வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (22/05/2018)

கடைசி தொடர்பு:10:21 (23/05/2018)

சீனர்களின் காதலர் தினத்துக்கும் நிலவுக்குச் செல்லும் `குய்ஹியாவோ' செயற்கைக்கோளுக்கும் என்ன சம்பந்தம்

சீனர்களின் காதலர் தினத்துக்கும் நிலவுக்குச் செல்லும் `குய்ஹியாவோ’ செயற்கைக்கோளுக்கும் என்ன சம்பந்தம்?

சீனர்களின் காதலர் தினத்துக்கும்  நிலவுக்குச் செல்லும் `குய்ஹியாவோ' செயற்கைக்கோளுக்கும் என்ன சம்பந்தம்

விண்வெளி விஞ்ஞானம் இன்று அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. உலகின் பல நாடுகளும் செயற்கைக்கோள்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பி, சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. மனிதன் நிலவில் காலடி பதித்த 1969-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல நாடுகளும் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. மேலும், தகவல் தொடர்பு வசதியைப் பெறுவதற்காகவும் பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நிலவின் மர்மமான பக்கங்களை ஆய்வுசெய்வதற்காக, சீனா ஒரு செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பியிருக்கிறது. அந்தச் செயற்கைக்கோளின் பெயர் 'குய்ஹியாவோ' (Queqiao) .இதற்கு `வால் காக்கைப் பாலம்' (Magpie Bridge ) என்று அர்த்தம். சீனா அனுப்பியிருக்கும் செயற்கைக்கோளைவிட சுவாரஸ்யமானது அதற்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயரான `குய்ஹியாவோ.’

குய்ஹியாவோ

இந்தப் பெயரின் பின்னணியில் ஒரு தேவதையின் காதல் கதை சொல்லப்படுகிறது.

அந்தக் கதை...

சீனப் புராணக் கதைகளின்படி, சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஸின்யூ என்ற பெண் தேவதை ஒருமுறை பூமிக்கு வருகிறாள். பூமிக்கு வந்தவள் மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவனைப் பார்க்கிறாள். அவன் பெயர் நியூலங். அவனைக் கண்டதும், தான் ஒரு தேவதை என்பதையும் மறந்து அவனிடம் காதல்கொள்கிறாள். அவனைத் திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்குகிறாள். இருவரின் அன்புமயமான இல்லற வாழ்க்கையின் பயனாக இரண்டு குழந்தைகளும் பிறக்கிறார்கள்.

காலம் இப்படி இனிமையாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சொர்க்கத்தில் இருந்த ஸின்யூவின் தாய், பூமிக்குச் சென்ற தன் மகள் பூமியிலேயே வசித்து வருவதைக் கண்டு கவலைகொள்கிறாள். மேலும், பூமியில் வசிக்கும் தன் மகள், `மரணமில்லாப் பெருவாழ்வு' என்னும் தெய்விகத் தன்மையைச் சிறிது சிறிதாக இழந்துவருகிறாளே என்றும் வருத்தப்படுகிறாள். உடனே தன்னுடைய தெய்விக சக்தியால் தன் மகளை மறுபடியும் சொர்க்கத்துக்கே அழைத்துக்கொள்கிறாள். அப்படிச் செல்லும்போது நியூலங் வளர்த்து வரும் ஓர் எருதுவுக்கு, சில ஆற்றல்களைத் தந்துவிட்டுச் செல்கிறாள்.

குய்ஹியாவோ

திடீரென்று மாயமாக மறைந்துபோன தன்னுடைய காதல் மனைவி ஸின்யூவை நியூலங்கும் அவனது இரண்டு குழந்தைகளும் பல இடங்களிலும் தேடி அலைகிறார்கள். எங்கு தேடியும் அவனால் தன் காதல் மனைவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அழுது புலம்புகிறான்.

