக்குச் செல்வது சட்டப்படி குற்றம். இதனை எப்போதும் அனுமதிக்கக் கூடாது.!’’ என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ்.

இது தொடர்பாக கிடைமாடுகள் வைத்திருப்போர் தரப்பில் பேசிய போது, ``நாங்கள் எப்போதும் வன விலங்குகளை வேட்டையாடியதில்லை. எங்களுக்கு என அரசு மேய்ச்சல் நிலம் கொடுத்திருக்கிறது. அது தற்போது பல்வேறு ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’’ என்றனர்.

கிடை மாடுகள் குறித்த முழுமையான தகவல்களை வனத்துறை திரட்டி ஆய்வு செய்ய வேண்டும். என்னதான் பாரம்பர்ய மேய்ச்சல் பகுதியாக மேற்குத்தொடச்சி மலை இருந்தாலும், தற்போதைய சுற்றுச்சூழல் தொடர்பான காரணிகளை வைத்து பார்க்கும் போது கிடைகளை மலைக்குள் அனுமதிப்பது அவசியமற்றது என்றும், வெறும் வணிக நோக்கம் மட்டுமே கொண்டிருக்கும் கிடை மாடுகளை அனுமதித்து மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலைக் கெடுக்க வேண்டாம் என்றும் அழுத்தமாகப் பேசுகிறார்கள் வன விலங்கு ஆர்வலர்கள்.


டிரெண்டிங் @ விகடன்