சாலை குழியில் கடல் கன்னி... சமூகப் பிரச்னைக்குத் தீர்வு...பெங்களூருவைக் கலக்கும் ஓவியர் | Bengaluru Artist baadal trying to resolve social issues by Street art

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (27/05/2018)

கடைசி தொடர்பு:13:16 (28/05/2018)

சாலை குழியில் கடல் கன்னி... சமூகப் பிரச்னைக்குத் தீர்வு...பெங்களூருவைக் கலக்கும் ஓவியர்

சாலை குழியில் கடல் கன்னி... சமூகப் பிரச்னைக்குத் தீர்வு...பெங்களூருவைக் கலக்கும் ஓவியர்

இன்று பல சமூக பிரச்னைகள் மக்கள் போராட்டமாக மாறி வீதிக்கு வருவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மனிதர் வீதிகளில் உள்ள சமூகப் பிரச்னைக்கு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூரு வீதிகளின் பிரச்னையை வண்ணங்கள் கொண்டு அழித்துக்கொண்டிருக்கிறார். ஆம், பெங்களூருவின் சாலைகளை சமூக விழிப்பு உணர்வு ஓவியங்களால் நிரப்பும் பாதல் நஞ்சுண்டசாமிதான் அந்த மாற்றத்துக்கான நபர்.

ஓவியம்

picture: https://twitter.com/baadalvirus

``ஓர் ஓவியம்... இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு'' - இதெல்லாம் நம்பவா முடிகிறது. இது சாத்தியம்தான் பெங்களூரு சாலையில் நீண்ட நாள்களாக மூடப்படாமல் கொசுக்களை பரப்பிக்கொண்டிருந்த பாதாள சாக்கடை ஒன்று திறந்தவாறே இருந்தது. அது நஞ்சுண்டசாமியின் கண்ணில் பட்டது. அடுத்த கனமே அங்கு ஒரு மிகப்பெரிய மெகா சைஸ் கொசு ஓவியம் வரைந்து முடித்தார். கொசுவின் வாயாக பாதள சாக்கடையை வடிவமைத்தார். ஓவியம் அழிவதற்குள் பெங்களூரு மாநகராட்சி சாக்கடையை மூடியது. இந்த கவன ஈர்ப்புதான் இவரின் சாதனை.

இவர் மட்டுமல்ல..`நம்ம பெங்களூரு’ என்று ஒரு குழுவாக ஓவியர்கள் தங்கள் சமூக கோபத்தைத் தீர்வாக மாற்றி வருகிறார்கள். இவர்களின் கவன ஈர்ப்பு உத்தி எல்லாரையும் வியக்க வைக்கிறது. இதில் வியக்க வைத்தவர் ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி. பெங்களூருவில் இவரை தெரியாத சமூக அக்கறை கொண்ட இதயங்கள் குறைவு. காணும் இடத்தில் ஒரு பிரச்னை என்றால் இவரது தூரிகை சரி செய்ய ஆயத்தமாகிவிடும். 

ஓவியம்

2015-ம் வருடம், நம் ஊரில் இருப்பதைப்போலவே, பெங்களூருவின் பிரதான சாலைகளில் ஒன்றான சுல்தான் பாளையாவில்  அப்போது பெய்த கனமழை காரணமாக, 15 அடி அளவில் பெரிய பள்ளம் தோன்றியது. அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. இதுதொடர்பாக அந்த நகரைச் சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் கண்ட பாதல், அந்தப் பள்ளத்தின் மீது ஃபைபரில் செய்யப்பட்ட முதலையைக் கொண்டு 3D ஓவியத்தைச் செய்திருந்தார். அந்த முதலை நிஜ முதலை போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. சாலையைக் கடந்து சென்ற பெரும்பாலானோர் அதை உண்மையான முதலை என்றே நினைத்தனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட‌து. பலர் அதைப் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு காரசாரமான விமர்சனங்களைத் தெரிவித்தனர். அந்தப் புகைப்படம், காட்டுத் தீயாக பரவ, அடுத்தநாளே சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பள்ளத்தை சரிசெய்தனர். பாதல் வரைந்த முதலை, முதல்வர் வரை பாய்ந்ததுதான் இதன் வெற்றி!

கடந்த அக்டோபர் மாதம்  பெங்களூரு காமராஜ் சாலை – கப்பன் சாலை சந்திப்பில் உள்ள குழியில் ஒரு கடல் கன்னியையே உருவாக்கினார் பாதல் நஞ்சுண்டசாமி. அந்த கடல் கன்னி வேறு யாருமல்ல, கன்னட நடிகை சோனு கௌடாதான்.சாலை குழியை கடல்போல் வடிவமைத்து, அதில் சோனு கௌடாவை பச்சை நிற உடையுடன் கடல் கன்னிபோல் இறக்கினார். இதுவும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பாதல் பெங்களூருவின் ரியல் ஹீரோவானார். தனக்குத் தெரிந்த கலையை மக்களின் பிரச்னைக்கான தீர்வாக மாற்றிய பாதல் நஞ்சுண்டசாமியுடன் பேசினோம். 

ஓவியம்

``பெங்களூருதான் என் சொந்த ஊர். சமரராஜேந்திரா கல்லூரியில் ஓவியக்கலை பயின்றேன். படிப்புக்குப் பிறகு ஒக்லிவி & மாதர் எனும் விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஓவியங்கள் வரைவது பிடித்தமான விஷயம். இந்தக் கலையை வெறும் பணம் சம்பாதிக்கும் கலையாகப் பார்க்கவிரும்பவில்லை. சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகான, என் ஓவியங்களால் முடியும் என்று நம்பினேன். இன்று ஓரளவுக்கு அதனை நோக்கி ஓடுகிறேன். 

ஓவியம்என் ஓவியங்கள் மக்கள் பிரச்னைகள், உரிமைக்கான குரல், மக்களின் மனநிலை என அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதைத்தான் என் ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன. என்னுடய ஓவியங்கள் சாக்கடையை மூடாமல் இருப்பது போன்ற ஒரு குறிப்பிட்ட தெருவின் பிரச்னைகளை  மட்டும் பேசாமல், நிகழுலகில் நாட்டில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளையும் (current affairs) பேச வேண்டும் என்பது என் ஆசை.

இந்த எண்ணம் எனக்கு இன்று தொடங்கியது அல்ல. கல்லூரி காலத்திலிருந்தே என் கனவு இதுதான். நான் சந்திக்கும் மனிதர்கள்தான் இதற்கான இன்ஸ்பிரேஷன். கன்னடத் திரைப்படங்கள் சிலவற்றில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறேன். என்னால் முடிந்த உதவியை இந்த சமூகத்துக்கு என் கலை மூலம் சொல்ல வேண்டும் என்பது தான் என் லட்சியம்.’’ 

பாதல் நஞ்சுண்டசாமி எதார்த்தமாய் பேசுகிறார். அவர் ஓவியங்கள் அரசு இயந்திரத்தைச் செயல்பட வைக்கிறது. எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக்கொண்டு நகரும் அவர் அடைத்தது சாக்கடை ஓட்டைகளை மட்டுமல்ல சமூக ஓட்டைகளையும் தான். சபாஷ் பாதல்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close