KYMCO... இந்தியாவுக்கு வரும் தாய்வான் நாட்டு ஸ்கூட்டர்களில் என்ன விசேஷம்? | KYMCO to enter India in 2021... What can we expect?

வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (24/05/2018)

கடைசி தொடர்பு:10:26 (24/05/2018)

KYMCO... இந்தியாவுக்கு வரும் தாய்வான் நாட்டு ஸ்கூட்டர்களில் என்ன விசேஷம்?

கரெக்ட் மாடல் - கச்சிதமான நேரம் - கட்டுப்படியாகக்கூடிய விலை ஆகியவற்றில் KYMCO கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்டுரையின் தலைப்பில் இருக்கும் நிறுவனத்தை (KYMCO), இந்தியாவில் பலர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தற்போது அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆம், இவர்கள் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் டயர் பதிக்கவிருக்கிறார்கள்.

KYMCO என்றால் என்ன?

Kwang Yang Motor Company என்பதே KYMCO-வின் விரிவாக்கம். தாய்வான் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம், 1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆரம்ப நாள்களில் ஹோண்டா நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாகங்களை இந்த நிறுவனம் தயாரித்து கொடுத்துக்கொண்டிருந்தது. பின்னாளில் இவர்களிடமிருந்து தனியாகப் பிரிந்து வந்து, 1970-ம் ஆண்டு முதல் ஸ்கூட்டர்களைக் களமிறக்கியது. 1992-ம் ஆண்டு முதல் `KYMCO' என்ற பெயரில் இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியதுதான் முரண். பிறகு, 2000-ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் மிகப்பெரிய டூ-வீலர் தயாரிப்பாளராகத் திகழ்கிறது KYMCO. கால ஓட்டத்துக்கு ஏற்ப பைக் - ஸ்கூட்டர் - ATV - Step-Through எனப் பலவகை வாகனங்களை, உலகளவில் இந்த நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. பெரும்பாலும் ஸ்கூட்டர்கள் ஆக்கிரமித்திருக்கும் Taipei நகரச் சாலைகளில், அவ்வப்போதுதான் பைக் மற்றும் Step-Through வகை டூ-வீலர்களைப் பார்க்க முடியும்.

KYMCO

ஜப்பானிய நிறுவனங்களின் அளவுக்கு பலம் இல்லாவிட்டாலும் தெற்காசிய நாடுகள் மற்றும் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் KYMCO புகழ்பெற்ற நிறுவனமாக இருக்கிறது. தவிர, உலக டூ-வீலர் சந்தையின் மொத்த விற்பனையில் 4-வது இடத்தை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. தற்போது உலகமே எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், IONEX EV Solution எனும் தனது புதிய கோட்பாட்டின் கீழ், Many EV எனும் பெயரில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியிட்டது. கழற்றி மாட்டக்கூடிய எடை குறைவான பேட்டரிகளைக்கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 200கிமீ ரேஞ்சைக்கொண்டிருக்கிறது. 

இந்தியாவுக்கு வருவதில், ஏன் இந்தக் காலதாமதம்?

அடுத்த மூன்று ஆண்டுகளில் போட்டிமிகுந்த இந்திய டூ-வீலர் சந்தையில் நுழையும் முடிவில் இருப்பதாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு KYMCO நிறுவனத்தின் தலைவரான Allen Ko அறிவித்திருந்தார். சர்வதேச அளவில் பெயர்பெற்ற ஒரு நிறுவனம், இந்தியாவுக்கு வருவதில் காலதாமதம் செய்தது ஏனோ? அதுவும் கைவசம் ஏகப்பட்ட ஸ்கூட்டர் மாடல்களை வைத்திருந்தும், ஹோண்டா ஆக்டிவாவால் ஸ்கூட்டர்மயம் ஆகிவிட்ட நமது டூ-வீலர் சந்தையில், கொஞ்சம் லேட்டாகவே வர இருக்கிறது KYMCO. 

electric scooters

இதற்கான காரணத்தைக் கேட்டபோது, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தியச் சந்தையைக் கவனித்து வந்ததுடன், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பலரை இந்த இடைப்பட்ட காலத்தில் சந்தித்திருப்பதாகவும் Allen Ko சொல்லியிருந்தார். எனவே, காலதாமதமாக வந்திருந்தாலும், விற்பனை எண்ணிக்கையில் பெரிதாகக் கருத்தில்கொள்ளாமல், கரெக்ட் மாடல் - கச்சிதமான நேரம் - கட்டுப்படியாகக்கூடிய விலை ஆகியவற்றில் KYMCO கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எந்த மாதிரியான தயாரிப்புகளை எதிர்பார்க்கலாம்?

