வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (22/05/2018)

கடைசி தொடர்பு:11:35 (22/05/2018)

``குழந்தை பிறக்க மரத்தடியில் தியானம்?!" - வாட்ஸ்அப் கதை உண்மையா?

உண்மையில் தொல்குடிகளின் இயற்கை மீதான அறிவுச்சேகரங்களும், மனிதச் சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் உளவியல் புரிதல்களையும் நாம் புரிந்துகொள்ள அவற்றை முழுமையான பதிவுகளாகக் கொண்டு வரவேண்டும்.

``குழந்தை பிறக்க மரத்தடியில் தியானம்?!

"குழந்தை பிறந்த பொழுதிலிருந்தே அவர்களின் வயது கணக்கெடுக்கப்படுவது உலகப் பொது வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் ஹிம்பா ( Himba) பழங்குடியினர் குழந்தையின் வயதைக் கணிக்கும் விதம் வித்தியாசமானது. ஒரு பெண்ணின் மனதில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய கனத்திலிருந்தே அவருக்குப் பிறக்கும் குழந்தையின் வயது கணக்கெடுக்கப்படும். அவ்வாறு அவருக்குத் தோன்றியவுடன் தனது குடும்பம், வீடு அனைத்தையும் துறந்து ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கிவிடுவார். அந்தத் தியானத்தின் மூலமாகத் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கான பாடல் அவருக்குக் கேட்டபிறகு அதைத் தன் துணைக்கு வந்து சொல்லிக்கொடுப்பார். அதன்பின் அவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையைப் பெற்றெடுப்பார்கள்."

Sobonfu Some

இது வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் மிகைப்படுத்தப்பட்ட கதை. உலகம் முழுவதும் பழங்குடிக் கதைகளை மிகைப்படுத்தி அதைத் தற்போதைய டிஜிட்டல் சந்தையில் உலவ விடுவது அடிக்கடி நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. அவர்களின் வாழ்வுமுறைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் பலநூறு ஆண்டுக்காலப் புனிதங்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக அதைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் தொல்குடிகளின் இயற்கை மீதான அறிவுச்சேகரங்களும், மனிதச் சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் உளவியல் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்ள அவற்றை முழுமையான பதிவுகளாகக் கொண்டு வரவேண்டும். அதுவே அவர்கள் மீது வெளியுலக மக்களுக்குப் பரிதாபத்தைவிட மரியாதையைப் பெற்றுத்தரும். அவர்களுக்கும் தேவை அதுவே. மேற்கூறப்பட்ட கதையின் உண்மை வரலாறு "ஆப்பிரிக்கத் தொல்குடிகளின் குழந்தை வளர்ப்புக் கல்வி" ( Welcoming Spirit Home: Ancient African Teachings to Celebrate Children) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எழுதிய ஸொபோன்ஃபு ஸொமே ( Sobonfu Some) என்பவரும் தொல்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைக் கதை:

"புர்கினோ ஃபாசோ (Burkino Faso) மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சிறிய நாடு. அங்கே வாழ்பவர்கள் தான் டகாரா ( Dagara) என்ற தொல்குடியின மக்கள். அந்த மக்களுக்கு ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெண் கருத்தரித்துவிட்டால் அவள் தன்னைப் போன்ற மற்ற கர்ப்பிணிப் பெண்களோடு காட்டுக்குச் சென்று சில நாள்கள் தியானம் செய்வாள். இங்கே தியானம் என்பது கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தவாறு இருப்பது அல்ல. அந்தத் தியானம் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கானது. அதாவது அந்தக் குழந்தை எப்படி வளர வேண்டும் என்பதை வகுப்பதற்கானது. அதை அவர்கள் இசையோடு ஒரு பாடலாக வடித்தெடுப்பார்கள். அதற்குத் தேவையான அமைதிக்காகவே காடு நாடிச் செல்கிறார்கள்.

