``ரஹ்மான் சார் பயந்துட்டே டிராவல் பண்ணினார்!’’ - `2.0’ ப்ரமோவுக்கான பலூன் தயாரித்த பெனிடிக்ட் | 2point0 Promotion Balloon designed by Benedict

வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (25/05/2018)

கடைசி தொடர்பு:19:19 (25/05/2018)

``ரஹ்மான் சார் பயந்துட்டே டிராவல் பண்ணினார்!’’ - `2.0’ ப்ரமோவுக்கான பலூன் தயாரித்த பெனிடிக்ட்

``ரஹ்மான் சார் பயந்துட்டே டிராவல் பண்ணினார்!’’ - `2.0’ ப்ரமோவுக்கான பலூன் தயாரித்த பெனிடிக்ட்

`அப்பா... எனக்கு பலூன் வேணும்!', `எப்படிமா பலூன் இவ்ளோ பெருசாச்சு?', `இந்த பலூன் எவ்ளோ உயரம் வரைக்கும் போகும் அண்ணா?', `எனக்கு பிங்க் கலர் பலூன்தான் பிடிக்கும்'... இப்படி குழந்தைகளின் கனவுகள் ஏராளம். அப்படிப்பட்ட பலூனில் பயணம் செய்யலாம் என்றால் சும்மாவிடுவார்களா? `ஹாட் ஏர் பலூன்' பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் `குளோபல் மீடியா பாக்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் பலூன் வடிவமைப்பாளர் பெனிடிக்ட்.

பலூன்

``இந்தியாவுல அதிகம் கவனிக்கப்படாத துறையில் இதுவும் ஒண்ணு. எப்படி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீங்க?" 

``எனக்கு பேஸிக்காவே ஏர்கிராஃப்ட்னா ரொம்பப் பிடிக்கும். லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சுட்டு நேரடியா களத்துல இறங்கிட்டேன். 2008-ல வெளிநாடுகள்ல முதல்முதலா பலூன் லான்ச் பண்ணினோம். அதுக்கு அப்புறம் நிறைய நிகழ்வுகளுக்கு செஞ்சிருக்கோம். 2015-ல இருந்து ஆண்டுக்கு ஒருமுறை பொள்ளாச்சியில சர்வதேச பலூன் திருவிழா நடக்கும். இது சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும்விதமா ப்ளான் பண்ணப்பட்டது. இப்போ திருமண நிகழ்வுக்குலாம் பண்ணிட்டிருக்கோம். ஆரம்பத்துல மக்களோட வரவேற்பு கம்மியாதான் இருந்துச்சு. ஆனா, இப்போ மக்கள் அதிகம் எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க."

`` `2.0' பட வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?"

``எங்களோட ஹாட் ஏர் பலூன் ஐடியாவை `2.0' படத்தோட புரமோஷனுக்காக அந்தப் படக்குழுவினர்கிட்ட சொன்னோம். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. 3-D வடிவத்துல நாங்க பண்ணின முதல் பலூன் `2.0' தான். எட்டு நாட்டுல புரொமோட் பண்ணினோம். நல்ல வரவேற்பு கிடைச்சுது. ஸோ, டீம்ல எல்லாரும் ஹேப்பி. அப்போ ரஹ்மான் சார் பயந்துட்டே டிராவல் பண்ணினார். அவரைவிட ஒரு டைம் பிரபுதேவா சார் பயணம் பண்ணப்போ ஆரம்பத்துல இருந்து ரொம்பவே பயந்தார். தரையில இறங்கிற வரைக்கும் அவருக்கு பயம் இருந்துச்சு."

2.0 Movie Promo

``ஒரு பலூன் தயாரிக்க எத்தனை நாள் ஆகும்?"

``ஆங்கிரி பேர்டு, மிக்கி மவுஸ்னு எந்த வடிவத்துலயும் பலூன்களை டிசைன் பண்ணலாம்.  பலூனோட டிசைன் பொறுத்து அதுக்கான உற்பத்தி டைம் இருக்கும். சாதாரண டிசைன்னா, அதிகபட்சம் நாலு மாசம் ஆகும். 3-D போன்ற அதிக வேலைப்பாடுகள் இருந்துச்சுன்னா அஞ்சு  மாசம் ஆகும். ஒரு பலூன் உருவாக்க 50-லிருந்து 60 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனா, 10 வருஷத்துக்கு நீடிச்சு உழைக்கும்."

Angry Bird

``உங்களின் வருங்காலத் திட்டம் என்ன?''

``ஏலகிரி, செங்கல்பட்டு. இந்த ரெண்டு இடத்துலயும் ஏர்போர்ட்போல நிரந்தர ஹாட் ஏர் பலூன் போர்ட் வைக்கிறதுக்கான ப்ளான் போயிட்டிருக்கு. பொள்ளாச்சியில வழக்கம்போல டூரிசம் நடைபெறும். தாஜ்மகால் டிசைன், 1,330 திருக்குறள் மற்றும் அதோட விளக்கம் எல்லாத்தையும் பிரின்ட் செஞ்சு பலூன்கள் பண்ணணும்னு ரொம்ப ஆசை. நிச்சயமா வருங்காலத்துல இதெல்லாம் எதிர்பார்க்கலாம். இதுபோல திருவிழா நடத்த அரசாங்கம் ஆதரவளிக்கிறது சந்தோஷமா இருக்கு."

Benedict Savio``இதுல என்னென்ன சவால்கள் இருக்கு?"

``விமான ஓட்டிகளைப்போல இதுக்கும் நல்ல பயிற்சிபெற்ற பைலட் வேணும். அப்புறம் டெம்பரேச்சர் செக் பண்றது ரொம்ப முக்கியம். சரியான காற்றளவு, வெப்பநிலைனு எல்லாத்தையும் பார்க்கணும். அப்படிப்பார்த்தா, அதுக்கான கரெக்ட் டெம்பரேச்சர் அதிகாலையிலதான் இருக்கும். சரியான நேரத்துக்கு எல்லாரும் வரணும். பைலட், டேக் ஆஃப், லேண்டிங்கைத்தான் கட்டுப்படுத்த முடியும். மற்றதெல்லாம் காத்தோட கையிலதான் இருக்கு.

அதேபோல பயணிகளோட உயரம் அந்த பேஸ்கட்டோட உயரத்துக்கும் அதிகமா இருக்கணும். ஒவ்வொரு தடவையும் இந்தத் திருவிழா போடுறதுக்கு பர்மிஷன் வாங்குறதுக்கே 10 நாள் ஆகும். முதல்ல இது என்ன திருவிழான்னு புரியவைக்கவே டைம் எடுக்கும். இப்படி ஏகப்பட்ட சவால்கள் இருக்கு. ஆனா, கூடவே சந்தோஷமும் நிறைய இருக்கு" என்று கூறிவிட்டு வெளிநாட்டுக்குப் பறந்தார் பெனிடிக்ட்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close