அழியும்நிலையில் 2000 ஆண்டு செம்மரங்கள்... க்ளோன் செய்து காப்பாற்றிய மனிதர்! | The man who saved 2000 years oldest redwood trees by cloning

வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (25/05/2018)

கடைசி தொடர்பு:20:57 (25/05/2018)

அழியும்நிலையில் 2000 ஆண்டு செம்மரங்கள்... க்ளோன் செய்து காப்பாற்றிய மனிதர்!

சுமார் 350 அடி உயரமாகவும், 30 அடி அகலமாகவும் வளரக்கூடிய இந்த வகை மரங்கள் 2000 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. சில மரங்களுக்கு 4000 ஆண்டுகள் வரலாறும் உண்டு.

அழியும்நிலையில் 2000 ஆண்டு செம்மரங்கள்... க்ளோன் செய்து காப்பாற்றிய மனிதர்!

டேவிட் மிலர்ச் (David Milarch), அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர். சொல்லில் ஈர்க்கும் வித்தை தெரிந்தவர். அனைவரிடமும் அன்பைப் பொழியும் குணம்கொண்டவர். சிறுநீரகச் செயலிழப்பால் மரணத்தைக் கண்டு மருத்துவர்களின் விடாமுயற்சியின் பலனாக மீண்டுவந்தவர். அவர், தனது மறுபிறவியைச் சிரமமின்றிக் கழிக்க கலிஃபோர்னியக் கடற்கரைப் பகுதியைப் பரிந்துரைத்த மருத்துவர்களின் பேச்சை மதித்து மனிதர் அங்கே சென்று வாழத்தொடங்கினார்.

டேவிட் மிலர்ச்

அவர் அங்கு வாழச்செல்லும்போது தெரியாது; அவரோடு மற்றுமொரு மிகப் பழமையான உயிரினத்தின் மறுவாழ்விற்கும் அவரே காரணமாக அமையப்போகிறார் என்பது.

செம்மரங்கள் ( Redwood). மிகவும் பழமையான, பயனுள்ள, அதி அற்புதமான மர வகை. சுமார் 350 அடி உயரமாகவும், 30 அடி அகலமாகவும் வளரக்கூடிய இந்த வகை மரங்கள், 2000 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. சில மரங்களுக்கு 4000 ஆண்டுகள் வரலாறும் உண்டு. ரோம சாம்ராஜ்ஜிய மன்னர்கள், காடுகளுக்குள் வசந்த காலங்களில் தங்கள் மனைவிமார்களோடும் காதலிகளோடும் கட்டித்தழுவி காதல் காவியங்கள் நிகழ்த்திய சமயங்களில், அவர்களுக்கு நிழல் தந்து நின்றுகொண்டிருந்த மரங்கள், தற்போதும் நிழல் தந்து கொண்டிருக்கின்றன.

செம்மரங்கள்

பல்லாயிரம் ஆண்டுக்கால வரலாறுகளைத் தன்னுள்ளே அசைபோட்டுக்கொண்டிருக்கும் இந்தச் செம்மரங்கள், உலகின் மிக உயரமான மரங்களும்கூட. வளிமண்டலக் கரிம வாயுவைத் தன்வயம் ஈர்த்துக் கொள்வதில் ஆகச் சிறந்த செயல்பாடுகளைக்கொண்டவை. ஒரு செம்மரம், அதன் உடல் பகுதியிலும் வேர்களிலும் கிட்டத்தட்ட ஒரு டன் அளவு கரிம வாயுவைச் சேகரித்துக்கொள்ளும் திறன் கொண்டவை.

Deforestation

Photo Courtesy: A.W. Ericson Collection

கலிஃபோர்னியாவில் தனது வாழ்க்கையைப் புனரமைக்கத் தொடங்கிய டேவிட், பகல் பொழுதுகளில் அவர் வாழ்ந்த கிராமங்களுக்கு அருகில் இருக்கும் காட்டிற்குள் சென்று வருவார். அவரது மகன்கள் இருவரும் மிச்சிகன் மாகாணத்தில் கோபெமிஷ் ( Copemish) என்ற கிராமத்தில் 1990-களில் இருந்தே மரங்கள் மற்றும் தாவர வகைகளைப் பாதுகாக்க நர்சரி நடத்திவருவதோடு, அவற்றைப் பற்றிய ஆய்வுகளையும் செய்கிறார்கள். மகன்களின்மூலம் ஓரளவிற்கு இயற்கையின் மீதான ஈர்ப்பைப் பெற்றுவிட்ட டேவிட், கிராமத்திற்கு அருகிலிருந்த செம்மரக் காட்டிற்குள் உலவச் செல்வதை மிகவும் விரும்பினார்.