அப்போது அவன் வளர்த்து வந்த எருது அவனிடம் வந்து, ``உன் மனைவி சாதாரணப் பெண் கிடையாது. அவள் சொர்க்கத்தில் வசிக்கும் தேவதை. என்னைக் கொன்று என் தோலை ஆடையாக அணிந்துகொள். அப்போது உன்னால் சொர்க்கத்துக்குப் பறந்து செல்ல முடியும். உனக்காக உன் காதலி அங்கே காத்துக்கொண்டிருக்கிறாள். அவளும் உன்னை நினைத்து அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள்’’ என்று சொல்கிறது.

குய்ஹியாவோ

Image Courtesy : Google Doodle

தான் வளர்த்த எருதைக் கொன்று, அதன் தோலை ஆடையாக அணிந்துகொண்டு தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சொர்க்கத்துக்குப் பறந்து செல்கிறான் நியூலங். சொர்க்கத்தில் தன் காதலியைப் பார்த்ததும், அவளை நோக்கி ஆசையுடன் ஓடுகிறான். ஸின்யூவும் நியூலங்கைக் கண்டதும் ஓடி வருகிறாள். ஸின்யூ மீண்டும் பூமிக்குச் சென்றுவிட்டால், அவளது தெய்விகத் தன்மை அழிந்துவிடும் என்பதை அறிந்த சொர்க்கத்தின் கடவுள், தன் கூந்தலை முடித்திருந்த குத்தூசியை எடுத்து வானில் ஒரு கோடு கிழிக்கிறாள். உடனே அகலமான ஓர் ஆறு உருவாகிறது. அது, நியூலங்கையும் ஸின்யூவையும் பிரித்துவிடுகிறது. ஒரு கரையில் ஸின்யூவும், மறு கரையில் நியூலங்கும் நின்றுகொண்டு, ஒருவரையொருவர் பார்த்தபடி அழுகிறார்கள்.

சொர்க்கத்திலிருக்கும் வால் காக்கைப் பறவைகள், காதல் தம்பதியின் அழுகுரல் கேட்டு வருத்தம் கொள்கின்றன. அவர்களைச் சேர்த்து வைப்பதற்காக அந்தப் பறவைகள் அனைத்தும் ஒன்று கூடி ஆற்றைக் கடக்க ஒரு பாலம் அமைக்கின்றன. வால் காக்கைப் பறவைகள் ஏற்படுத்திய பாலத்தில் காதலர்கள் இருவரும் கூடி மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்கிறாள். தன் மகளின் துயரத்தைப் பார்த்த சொர்க்கத்தின் கடவுள், வருடத்தில் ஒருநாள் மட்டும் காதலர்கள் இருவரும் சந்திக்க அனுமதிக்கிறாள். அந்த ஒருநாள் சீன நாட்காட்டியின் படி ஏழாவது மாதத்தின் ஏழாவது நாள்.

குய்ஹியாவோ

Image Courtesy : Google Doodle

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ஸின்யூவின் தாய் அமைத்த ஆற்றைக் கடக்க, வால் காக்கைப் பறவைகள் அனைத்தும் ஒன்று கூடி பாலம் அமைக்கும். அந்தப் பாலத்தின் வழியே ஆற்றைக் கடந்து காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மகிழ்வார்கள். மற்ற நாள்களில் இருவரும் ஆற்றின் இரு கரைகளில் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்தபடி காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பார்கள்.

காதலர்கள் இணையும் நாளைத்தான் சீனர்கள், `குய்ஹியாவோ' என்ற பெயரில் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

வால் காக்கைப் பறவைகள் காதலர்கள் இருவரும் இணையப் பாலம் அமைத்ததைப்போலவே, நிலவுக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோளும், நிலவுக்கும் பூமிக்கும் ஒரு பாலமாக இருந்து, நிலவின் மறுபக்க மர்மங்களை வெளிப்படுத்தும் என்று சீனர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் தங்களது செயற்கைக்கோளுக்கு `குய்ஹியாவோ' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

வால் காக்கைகள், காதலர்கள் இருவரும் ஒன்றுகூட ஏற்படுத்திய பாலத்தைப் போலவே குய்ஹியாவோ செயற்கைக்கோள் நிலவின் மர்மத்தை வெளிப்படுத்தி, பூமிக்குப் பாலமாக அமையட்டும்!

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்