இந்தியாவில் கூட்டணி அமைத்துச் செயல்படும் முடிவில் இருக்கிறது KYMCO. எனவே, முதற்கட்டமாக, இந்திய டூ-வீலர் சந்தையை நன்கு கணித்துவைத்திருக்கும் கூட்டாளியைத் தேடிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம், இந்திய டூ-வீலர் சந்தையில் இருந்த கூட்டணிகளின் வரலாற்றையும், அவை எதுவும் நிலைத்ததில்லை என்பதையும் தெரிந்துவைத்திருக்கிறது. எனவே, வரவிருக்கும் மூன்று ஆண்டுகளில் தகுந்த கூட்டாளி கிடைக்காவிட்டால், தன்னிச்சையாகவே இந்தியாவில் கால் பதிக்கத் திட்டமிட்டிருக்கிறது KYMCO.

IONEX EV

இங்கே பல ஸ்கூட்டர்கள் இருந்தாலும், Maxi-Scooter என்பது கண்டுகொள்ளப்படாத செக்மென்ட்டாகவே இருந்துவருகிறது. எனவே, இந்தப் பிரிவில் X-town 125i எனும் மாடல் - 300சிசி அல்லது 400சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்கொண்ட Xcting - ட்வின் சிலிண்டர் இன்ஜின்கொண்ட  AK550 ஆகியவற்றுடன், IONEX EV சீரிஸில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்... அடுத்த மூன்று ஆண்டுகளில் வரிசையாகக் களமிறங்கும் என நம்பலாம்.  

`Make in India, for India, By India' - சாத்தியங்கள் இருக்கின்றனவா?

போட்டிமிகுந்த இந்திய டூ-வீலர் சந்தையில், உலகளவில் சாதித்த பல பெரிய நிறுவனங்களே சொதப்பியிருப்பதை KYMCO தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது. எனவே, இந்தியாவிலேயே வடிவமைப்பு - ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி - டெஸ்ட்டிங் - உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தயாரிப்பை, பின்னாளில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. அதற்கு நீண்ட நாள்கள் தேவைப்படும் என்பதால், உலகச் சந்தைகளில் விற்பனை செய்யும் மாடல்களில் இந்தியச் சந்தைக்கு ஏற்றதாக இருப்பவையே இங்கு கிடைக்கும் எனத் தெரிகிறது.

MANY EV

ஆனால், அவை CBU முறையில் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுமா?, CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படுமா?, முழுக்க உள்நாட்டுப் பாகங்களால் இங்கேயே அவை உற்பத்தி செய்யப்படுமா? போன்ற கேள்விகளுக்கான விடையை, KYMCO நிறுவனத்தின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.

இந்தியாவுக்கு KYMCO-வின் கேம் ப்ளான் என்ன?

நம் நாட்டுக்கு ஏற்ற தயாரிப்புகளைக் களமிறக்குவதில் மும்முரமாக இருப்பதால், நிச்சயம் ஓர் உள்நாட்டு உற்பத்தியாளருடன் கூட்டணி அமைத்தே KYMCO இந்தியாவில் தனது தொழிலைத் தொடங்க விரும்பும். ஆனால், அதற்கான திட்டம் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள, நாம் 2021 வரை காத்திருக்க வேண்டும் என்பது நெருடல். விலையில் என்னதான் கவனமாக இருந்தாலும், அந்த விலைக்கு ஏற்றபடி வாகனத்தில் என்ன இருக்கிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

தாய்வான்

மேலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புஉணர்வும் மக்களிடையே பரவிவருவதால், IONEX EV சீரிஸில் நிச்சயமாக புதிய தயாரிப்புகள் இங்கே வரும். எனவே, தனது வருங்காலத் திட்டங்களை மனதில்வைத்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் KYMCO, உள்நாட்டிலேயே ஒரு தொழிற்சாலையை நிறுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்