Redwood

Photo Courtesy: A.W. Ericson Collection

அந்தக் கிராமவாசிகளின் மூலமாக தற்போது சில நூறு ஏக்கர்களில் இருக்கும் செம்மரக் காடுகள், முன்னர் பல மில்லியன் ஏக்கர்களில் இருந்ததைப் பற்றித் தெரிந்துகொண்ட டேவிட், அவற்றின் வரலாற்றைத் தேடிப் போகத்தொடங்கினார். 19-ம் நூற்றாண்டின் இறுதி வரையிலுமே கலிஃபோர்னியக் கடலோரக் கிராமங்களில் மட்டும் சுமார் 2 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் இருந்த செம்மரக் காடுகளில் தற்போது இருப்பது வெறும் 5 சதவிகிதம் மட்டுமே. 95 சதவிகித செம்மரங்களை மொத்தமாக இழந்து நிற்கும் அந்நிலத்தின் வேதனையை ஆத்மார்த்தமாக உணர்ந்த டேவிட், அதைத் தாளமுடியாமல்

"என் முன்னோர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவும், அவர்களின் வரலாறுகளைக் கிரகித்துக்கொண்டும் இன்றுவரை வாழ்ந்துவந்த நீங்கள் என் காலத்திலா அழிவைச் சந்திக்க வேண்டும்..."

என்றபடி மரத்தைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கிவிட்டார்.

க்ளோனிங்

Photo Courtesy: Nat Geo

பல்லாண்டு காலம் பழமை வாய்ந்த அந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தனது கதறலுக்கு இடையே முடிவுசெய்தார் டேவிட். உடனடியாகத் தன் மகன்களை வரவழைத்தார். அவர்களிடம் விவரத்தைக் கூறி உதவி கேட்டார். டேவிட் மில்லர்ச்சின் மகன்கள் ஜேரெட் மிலர்ச் (Jagred Milarch) மற்றும் ஜேக் மிலர்ச் (Jake Milarch) இருவரும் ஆய்வில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ந்த செம்மரங்களைத் தவிர்த்து புதியதாக செம்மரங்களின் வளர்ச்சி குறிப்பிடக்கூடிய அளவில் இல்லை. அதற்குக் காரணம், பருவநிலை மாற்றமும் வெப்பமயமாதலும்தான். செம்மரத்துக்குத் தேவையான தட்பவெப்பநிலையில் அவை மாற்றங்களைச் செய்துவிட்டன. விலங்குகள்,வாழத் தகுதியான நில அமைப்பு இல்லாமல்போனால், மேலும் வடக்கு நோக்கிப் பயணம்செய்து, தனக்கான வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன. ஆனால், மரங்கள்?

செம்மரக் கன்றுகள்

Photo Courtesy: Nat Geo

இவை அப்படியொரு சூழ்நிலையில்தான் இருக்கின்றன. தற்போது வளரும் செம்மரங்கள் அனைத்திலும் பழையனவற்றின் டி.என்.              ஏ-க்களில் ( DNA) 50 சதவிகிதம் மட்டுமே ஒத்துப்போகின்றன. அவை, காலப்போக்கில் குறைவான வளர்ச்சி மற்றும் குறைந்த கரிமத் தன்மயமாக்கும் திறனுடனே உற்பத்தியாகத் தொடங்கிவிட்டன. ஆகவே, விதைகளைப் பரப்புவதன்மூலம் பழைய வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது. இதற்கு ஒரே வழி, க்ளோனிங் தான்.

செம்மரங்களைக் க்ளோனிங் செய்யத் தொடங்கினார்கள் மில்லர்ச் சகோதரர்கள். அதாவது, நன்கு வளர்ந்த பல ஆயிரம் ஆண்டுகள் வயதான செம்மரங்களின் பட்டைகளையும் இலைகளையும் அகலமான அடித்தண்டுகளின் பாகங்களையும் சேகரித்து, அதிலிருந்து அவற்றின் டி.என்.ஏ-வை சேகரிக்கத் தொடங்கினர். அதன்மூலம், அதே அளவு திறன்கொண்ட மரபணுக்களைக்கொண்ட செம்மரக் கன்றுகள் உருவாக்கப்பட்டன. முதலில் நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகளை  கலிபோர்னியா முழுவதும் நட்டுப் பராமரிக்கத் தொடங்கினார் டேவிட்.

தற்போது ஆயிரக்கணக்கில் அவற்றை உருவாக்கி, பல்வேறு பகுதிகளில் குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் மூலமாக செம்மரக் கன்றுகள் நடப்படுகின்றன. வரலாறு மீண்டும் திரும்புகிறது.

Planting

"நாம்தான் அவர்களைக் கொன்றோம். காட்டிற்குள் நடந்து செல்லும்போது அவர்களை நோக்கி கத்திக் கொண்டிருக்கிறேன். அவர்களை கெட்டியாகப் பிடித்து தைரியப்படுத்திக்கொண்டிருக்கிறேன். உங்களைக் காப்பாற்றியே தீருவேன் என்று அவர்களிடம் உரக்க உரைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த நிலத்தில் வெட்டப்பட்ட கடைசி மரம் வரை அனைத்தையும் மீட்டுக்கொண்டு வரும்வரை எனது முயற்சிகள் ஓயாது."

- டேவிட் மிலர்ச்
 

புவி வெப்பமடைவதும் பருவநிலை மாற்றங்களும், தொழிற்சாலைகளின் கழுகுக் கண்களும் செம்மரங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆம், அவற்றின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இல்லை. ஆனால், டேவிட் இருக்கிறார்.
 


டிரெண்டிங் @ விகடன்