டகாரா

அந்தப் பாடலில் குழந்தை தனக்கான நல்லொழுக்கங்களோடும் அனைவரிடமும் அன்போடும் வளர்பவனாகவும், பல சாதனைகள் புரியும் திறன் கொண்டவனாகவும் இருப்பதுபோலவே அமையும். டகாரா இனத்தின் ஒவ்வொரு மனிதருக்குமே ஒவ்வொரு பாடல் உண்டு. அது அவர்களது பிறப்பில் தொடங்கி மரணத்தில் முடியும் வரை ஒவ்வொரு நிகழ்விலும் இடம்பெறும். வளர்ச்சியின் கட்டங்களில் தன்னால் முடிக்கப்படும் பணிகளும், செய்யப்படும் செயல்கள் சாதனைகளாகும் போதும் இந்தப் பாடல்களால் பாராட்டப்படுவார்கள்.

 அவர்களது இனத்தவர் சமூக விரோதச் செயல்பாடுகளிலும், குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டால் அவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இன மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அவர்களைச் சுற்றி நின்று அந்த நபர்களுக்கான பாடல்களைப் பாடுவார்கள். தாயின் கருவறையில் இருந்தே மனதில் பதிந்த பாடலைத் தனது உடலின், மனதின் அங்கமாகவே பாவிக்கப்பட்ட பாடலை அவர்கள் கூடிப் பாடும்போது உளவியல் ரீதியில் சில மாற்றங்களுக்கு இச்செயல் வழிவகுக்கிறது. அவர்களுக்கு இப்படிப் பாடுவதின் மூலம் மனதளவில் தான் இவ்வாறு தவறு செய்யக்கூடிய நபர் இல்லை என்ற தெளிவையும் அது நமது தேவையும் இல்லை என்ற அறிவும்  உணர்வுகளின் வாயிலாக புகட்டப்படுகிறது.

Dagara Music Academy


இசை, மனித மனங்களைக் கண்ணில் தெரியாத கயிறுகொண்டு கட்டிவைத்து அதன் குணங்களையும் உணர்வுகளையும் அந்தக் கயிறு வழியாக மனம் தொட்டு அதை அறிவு வரைக் கடத்தும் அற்புதம். அந்த இசை வழியாக நற்குணங்களை ஒருவருக்குப் புகட்ட முடியும். ஆனால், அதே இசையைக் கொண்டு ஒரு மனிதனுக்கான குணங்களையே உருவாக்குகின்றனர் இந்த மக்கள். அவர்களின் பாடல்களில் பெரும்பாலும் இடம்பெறுவது மனிதநேயம், உண்மை, ஒற்றுமை ஆகியவையே. இந்த மூன்றையும் ஒருவனுக்குள் விதைத்துவிட்டாலே அவர்களை எப்பேர்ப்பட்ட தவறுகளில் இருந்தும் திருத்திக் கொண்டுவந்து விடலாம் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.
அந்த மக்கள் அவர்களுக்கான பாடலைக் கேட்கும்போது தன் மனதையும் தாண்டி எங்கோ ஆழத்தை அது தொடுவதுபோல் உணர்கிறார்கள். 
மனிதர்களைப் போன்ற சமூக உயிரினங்களுக்கு ஆதியில் இருந்தே இசை மிகுந்த பக்கபலமாக இருந்துள்ளது. தற்போது அது வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருந்தாலும் ஆதியில் குழுக்களுக்கு இடையேயான ஒத்திசைந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், உணர்வுகளைத் தகுந்த முறையில் அடுத்தவருடன் பரிமாறவும் இசை மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது. அதையே குழந்தைகளின் குணங்களைச் சரியான முறையில் வளர்த்தெடுப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் இந்தப் பழங்குடிகள்.

தொல்குடிக் குழந்தைகள்

"தவறான வழியில் செல்லும் ஒருவரைத் திருத்துவது அவருக்குத் தரப்படும் தண்டனைகள் அல்ல. அதைச் செய்யக்கூடிய வல்லமை கொண்டது அன்பு மட்டுமே. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் உண்டு. அன்பை உருக்கித் தங்கள் குழந்தைகளுக்கு எங்கள் தாய்மார்கள் எழுதும் பாடலையே அகிம்சையின் வழியாக அவர்களைத் திருத்துவதற்கும் நாங்கள் பயன்படுத்துகிறோம்."

அந்தப் புத்தகத்தில் பழங்குடிகளைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறார் அதன் ஆசிரியர். அதைத்தான் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகிறோம். இப்போது சொல்லுங்கள்.

யார் நாகரீகமடைந்தவர்கள்?


டிரெண்டிங் @ விகடன்